― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்தெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்... எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி!

தெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி!

- Advertisement -

Raji Ragunathan Sanmanam ‘நிரந்தரம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்’ டாக்டர் முக்தேவி பாரதி – ராஜி ரகுநாதன்

டாக்டர் முக்தேவி பாரதி ஓர் அறிமுகம் :-

தெலுங்கு இலக்கியத்தில் 1960 முதல் இன்று வரை நிரந்தரம் இலக்கிய சேவையில் ஈடுபட்டு வரும் தெலுங்கின் மூத்த பெண் எழுத்தாளர் டாக்டர் முக்தேவி பாரதி அவர்கள். சிறந்த மொழியியல் அறிஞரான இவர் தெலுங்கு இலக்கியத்துக்கு ஆற்றி வரும் உழைப்பு அசாதாரணமானது.

திருமதி முக்தேவி பாரதி பழகுவதற்கு இனியவர். பாசாங்கு இல்லாத எளிமையானவர். அறிவு தீட்சன்யத்தோடு கூடிய முகம். எந்த ஒரு வேலையிலும் காட்டும் ஒழுங்குமுறை. மொத்தத்தில் அறிவும் திறமையும் ஒன்று சேர்ந்த உருவம் முக்தேவி பாரதி அவர்கள்.

முற்கால, தற்கால இலக்கியங்களின் மேல் தீராத அன்பு கொண்ட முக்தேவி வாசகர்களுக்கு அளிக்கும் படைப்புகளைப் பார்க்கையில் இவர் அன்றைக்கும் இன்றைக்குமான பாலமாகத் திகழ்கிறார் என்றே கூற வேண்டும்.

இலக்கிய உலகில் தற்போது காணப்படும் பெண்ணீயம், தலித் படைப்புகள் இடது சாரி இலக்கியம் வலது சாரி இலக்கியம் போன்ற அனைத்து வாதங்கள், இயங்கள், பிரிவுகள் பற்றி அறிந்திருந்தாலும் அவை எதிலும் சேராமல் மனிதாபிமானத்தோடு கூடிய படைப்புகளே தன்னுடையவை என்ற அவர் கூற்று, அவருடைய சிறு கதைகள், நாவல்கள், கவிதை கட்டுரை நூல்கள், பத்திகள், விமரிசனக் கட்டுரைகள் போன்ற அனைத்திலும் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. எத்தகைய படைப்பாயினும் தனக்கான முத்திரையோடு வாசகர்களை சென்றடைவது அவருடைய தனித்திறமை.

முக்தேவி பாரதி 1941 ஜூன் 10ம் தேதி ஆந்திர பிரதேஷ் கிருஷ்ணா ஜில்லாவில் ‘பெடன’ என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை ‘வெலுவலி சங்கரம்’, பந்தர் ஹிந்து கல்லூரியில் லாஜிக் விரிவுரையாளராக பணிபுரிந்தார். தாயார் அரவிந்தம் இல்லத்தரசியாகத் திகழ்ந்தார்.

எம். ஏ., வரலாறு, எம். ஏ.தெலுங்கு, தஞ்சாவூர் நாயக அரசு காலத்தில் வாழ்ந்த பெண் கவிஞர் ரங்காஜம்மா பற்றி ஆராய்ந்து உஸ்மானியா பல்கலைக் கழகத்திலிருந்து எம் லிட்., மேலும் மொழியியலில் பி.ஜி.டிப்ளமா, எழுத்தாளரும் அறிஞருமான சிலகமர்த்தி லட்சுமி நரசிம்மம் அவர்களின் படைப்புகள் பற்றி ஆராய்ச்சி செய்து பிஹெச்டி முனைவர் பட்டம் – போன்ற பட்டங்களை பெற்று பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

ஹைதராபாதில் ராஜாபஹதூர் வேங்கடராமரெட்டி மஹிளா கல்லூரி தெலுங்கு துறையில் அசோசியேட் ப்ரொபெசர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்று பின் சரோஜினி நாயுடு மஹிளா கலாசாலையில் பிரின்சிபல் ஆக பணியாற்றினார்.

இவர் கணவர் முக்தேவி லக்ஷ்மணராவ் வழக்கறிஞராக பணியாற்றினாலும் இலக்கிய ஆர்வம் கொண்டவர். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் இலக்கிய பிரியர்களாகவும் படைப்பாளிகளாகவும் விளங்குவது அரிது. இருவரும் சேர்ந்து மகாபாரதத்தில் பிரேம கதைகள் என்ற தொடரை எழுதி வெளியிட்டார்கள்.

சுதந்திர போராட்ட வீரர் கமலாபுரம் கேசவராவ் பற்றி முக்தேவி பாரதி எழுதிய படைப்பு தூரதர்ஷனில் டெலி பிலிம் ஆக வெளி வந்தது. இவர் பிலிம் சென்சார் போர்டின் ஆலோசகராக இருந்துள்ளார். நந்தி விருது அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

1960ல் இவருடைய முதல் சிறுகதை ‘தங்கையின் திருமணம்’ பந்தரிலிருந்து வெளிவரும் ‘தெலுகு வித்யார்த்தி’ பத்திரிகையில் அச்சானது. மகாபாரதத்தில் பிரேம கதைகள், மகாபாரதத்தில் நீதிக் கதைகள், வேலியே பயிரை மேய்ந்தால், முக்தேவி பாரதி சிறு கதைகள் இரு பாகங்கள், தர்ம மணி ஒலிக்குமா? கதைகள், பிரபந்தத்தில் பக்தி கதைகள், பக்தி தரங்கம் என்ற பத்து சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

பத்து சமூக நாவல்கள், பத்திற்கும் மேற்பட்ட புராண நாவல்கள் எழுதியுள்ளார்.

வாழ்க்கை கற்றுத் தந்த நியாயம், மீண்டும் வந்த புது வசந்தம், மமதா, பிரகதி, மூன்றாம் தலைமுறை, சிகரம், ப்ரக்ஷாளனம், அருணோதயம், யசஸ்வினி, அனுபந்தத்திற்கு எல்லைகள் முதலிய சமூக நாவல்கள் பல்வேறு பத்திரிகைகளில் தொடராக வெளி வந்து பின் நூலாக பிரசுரமாயின. இது தவிர ‘சிகரம்’ என்ற நாவல் சாஹிதீ கிரணம் என்ற பத்திரிகையில் தொடராக வெளி வந்தது.

இந்த நாவல்களில் பெண் கதா பாத்திரங்களை சிறந்த காரெக்டர்களாகவும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளுபவர்களாகவும் சித்தரித்துள்ளார். பெண் கதாபாத்திரங்களை பலகீனமானவர்களாகவோ, அபலைகளாகவோ அழுமூஞ்சிகளாகவோ படைக்கவில்லை. இந்த நாவல்கள் அனைத்தும் வாசகர்களின் பேராதரவைப் பெற்றன.

முக்தேவி பாரதிக்கு புராதன இலக்கியங்களின் மேல் மிகுந்த பிடிப்பு உண்டு. பிரபந்தங்களை அழகிய நாவல்களாக வடிப்பதில் தனித் திறன் மிக்கவர். இன்றைய இளைய தலைமுறை பிரபந்தங்களை படித்துப் புரிந்து கொண்டு ரசிப்பது என்பது நினைத்துப் பார்க்க இயலாத விஷயம்.

தேர்வுக்காக மட்டுமே இலக்கியம் படித்தால் இலக்கிய ரசனையை உணர இயலாது. அது மட்டுமின்றி முற்கால கவிஞர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் ஏதும் அறியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தமும் இவருக்குண்டு. அதனால் தெலுங்கு பிரபந்தங்களை நாவல்களாக வாசகர்களுக்கு அளிக்கும் முயற்சியை மேற்கொண்டார்.

அல்லாசானி பெத்தன்னா எழுதிய மனு சரித்திரத்தை ‘காந்தர்வம்’ என்ற நாவலாக எழுதி வெளியிட்டார். தூர்ஜடியின் படைப்புகளான ஸ்ரீ காளஹஸ்தி சதகம், காளஹஸ்தீஸ்வர மாஹாத்மியம் இரண்டினையும் ‘தக்ஷிண காசீ’ என்றும், சேமுகூரி வேங்கடகவி எழுதிய விஜய விலாசத்தை ‘ ஜைத்ர யாத்திரை’ என்றும், ராம ராஜ பூஷணர் எழுதிய வசு சரித்திரத்தை ‘வசு ராஜீயம்’ என்றும், பால்குரிகி சோமநாதர் எழுதிய பசவ புராணத்தை ‘பசவேஸ்வருடு’ என்றும், தெனாலி ராமகிருஷ்ணர் எழுதிய பாண்டுரங்க மாஹாத்மியத்தை ‘பாண்டு ரங்க லீலலு’ என்றும், ஸ்ரீநாதர் எழுதிய காசீ கண்டத்தை ‘ஆனந்த கானனம்’ என்றும், நாவல்களாக எழுதியுள்ளார். மேலும் மகாபாரதத்தில் யயாதி, சர்மிஷ்டை, கசன், தேவயானி என்ற பாத்திரங்களைக் கொண்டு ‘சதுரஸ்த்ரம்’ என்ற நாவலை எழுதியுள்ளார்.

இன்னும் பல விசேஷமான நாவலகள் பல பத்திரிகைகளில் தொடராக வெளிவந்துள்ளன. நாவல்கள் படிப்போரைக் கவர்ந்தன என்றும் அவ்விதமாகவேனும் பழங்கால இலக்கிய பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டிய விருப்பமும் கடமையும் தனக்குள்ளது என்றும் முக்தேவி பாரதி கருதுகிறார்.

பெண் கவிஞரான தரிகொண்ட வேங்கமாம்பா வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார். அதனை எம். எஸ். கோ. பதிப்பகத்தார் நூலாக வெளியிட்டனர். பின்னர் தொரசாமி ராஜு என்ற தயாரிப்பாளார் அதனை திரைப்படமாக எடுத்தார்.

ருஷீபீடம் மாத பத்திரிகையில் ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வந்த ‘பக்தி தரங்காலு’ என்ற தொடரில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட பக்தர்களின் கதைகளை வெளியிட்டார்.

தரிகொண்ட வேங்கமாம்பாவின் ஸ்ரீ வெங்கடாசல மாகாத்மியம் என்ற காவியத்தை ‘கோனேடிராயுடு’ என்ற பெயரில் புராண நாவலாக எழுதியுள்ளார். இது ருஷீபீடம் மாத இதழில் தற்சமயம் தொடர்ந்து பிரசுரமாகிறது.

நதி பத்திரிகையில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ‘ஆ பாத்ர மதுரம்’ என்ற தொடரை எழுதினார். பல சிறந்த தெலுங்கு எழுத்தாளர்களுடைய நாவல்களின் தலை சிறந்த கதா பாத்திரங்கள் நாற்பதை தேர்ந்தெடுத்து அதில் ஆராய்ந்துள்ளார். விசாலாந்திரா பதிப்பகம் இதனை இந்த நூலாக வெளியிட்டது.

அது மட்டுமல்ல. பன்முகப்பட்ட இலக்கிய படைப்பு நுண்மை கொண்ட எழுத்தாளராகவும் உத்தம ஆசிரியராகவும் விளங்கிய அனுபவம் கொண்ட முக்தேவி பராதி அவர்களின் தனித் திறமையால் வெளிவந்த படைப்பு ‘தெலுகு ஸாஹிதீ சைதன்ய மூர்த்தலு ‘ என்ற நூல். ‘சின்னைய சூரி’ முதல் ‘ஆருத்ரா’ வரை நாற்பது நவீன கவிஞர்கள் மற்றும் எழுத்தார்களின் வாழ்க்கை பற்றியும் படைப்புகள் பற்றியும் எழுதிய புத்தகம் இது. தெலுகு அகாடமி அவரிடம் எழுதச் சொல்லி கேட்டு வாங்கி வெளியிட்டுள்ளது. இந்நூல் போட்டி பரிட்சைகளுக்கு பயன்படுவதோடு இலக்கிய பிரியர்களுக்கு விருந்தாகவும் விளங்குகிறது.

முக்தேவி பாரதியின் இலக்கிய படைப்புகளில் இன்னுமொரு சிறப்பு ‘காலம்ஸ்’ எழுதுவது. ஆந்திர பிரபாவில் ‘பாவலஹரி’, ஆந்திர பூமியில் ‘மேலு கொலுபு’, மற்றும் ‘மஞ்சி மாட்ட’, வார்த்தா பத்திரிகையில் ‘சம்வீக்ஷணம்’, நேட்டி நிஜம் பத்திரிகையில் ‘உதய ராகம்’ போன்ற பத்திகளை பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதி வந்தார். மேலும் சாகித்ய வீதி, கதம்பம், நம் சாகித்யம் முதலான தொடர்களையும் எழுதியுள்ளார். சமுதாய மாற்றங்கள் மனிதனை, இளைஞனை, கல்விக் கூடங்களை, பெண்களை எவ்விதங்களில் பாதிக்கிறது என்பது பற்றி தன் காலம்ஸ் களில் சுவைபட இன்றும் எழுதி வருகிறார்.

முக்தேவி பாரதி அவர்களின் இலக்கிய சேவையில் மற்றுமொரு மைல் கல் மோனோக்ராப் எழுதுவது. மத்திய சாகித்ய அகாடமி யிலிருந்து ‘இல்லந்தல சரஸ்வதி தேவி’ மோனோகிராப், சி. பி. ப்ரௌன் அகாடமியிலிருந்து ‘சிலகமர்த்தி’ வாழ்க்கை -படைப்பு, வம்சீ அமைப்பிலிருந்து ‘களாப்ர பூர்ண ஊடுகூரி லக்ஷ்மீகாந்தமா’, யல்லாப்பிரகட அசோக வர்தனிலிருந்து ‘யல்லா ப்ரகட சீதா தேவி’ ஜீவிதம் – படைப்புகள், அமெரிக்கா யாத்திரை அனுபவம் (2014) இவ்வாறு இவர் எழுதிய தலை சிறந்த எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் பிரசுரிக்கப்பட்டு பிறருக்கு ஆதர்சமாக விளங்குகின்றன.

ஒரு கவிதைத் தொகுப்பு, பத்து மோனோக்ராம்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், இவற்றைத் தவிர பல பத்திரிகைகளில் பத்திகள், தொடர்கள், இலக்கிய சதஸுகளில் சொற்பொழிவுகள், பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பாட புத்தகங்கள் தயாரித்து அளித்தல், எம் பில்., பி.ஹெச்.டி., மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குதல் என்று தற்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் முக்தேவி பாரதி அவர்கள்.

நான்காவது தெலுங்கு உலக மகா சபை 2012ல் திருப்பதியில் நிகழ்ந்த போது ‘சமூக சேவையில் பெண்கள்’ என்று இருபத்தைந்து பெண்கள் பற்றி இவர் எழுதிய நூலை தெலுகு அகாடமி வெளியிட்டது. மகளிர் சக்தி எத்துணை சிறந்தது என்று இந்நூலின் பெண்கள் நிரூபித்துள்ளார்கள். ‘சங்கெம் லக்ஷ்மீ பாயம்மா’, ‘சரஸ்வதீ கோரா’, ‘ஹேமலதா லவணம்’, ‘ஐலம்மா’, ‘டொக்கா சீதம்மா’, ‘ஈஸ்வரீ பாய்’, ‘ஊட்டுகூரி லட்சுமீ காந்தம்மா’, ‘துர்கா பாய் தேஷ்முக்’ போன்ற பெண்களின் சமுதாயத் தொண்டினையும் அயராத உழைப்பினையும் இந்நூல் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இவருடைய பல கதைகளும் நாவல்களும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களாக விளங்குகின்றன. இவற்றைத் தவிர சதகம் -சமாஜம் என்ற தொடரை தெலுகு வித்யார்த்தி இதழில் இக்கால இளைஞர்களுக்காக எழுதி உள்ளார். பல பத்திரிகைகளில் தொடராக வெளி வந்து, பின் புத்தக வடிவம் பெற்ற இவருடைய பல நூல்கள் வாசகர்களின் பாராட்டைப் பெற்றதோடு ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மகாபாரதத்தில் பிரேம கதைகளை சிறந்த மொழிபெயர்ப்பாளரும் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்றவருமான சாந்த சுந்தரி ஹிந்தியில் மொழிபெயர்த்துளளார். ‘Silent heaven and other stories’ என்ற பெயரில் நிசப்த சுவர்க்கம் முதலான சில கதைகளை சுவாதி ஸ்ரீ பாதா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் சில கதைகளை வித்யா முக்தால் என்பவர் மராத்தியில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய சில சிறுகதைகளை ராஜி ரகுநாதன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவை தமிழ் இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

எத்தனையோ உயர்ந்த விருதுகள் முக்தேவி பாரதி அவர்களை வந்தடைந்து பெருமை பெற்றுள்ளன. இவருடைய இடைவிடாத இலக்கிய சேவைக்கு கிடைத்த அடையாளங்கள் இவை.

முக்தேவி பாரதி ஆந்திர பிரதேஷ் அரசிடமிருந்து உத்தம ஆசிரியர் விருது 1991ல் பெற்றுள்ளார். மதராஸ் கேசரி குடீரம் க்ருஹ லட்சுமி சுவர்ண கங்கணம் 1996ல், மதராஸ் தெலுகு அகாடமி உகாதி புரஸ்காரம் 1998, பொட்டி ஸ்ரீ ராமுலு தெலுங்கு பல்கலைக் கழகம்1998ல் தர்ம நிதி விருதும், 2000ல் உத்தம எழுத்தாளர் விருதும், மகாகவி குர்ரம் ஜாஷுவா 117வது ஜெயந்தி விருதும் தெலுங்கு அகாடமியிடமிருந்து 2012ல், உலக மகளிர் தின விருது ஆந்திர பிரதேஷ் அரசிடமிருந்து 2011ல், குராஜாட 150வது ஜெயந்தி புரஸ்காரம் 2012ல், சனாதன சாரிடபுள் டிரஸ்ட் கந்துகூரி சிவானந்த மூர்த்தி இடமிருந்து பிரதிபா புரஸ்கார் 2012ல், சுசீலா நாராயண ரெட்டி சாகித்ய புரஸ்காரம் 2014ல், அமெரிக்கா ஹூஸ்டன் வங்கூரி பவுண்டேஷன் வாழ்நாள் சாதனையாளர் விருது 2014ல், மன்மத உகாதி விருது ஆந்திர பிரதேஷ் முதலமைச்சர் ஸ்ரீ நாரா சந்திரபாபு நாயுடுவிடம் இருந்து 2015ல், அனைத்திந்திய மகளிர் தின விருது 2016……இன்னும் இதுபோல் 35க்கும் மேற்பட்ட சிறந்த விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

தற்சமயம் இவர் தெலுகு ஒன்.காம் யூட்யூபிற்காக பழங்கதைகளை தொடர்ந்து கூறி வருகிறார்.

“இலக்கியத்தின் அனைத்து வித சாத்தியங்களையும் செய்துள்ள போதும் சிறுகதைகள் மேல் எனக்கு தனி அபிமானம் உள்ளது” என்கிறார் முக்தேவி பாரதி. மனித வாழ்வினை பல்வேறு கோணங்களில் பரிசீலித்து மானசீக இயல்பின் ஆழத்தை அலசிப் பார்த்து இவர் படைக்கும் சிறுகதைகள் இலக்கிய உலகை செழிப்பாக்குகின்றன.

சமூக சேவை அமைப்புகளோடு சேர்ந்து பல தொண்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். ‘மானஸா’ என்ற மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியின் கமிட்டியில் வைஸ் பிரசிடென்ட்டாக உள்ளார். ரெட் கிராஸ் அமைப்பிலும் தியாகராய கான சபையிலும், தெலங்காணா யுவதி மண்டலியிலும் ஆயுள் மெம்பராக உள்ளார். தன் மதிப்பு மிக்க நேரத்தையும் செல்வத்தையும் அளித்து ஊனமுற்றோருக்கு உதவுகிறார்.

சமூக சேவை, இயக்கியச் சேவை இரண்டிற்கும் தன் பொன்னான நேரத்தை நன் முறையில் செலவழித்து வரும் பன்முக திறமைசாலி, பேராசிரியர், அறிஞர், எழுத்தாளர் டாக்டர் முக்தேவி பாரதி அவர்களை வணங்கி பாராட்டுவோம்.

டாக்டர் முக்தேவி பாரதி அவர்கள் இலக்கிய வாழ்வில் சோர்வறியாத பயணி என்று கூறுவது மிகையில்லை. இவருடைய சாதனைகளும் பெருமைகளும் என்னும் எத்தனையோ உள்ளன. மிகக் குறைவாகவே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

அறிமுகம் இத்துடன் நிறைவுற்றது. சமீபத்தில் அவருடைய இல்லத்திற்குச் சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் கண்ட நேர்காணலை 32 பக்கங்களுக்கு தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்:-

நான் தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த இவருடைய பல கதைகள் தமிழ் இதழ்கள் பலவற்றில் வெளிவந்துள்ளன. நான் மொழிபெயர்த்த அவருடைய ‘மேடம் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவை நவம்பர் 2018 ல் டாக்டர் முக்தேவி பாரதி மிகச் சிறப்பாக ஹைதராபாத் தியாகராஜ கான சபையில் ஏற்பாடு செய்து என்னை கௌரவித்தார். அதே சபையில் அவருக்கு “தாளபாக்க திம்மக்கா இலக்கிய விருது” வழங்கி கௌரவித்தார்கள். மேலும் அவருடைய இரு நூல்கள் அன்று வெளியிடப்பட்டன.

என் மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றி தெலுங்கில் உரையாற்றும்படி என்னை அழைத்தார்கள். மேடம் கதைகள் என்ற நூல் ‘மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது’ என்பது போல் புத்தகம் சிறியதானாலும அதன் மதிப்பும் சாராம்சமும் மிக உயர்ந்தது. ஆசிரியைக்கும் மாணவிகளுக்கும் இடையே உள்ள அனுபந்தம் பற்றி பேசுகிறது இந்நூல். முக்தேவி பாரதி அவர்கள் அளித்த உற்சாகத்தால் அன்றைக்கு நன்கு பேசியதை நினைத்து இன்றும் மகிழ்கிறேன். மறுநாள் அனைத்து தெலுங்கு செய்தித்தாள்களிலும் இந்த விழா பற்றியும் என் மொழிபெயர்ப்பு நூல் பற்றியும் செய்திகள் வந்ததைப் பார்த்து மகிழ்ந்தது மறக்க முடியாத அனுபவம்.

மறுநாள் தன் வீட்டிற்கு என்னையும் என் கணவரையும் அழைத்து அன்போடு அவரே தேநீர் தயாரித்துக் கொடுத்தார். தான் ஐரோப்பா பயணிக்கப் போகும் விவரங்களை ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு எனக்கொரு புடவை, ரவிக்கை வைத்துக் கொடுத்ததோடு என் மொழிபெயர்ப்புப் பணிக்காக ஒரு சிறந்த தொகைக்கான காசோலையையும் அளித்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு.

இப்போதும் கூட அவருக்கு எதாவது விருது கிடைத்தாலோ சன்மானம் நடக்கப் போகிறது என்றாலோ உடனே என்னைத் தொலைபேசியில் அழைத்து உற்சாகத்தோடு கூறுவார்.

மேடையில் குறிப்பு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் சரளமாகப் பொழிவார். இத்தனை ஆண்டு கல்லூரி விரிவுரையாளர் பணி அவருக்களித்த கொடை அது. தற்போது இந்த தள்ளாத வயதிலும் தன் வாசகரின் மகள் அழைப்பை ஏற்று ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக திரும்பி வந்துள்ளார்.

-பேட்டி கட்டுரை:  ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version