Home கட்டுரைகள் தெலுங்கில் முதல் சிறுகதை எழுத்தாளர்: பண்டாரு அச்சமாம்பா – (1874-1905)

தெலுங்கில் முதல் சிறுகதை எழுத்தாளர்: பண்டாரு அச்சமாம்பா – (1874-1905)

pandaru-achamamba2
pandaru achamamba2

தெலுங்கில் முதல் சிறுகதையை எழுதி பிரசுரித்த பெருமையும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சங்கங்கள் அமைத்து பாடுபட்ட பெருமையும் கொண்டவர் பண்டாரு அச்சமாம்பா.

பல துறைகளில் புகழ்பெற்ற பெண்களின் வரலாற்றைப் பல மொழிகளிலிருந்தும் சேகரித்து தெலுங்கில் 1903 ல் ‘அபலா சத்சரித்ர ரத்னமாலா’ என்ற பிரம்மாண்ட நூலை எழுதி வெளியிட்டார்.

வேதம், புராணம், பௌத்தம் முதலான காலகட்டங்களில் சிறந்து விளங்கிய பெண்களின் வரலாறுகளை புத்தக வடிவில் தொகுத்தளிக்க வேண்டுமென்ற அவருடைய ஆவலை நிறைவேறவிடாமல் இளம் வயதிலேயே மரணம் அவரைக் கவர்ந்து சென்றது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களின் நிலைமையை முன்னேற்ற வேண்டுமென்று புதுமையான ஆலோசனைகளோடு சதா சர்வ காலமும் பரிதவித்து, தன் வேதனைகளையும், அந்தரங்க கோஷங்களையும் கருத்துக்களாக, கதைகளாக, கட்டுரைகளாக, வரலாற்று நவீனங்களாக சொற்பொழிவுகளாக வெளிப்படுத்திய ஆச்சர்யகரமான பெண்மணி பண்டாரு அச்சமாம்பா.

அச்சமாம்பா 1874ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் ‘நந்திகாம’ என்னும் நகரின் அருகில் உள்ள பெனுகன்சிப்ரோலு என்னும் ஊரில் பிறந்தார். தந்தையார் கொமர்ராஜு வெங்கட சுப்பையா. தாயார் கங்கமாம்பா.

அச்சமாம்பாவின் தம்பி கொமர்ராஜு வெங்கட லக்ஷ்மண ராவு 1877ல் பிறந்தார். தம்பிக்கு இரண்டு வயதும் அச்சமாம்பாவுக்கு ஆறு வயதும் இருக்கையில் அவருடைய தந்தை மரணமடைந்தார். அவருடைய தம்பியை மட்டும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தனர். ஆனால் பெண் குழந்தையானதால் அச்சமாம்பாவைப் படிக்க வைக்க வில்லை.

அச்சமாம்பாவுக்கு பத்து வயதில் தன் தாயின் சகோதரர் பண்டாரு மாதவராவுடன் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்கு முன் அச்சமாம்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

பண்டாரு மாதவராவு மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் பி.டபிள்யு.டி.துறையில் அதிகாரியாகப் பணி புரிந்து வந்தார். அச்சமாம்பா தன் தம்பியையும் உடனழைத்துக் கொண்டு நாக்பூரில் கணவருடன் வசிக்கத் தொடங்கினார்.

தினமும் தம்பி பள்ளி சென்று படித்து வந்த பின் வீட்டில் அவனுடன் அருகில் அமர்ந்து படித்து ஹிந்தியும் தெலுங்கும் அறிந்து கொண்டார் அச்சமாம்பா. கல்வியின் அவசியத்தையும் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படும் அவலத்தையும் அச்சிறு வயதிலேயே உணரத் தொடங்கினார் அச்சமாம்பா. அச்சமாம்பாவின் கணவர் தன் மனைவியின் கல்வி பற்றி அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை.

அவருடைய தம்பி லக்ஷ்மணராவு எம்.ஏ. படித்து முடிக்கையில் அச்சமாம்பாவுக்கு ஆங்கிலத்தில் எபிசிடி கூட படிக்கத் தெரியாது. இவ்விஷயத்தைப் பற்றி பின்னர் தன் எழுத்துக்களில் பல இடங்களில் குறிப்பிட்டுளளார் அச்சமாம்பா.

அக்காவும் தம்பியும் சேர்ந்து ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வரும் அனைத்து தெலுங்கு பத்திரிக்கைகளையும் புத்தகங்களையும் படித்து விடுவது வழக்கம். சிறந்த சீர்திருத்தவாதியும் எழுத்தாளருமான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு அவர்களின் எழுத்துக்கள் இவர்களை அதிகம் கவர்ந்தன. இவர்களை சமூக சீர்திருத்தத்தின் பக்கம் வழி வகுத்து விட்டன அந்நூல்கள்.

pandaru achamamba

அச்சமாம்பாவின் தம்பி கொமர்ராஜு வெங்கட லக்ஷ்மண ராவு புகழ்பெற்ற கல்வியாளராகவும் வரலாற்று விமர்சகராகவும் விளங்கினார். இவர் சத்ரபதி சிவாஜி சரித்திரத்தைத் தெலுங்கில் எழுதினார். ஆந்திர விஞ்ஞான சர்வஸ்வம் எனப்படும் என்சைகிளோபீடியா வை மூன்று தொகுதிகளாக தெலுங்கில் அறிவியல் கலை போன்ற பல்வேறு துறைகள் பற்றி கட்டுரைகள் எழுதி வெளியிட்ட பெருமை கொமர்ராஜு வெங்கட லக்ஷ்மண ராவைச் சேரும். இவர் தமக்கையின் கல்வியறிவு வளம் பெறுவதற்குப் பக்கபலமாக இருந்து சிறந்த கல்வியாளராக்க உறுதுணையாக இருந்தார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக அச்சமாம்பாவின் மகனையும் மகளையும் குழந்தை பிராயத்திலேயே காலன் கவர்ந்து சென்று விடவே ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கி விட்டார் அச்சமாம்பா. அத்துயரத்திலிருந்து அச்சமாம்பாவின் மனதை படிப்பு, எழுத்து என்று திசை திருப்பி விட்டார் தம்பி லக்ஷ்மண ராவு.

தம்பியின் ஊக்குவிப்பினால் அச்சமாம்பா சமஸ்கிருத காவியங்களையும் சாஸ்திரங்களையும் படித்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு உறசாகத்தோடு கல்வியறிவில் உயர்ந்தார். தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், மராட்டி, பெங்காலி மொழிகளைக் கற்று அவற்றில் சிறப்பான புலமை பெற்று விளங்கினார் அச்சமாம்பா.

தம்பி கொமர்ராஜு வெங்கட லக்ஷ்மண ராவின் தூண்டுதலால் தன் துன்பங்களை மறந்து தனக்கென்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்ட அச்சமாம்பா தன் ஆலோசனைகளுக்கு அட்சர வடிவமளித்து 1902ல் ‘தன திரயோதசி’ என்ற சிறுகதையை எழுதி வெளியிட்டார். பெண்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டியதன் தேவையை விளக்குவது இக்கதையின் நோக்கம். தெலுங்கு இலக்கியத்தில் இது சிறுகதை இலக்கியத்திற்கு வழிகாட்டிய முதல் சிறுகதை.

கவிஞரும் புகழ் பெற்ற தெலுங்கு எழுத்தாளருமான குரஜாட அப்பாராவு (1862-1915) முதல் சிறுகதை எழுத்தாளராக சமீக காலம் வரை அறியப்பட்டார். இவருடைய ‘ தித்துபாட்டு’ என்ற சிறுகதை 1910ல் வெளிவந்தது.

ஆனால் பண்டாரு அச்சமாம்பா தான் முதல் சிறுகதை எழுத்தாளர் என்று தற்போது அறியப்படுகிறது.

(குரஜாட அப்பாராவு ‘கன்யா சுல்கம்’ என்ற புகழ்பெற்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றியவர். இது மிக வெற்றிகரமாக பலமுறை மேடையேற்றப்பட்டு மக்களால் போற்றப்பட்டது. ஆண்கள் பெண்களுக்கு வரதட்சிணை போன்று அன்பளிப்பு கொடுப்பதை ‘கன்யா சுல்கம்’ என்பர். இதனை தமிழில் ‘எதிர் ஜாமீன்’ போன்றது எனலாம். இதன் காரணமாக பல பெண்களை குழந்தைப் பருவத்திலேயே கல்யா சுல்கம் அளித்து வயதான ஆண்கள் மணப்பதும் அப்பெண்கள் இளம் வயதில் விதவையாவதுமான சமூகக் கொடுமைகளை விமரிசிக்கும் விதமாக தத்ரூபமாக இந்நாடகம் எழுதப்பட்டு மிகச் சிறந்த சமூகப் புரட்சிகளை அந்நாட்களில் உண்டாக்கியது. முதன் முதலில் நடைமுறைப் பேச்சு மொழியில் எழுதப்பட்டு இலக்கிய வாதிகளால் அதற்காக விமரசிக்கப்பட்ட நூல்கள் குரஜாட அப்பாராவுடைய நூல்கள். ஆனால் அம்மொழிநடை மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றி கண்டது).

அச்சமாம்பாவின் ‘தன திரயோதசி’ சிறுகதை ‘ஹிந்து சுந்தரி’ என்ற பத்திரிகையில் பிரசுரமானது. இக்கதை இலக்கிய நடையில் இருந்தது. இது ஒரு நவீன கதையம்சத்தை விவாதித்தது. ஒரு ஏழை தம்பதியினர் தீபாவளியன்று தீபம் ஏற்றக் கூடஎண்ணெய் இன்றி தவித்தனர். புத்தாடை பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்நிலையில் கணவன் வேறு வழியின்று தன் எஜமானனிடமிருந்து பணத்தைத் திருடி மனைவிக்குப் புடவை வாங்க எண்ணம் கொண்டான்.

மனைவி இதை அறிந்து அவனை அத்தீய எண்ணத்திலிருந்து காப்பாற்றுகிறாள். இறுதியில் எஜமானனே தீபாவளிப் பண்டிகைச் செலவுக்குப் பணம் கொடுத்து ஆதரவளிக்கினார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் திருடக் கூடத் துணிந்து விட்ட கணவனை மனைவி நல்ல வார்த்தை சொல்லித் திருத்துகிறாள். எனவே பெண்கள் மந்த புத்தி கொண்டவரல்லர் என்பதை இக்கதை பிரகடனப்படுத்துகிறது.

குரஜாட அப்பாராவு 1910ல் எழுதி வெளியிட்ட ‘தித்துபாட்டு’ (சரி செய்தல்) சிறுகதையும் இதே போன்ற கதை அம்சத்தைக் கொண்டதாகவே விளங்கியது. ஏமாற்றுப் பேர்வழியான கணவனை கவனமாகத் திட்டமிட்டு நல்ல வழிக்குத திருத்திக் கொண்டு வருகிறாள் மனைவி.

அப்பாராவின் கதை நகைச்சுவையோடு நீதி போதிக்கும் விதமாக பேச்சு மொழியில் அமைந்திருந்தது. அச்சமாம்பாவின் கதை உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் சோக உணர்வை அளிப்பதாகவும் இலக்கிய மொழியிலும் அமைந்திருந்தது.

பல நூல்களைப் படித்து, பரிசீலித்து ஆயிரம் ஆண்டுகால பெண்மணிகளின் வரலாற்றை நூலாக எழுதினர் அச்சமாம்பா. அதுவே ‘அபலா சத்சரித்ர ரத்னமாலை’. இந்நூலில் மூன்று பாகங்களுள்ளன. புராண காலப் பெண்களின் வரலாறு, வரலாற்று கால பெண்களின் வரலாறு, ஆங்கிலேய மற்றும் வெளிநாட்டுப் பெண்மணிகளின் வரலாறு.

வரலாற்று நூல் எழுதுவது என்பது ஆண்களுக்கே கூட கடினமான செயல். தெலுங்கில் பெண்களின் வரலாற்றை நூல் வடிவில் வெளிக்கொணர்ந்த முதல் வரலாற்று நூலறிஞராகப் போற்றப்படுகிறார் அச்சமாம்பா. பிற மொழிகளில் எழுதி வந்த உலகப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி அச்சமாம்பாவின் படைப்புகள் மூலம் அறிய முடிகிறது.

அனாதைக் குழந்தைகளை வீட்டில் எடுத்து வளர்த்து கல்வி புகட்டினார் அச்சமாம்பா. எந்த நேரமும் அவர் வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் தங்கி கல்வியறிவு பெற்று வந்தனர்.

தந்தையை இழந்த தன்னைப் படிக்க வைத்து ஆதரவளித்த தமக்கைக்கு உறுதுணையாக இருந்து கல்வி புகட்டி வழி காட்டியவர் அச்சமாம்பாவின் தம்பி லக்ஷ்மண ராவு. அவர் ‘அபலா சத்சரித்திர மாலை’ யை எழுதுவதற்குத் தேவையான விவரங்களையும் புத்தகங்களையும் தேடிச் சேகரித்து அளித்து உதவினார் அந்த அன்புச் சகோதரர்.

“அக்கறை கொண்ட ஆண்களால் வீட்டில் நிர்பந்தப்படுத்தப்படும் பெண்கள் காப்பாற்றப்படுபவர் என்று கொள்வதற்கில்லை. எந்த பெண் தன் ஆத்மாவைத் தானே காப்பாற்றிக் கொள்வாளோ அவளே பாதுகாக்கப்படுபவள்” என்ற பொருள் கொண்ட சமஸ்கிருத சுலோகத்தை எடுத்துக்காட்டி அச்சமாம்பா ‘அபலா சத் சரித்திர ரத்னதமாலா’ வின் முன்னுரையில் வெளிப்படுத்திய கருத்துகளின் மூலம் அவருடைய பெண்ணீய கண்ணோட்டம் வெளிப்படுகிறது.

இந்நூலை ‘கந்துகூரி வீரேச லிங்கம் பந்துலு’ அவர்கள் தன் ‘சிந்தாமணி’ அச்சகத்தில் அச்சிட்டார்.

‘அபலா சத் சரித்திர ரத்ன மாலை’ பல்வேறு துறைகளில் தம்மை நிரூபித்த முப்பத்து நான்கு பெண்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கிறது.
இந்நூல்லின் முன்னுரையில் இதனை எழுதுவதற்கான இரண்டு காரணங்களை அவர் குறிப்பிடுகிறார்.

1.பெண்கள் அபலைகள், மூடர்கள், விவேகமற்றவர்கள், துர்குணங்களின் மூட்டை என்றல்லாம் பலர் நிந்திக்கின்றனர். பெண்களின் மேல் சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபத்தமானவை. பெண்கள் மிகவும் தைரியமும் தீரமும் பொருந்தியவர்களாக தன்னிகரில்லா கல்வியறிவு பெற்றவர்களாக முன்பிருந்திருக்கின்றனர். தற்போதும் இருக்கின்றனர்.

2.பெண்களுக்கு படிப்பும் சுதந்திரமும் அளித்தால் அவர்கள் கெட்டுப் போவார்கள் என்றும் கணவனை மதிக்க மாட்டார்கள் என்றும் குடும்ப சௌக்கியத்தை நாசமாக்கி விடுவார்கள் என்றும் சிலர் எக்காளமிடுகின்றனர்.
இக்குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை. பெண் கல்வி துராச்சாரத்தைத் துரத்துமே தவிர அதனை வரவேற்காது. பெண் சுதந்திரத்தினால் தேசத்திற்கு லாபம் தானே தவிர நஷ்டமேற்படாது. பெண் கல்வியின் தேவையை அனைவரும் உணர வேண்டும்.

சாத்திரங்கள் பெண்ணை மணம் செய்து கொடுக்கும் போது பெண்ணின் தந்தை ‘இவளை நான் ஆண் மகன் போல் வளர்த்தேன்’ என்று கூறுவதை அச்சம்மாம்பா எடுத்துக்காட்டுகிறார்.

‘பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட மந்தமானதென்றும், எடை குறைந்தது என்றும் கூறும் வாதத்தை ஏற்க இயலாது. பெண்களுக்குக் கல்வி அறிவைத் தடை செய்து, அவர்கள் மந்த புத்தி உள்ளவர்களாக ஆக்கப் படுகிறார்கள் என்பதே உண்மை. ஆணானாலும் பெண்ணானாலும் பிறக்கும் போது சுறுசுறுப்பாகவே பிறக்கிறார்கள். ஆனால் பாரபட்சம் காட்டி வளர்க்கும் பெற்றோர் பெண் குழந்தைகளை மூலையில் முடக்கி அடக்கி அமர்த்தி விட்டு ஆண் குழந்தைகளை மட்டும் பள்ளிக்கு அனுப்புகின்றனர். பெண்களுக்கும் கல்வி புகட்டினால் ‘ஆணில் பெண் சரிபாதி’ என்ற வசனத்திற்குப் பொருள் கிட்டும்,” என்று புரட்சிகரமான கருத்துக்களை தன் படைப்புகளில் குறிப்பிடுகிறார்.

வராஹ மிஹிரரின் மனைவியான ஜோதிட சாஸ்திரத்தில் நிபுணராயிருந்த ‘கானா’ என்ற பெண்ணின் சரித்திரத்தை விவரிக்கையில் பெண்கள் பிறவியிலேயே கூர்மதியுள்ளவர்கள் என்று கூறுகிறார் அச்சமாம்பா. “ஆண் பிள்ளைகள் சிறு வயதில் மந்த புத்தியோடு விளங்கினாலும் ஐந்து வயது ஆனதும் அவனை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்பித்து அவனுடைய மந்த புத்தியை மாற்றி ஞானம் போதிக்க விழைகின்றனர் பெற்றோர். ஆனால் சிறு வயதில் அவனைவிட சிறந்த திறமை பெற்ற பெண் குழந்தைக்கு மட்டும் கல்வி கற்கும் அவகாசத்தை மறுத்து அவளை மூர்க்க சிரோமணியாக்குகிறார்கள். பெற்றோரின் பாரபட்சமான வளர்ப்பு முறையால் பெண்கள் மூடர்களாக்கப் படுகிறார்களே தவிர பெண்கள் இயற்கையில் முட்டாள்கள் அல்லர்”.

ஆதி சங்கரரின் சம காலத்தவரான, நியாய சாஸ்திரம், மீமாம்சம் மற்றும் வேதாந்தம் இவற்றில் நிபுணராயிருந்து ஆதி சங்கரருக்கே சவால் விடுத்த ‘சரசவாணி’யின் சரித்திரத்தை விவரிக்கையில், பெண்களுக்கு கல்வி அளிக்காமல் ஆண்களால் அடக்கப்படும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறார் அச்சமாம்பா. “மனித உடலுக்கு அலங்காரம் கல்வியறிவே. அதனை இல்லாமல் செய்து விட்டு உலோக நகைகளைப் பூட்டி தம் கேளிக்கைகளுக்காக அவளை பொம்மலாட்ட பொம்மையாக மாற்றி மகிழ்கிறது ஆண் வர்க்கம். பெண்ணை வீட்டின் எஜமானியாகப் பார்க்காமல் தனக்கு உபசாரம் செய்யும் தாசியாக நினைக்கிறார்கள். ஆண்கள் பெண்களின் விஷயத்தில் செய்யும் இத்தகைய அநியாயத்தால் பெண்களை முட்டாள்களாக்கி கெடுப்பதோடு தாமும் கெட்டு மூர்க்க சிரோமணியாக நிற்கிறார்கள். இந்நிலை ஏற்படுவது ஆண்களின் குற்றத்தாலும் சுயநலத்தாலும் தானே தவிர பெண்களிடம் எக்குற்றமும் இல்லை”.

அச்சமாம்பாவின் பெரும்பாலான கட்டுரைகளும் கவிதைகளும் படைப்புகளும் ‘ஹிந்து சுந்தரி’ மற்றும் ‘சரஸ்வதி’ பத்திரிகைகளில் பிரசுரமாயின.

1903ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘தம்பதிகளின் முதல் கலகம்’ என்ற கதையில் கணவன் மனைவியிடையே ஒரு சின்ன விஷயத்தில் ஏற்பட்ட தகராறை விவரிக்கிறார் அச்சமாம்பா. மனைவி மனம் வருந்தி பிறந்த வீடு சென்று விடுகிறாள். தன் தாயிடம் அப்பெண் இவ்வாறு கூறுகிறாள்: “நான் அவருக்கு மனைவி. வேலைக்காரி அல்ல. திருமணம் செய்து கொண்டதற்காக அவர் என்னை வேலைக்காரி போல் நடத்தலாமா? கௌரவத்துடனும் அன்புடனும் ஒரே கூரையின் கீழ் வாழும் சம மனிதரைப் போல் நடத்த வேண்டாமா? என்னை ஒரு சேவகன் போல் எப்போதும் அவருக்கு நான் சேவகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? திருமணத்திற்குப் பின் நான் அவருடைய ‘அர்த்தாங்கி’. அவரில் பாதி. அந்த அந்தஸ்தை அளிக்காமல் கூலிக்கு அமர்த்திய வேலைக்காரி போல் நடத்தினால் அந்த அகம்பாவத்தை என் போன்ற பெண்கள் எதற்காக ஏற்று அடி பணிய வேண்டும்?” என்று கேட்கிறாள்.

கணவன் மனைவி உறவின் சரியான புரிதலையும், ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நிலவிய ஏற்றத் தாழ்வையும் ஆணாதிக்கத்தையும் சரிவர புரிந்து கொண்ட ஒரு பெண்ணால்தான் இவ்விதம் எழுத முடியும்.

அக்காலத்தில் நிலவிய சமூக நடைமுறை நிலவரத்தை எண்ணிப் பார்க்கையில் அச்சமாம்பாவின் சுய அடையாளப் புரிதலைப் போற்றாமல் இருக்க இயலாது.

“படித்த இளைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்” என்ற கட்டுரையில் பெண்களுக்குக் கல்வி அளிக்கப்படாமல் போவதற்கு ஆசிரியர்கள் ஆண்களாக இருப்பதும் ஒரு காரணம் என்று கூறி பெண்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். பல பெண்கள் ஒரு சங்கமாகச் சேர்ந்து பள்ளிகளை தம் தம் வீடுகளிலேயே ஆரம்பித்து பெண்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

‘பெண் கல்வியின் பிரபாவம்’ என்ற கட்டுரையில் கற்பனையான ஆனால் சக்தி வாய்ந்த ஒரு உலகத்தை சித்தரிக்கிறார். ஐஸ்லாந்து நாட்டில் ஆணும் பெண்ணும் சம கல்வி பெறுகின்றனர். அரசியலிலும் சம அந்தஸ்து. கல்வித் துறைக்கும் ஒரு பெண்ணே அதிகாரி. பாதுகாப்புத் துறையும் பெண்களாலேயே நிர்வகிக்கப்படுவதால் அங்கு சிறைச் சாலைகளோ போலீஸ் ஸ்டேஷன்களோ கோர்ட்டுகளோ கூட இல்லை. இவை அனைத்தும் பெண் கல்வியாலேயே சாத்தியமாயிற்று. மேலும் பல நாடுகளிலும் இது போல் எடுத்துக் காட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில் இன்னமும் பெண்களுக்கு கல்வி அவசியமா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது” என்று எழுதுகிறார்.

அச்சமாம்பா ஆந்திரப்பிரதேசம் முழுவதும் பயணித்து பெண் முன்னேற்றம் பற்றி சொற்பொழிவுகள் ஆற்றினார். பெண்களுக்கான சங்கங்களை ஏற்படுத்தினார். தன் கணவரோடு சேர்ந்து மசிலிப்பட்டினம் வந்தார். அங்கு ஒரு பெண்கள் பள்ளியில் சபை ஏற்பாடு செய்து அதற்கு தலைமை வகித்தார் அச்சமாம்பா. பெண்கள் முன்னேற்றம் பற்றி உணர்ச்சி பூர்வமாக சொற்பொழிவாற்றி மகளிரை எழுச்சியுறச் செய்தார். அச்சமயத்தில் ‘பிருந்தாவன ஸ்திரீ சமாஜம்’ என்ற சங்கத்தை தோற்றுவித்தார். மேலும் பல நகரங்களில் பெண் சங்கங்களைத் தோற்றுவித்தார்.

1905 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள ‘பிலாஸ்பூர்’ என்னும் நகரில் பிளேக் நோய் பரவியது. அப்போது அச்சமாம்பா செவிலியராக மாறி சேவையாற்றி பலர் உயிரைக் காப்பாற்றினார். ஆனால் தானே அந்நோய்க்கு பலியாகி மரணமடைந்தார். முப்பது வயது கூட நிரம்பியிராத அச்சமாம்பா சக மனிதர்களின் சேவையில் உயிர்த் தியாகம் செய்த மனிதாபிமான மூர்த்தியாகக் கீர்த்தி பெற்றார்.

அச்சமாம்பாவின் மரணத்திற்கு ‘ஹிந்து சுந்தரி’ பத்திரிகை ஐந்து பக்கங்களுக்குப் புகழ் அஞ்சலி வெளியிட்டது. மேலும் ‘இப்பெண்மணி சமூக சேவைக்காகவே பிறப்பெடுத்தவர்’ என்றும், ‘ஹிந்து சுந்தரி பத்திரிகை தன் தாயை இழந்து வருந்துகிறது’ என்றும் போற்றியது.

தன்னலமற்ற சேவை செய்த இந்த தியாக பெண்மணியை நாமும் போற்றி வணங்குவோம்.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் -62

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version