ஏப்ரல் 22, 2021, 8:11 மணி வியாழக்கிழமை
More

  செப்.9: இன்று தெலங்காணா மொழி தினம்!

  1969ல் தெலங்காணாவுக்காக போராடினார். கவிதைகள் பாடினார். அரசாங்கம் காளோஜி பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருது அறிவித்துள்ளது

  telangana-language-day
  telangana-language-day

  காளோஜி நாராயணராவு (Kaloji Narayana Rao 9.9.1914 – 13. 11. 2002) பிறந்தநாளை தெலங்காணா அரசு தெலங்காணா மொழி தினமாகக் கொண்டாடுகிறது.

  ‘அநியாயத்தை எதிர்ப்பதில் எனக்கு மனத் திருப்தி. அநியாயம் நடப்பது நின்று போனால் எனக்கு ஆத்ம திருப்தி. அநியாயத்தை எதிர்த்து நிற்பவர் என் வணக்கத்துக்கு உரியவர்’ என்று கர்வமாக அறிவித்து, போராட்டமே உயிர் மூச்சாக வாழ்ந்தவர் மகாகவி காளோஜி நாராயண ராவு.

  ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேசம் இருந்தபோது தெலுங்கு மொழி தினமாக ஆகஸ்ட் 29 கிடுகு வெங்கட ராமமூர்த்தியின் பிறந்த நாளை கொண்டாடியது. இரு தெலுங்கு மாநிலங்களாக ஆந்திராவும் தெலங்காணாவும் பிரிந்தபின் தெலங்காணா அரசு தனக்கென்று ஒரு மொழி தினத்தை உருவாக்கிக்கொண்டது. பிரஜா கவி காளோஜி நாராயண ராவின் பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்து கொண்டாடி வருகிறது.

  காளோஜியின் பெற்றோர் ரமாபாயம்மா, ரங்காராவு.

  காளோஜியின் இயற்பெயர் ரகுவீர் நாராயண லக்ஷ்மிகாந்த் ஸ்ரீனிவாசராவு ராம்ராஜி காளோஜி என்பது. இவர்களது குடும்பம் கர்நாடகா மாநிலம் பிஜப்பூரிலிருந்து வாரங்கல் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து மடிகொண்ட கிராமத்தில் நிலைபெற்றது.

  காளோஜி 1939ல் ஹைதராபாத் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். நிஜாம் ஆட்சியின் கொடூரங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டார்.

  மக்களின் பேச்சுமொழியில் இவர் எழுதிய ‘நா கொடவ’ என்ற கவிதைத் தொகுப்பு 1953ல் வெளிவந்தது. ‘இதி நா கொடவ’ (1995) என்பது இவருடைய சுயசரிதை.

  ஜீவன கீதை (1968) என்ற பெயரில் கலீல் ஜிப்ரான் எழுதிய ‘தி ப்ரோஃபெட்’ டை மொழியாக்கம் செய்தார்.

  1958 -60ல் சாசன மண்டலி மெம்பராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1992 ல் இவருக்கு பத்ம விபூஷன் அளித்து இந்திய அரசாங்கம் கௌரவித்தது. காகதீய விஸ்வ வித்யாலயம் 1992ல் கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.

  “அக்ஷர வடிவம் பெற்ற ஒரே ஒரு மைத்துளி ஒரு லட்சம் மூளைகளை அசைக்க வல்லது” என்றார் காளோஜி. ஜெயப்பிரகாஷ் நாராயண் காலமானபோது “பிறப்பு உன்னுடையது. இறப்பு உன்னுடையது. உன் வாழ்க்கை முழுவதும் தேசத்துடையது” என்று அஞ்சலி செலுத்தினார்.

  சாமானிய மக்களுக்காக எழுதிய கவி வேமனா போல சமூக வேறுபாடுகளை மிக எளிதாக மக்கள் மொழியில் கவிதைகள் மூலம் படைத்தார் காளோஜி. மக்களின் பிரச்சினைகளை தன் பிரச்சனைகளாக ஏற்று அவற்றை கவிதைகளில் படைத்தார். இவர் வாழ்க்கை முழுவதும் தெலங்காணாவின் அரசியல், இலக்கியம், கலாச்சாரம், சமுதாய போராட்டங்களோடு இணைக்கப்பட்டிருந்தது.

  சிறுவயதில் தாயார் கூறிய பிரகலாதன் கதையை கேட்டு அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்க்கும் ஆர்வம் கொண்டார். தந்தையிடமிருந்து உருது இலக்கியத்தில் அறிமுகம் பெற்றார். இவர் தெலுங்கு, ஹிந்தி, உருது, மராத்திய மொழிகளில் இலக்கியம் படைத்தார்.

  இவர் பள்ளியில் படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் கணேஷ் சதுர்த்தி உற்சவங்களுக்கு அளிக்கும் விடுமுறையை ஒருமுறை அளிக்காத காரணத்தால் ஆயிரத்து அறுநூறு மாணவர்களை ஒன்று திரட்டி தலைமை தாங்கிப் போராடினார். அதிகாரிகளின் அலட்சியப் போக்கு பொதுமக்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் அவற்றை எதிர்த்துக் கேட்க வேண்டும் என்பதே அவரது கொள்கை. இது இவர் 2002 நவம்பர் 13 ல் காலமாகும் வரை தொடர்ந்தது.

  தன் கவிதைகள் குறித்துக் கூறும்போது, ‘பத்து சொற்பொழிவுகள் செய்ய முடியாததை ஒரு கட்டுரை செய்துவிடும். 10 கட்டுரைகள் செய்ய முடியாததை ஒரு கதை செய்துவிடும். பத்து கதைகள் செய்ய முடியாததை ஒரு கவிதை செய்துவிடும். பத்து கவிதைகள் செய்ய முடியாததை ஒரு பாடல் செய்து விடும். அதனால்தான் நான் என் ‘நா கொடவ’ வடிவத்தில் பாடல்களில் என் எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளேன்” என்றார்.

  “உணவுக் குவியல் ஒரு புறம்… பசிப் புலம்பல் மறுபுறம். கரகர முறுக்குகள் ஒருபுறம்… பலமான தாடைகள் மறுபுறம்” என்று பாடினார்.

  1969ல் தெலங்காணாவுக்காக போராடினார். கவிதைகள் பாடினார். அரசாங்கம் காளோஜி பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருது அறிவித்துள்ளது. வாரங்கலில் காளோஜி பெயரில் ஒரு ஆடிட்டோரியமும் அதில் காளோஜி பௌண்டேஷன் அலுவலகமும் நினைவு நூலகமும் அமைந்துள்ளது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »