spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்லா. ச. ரா. - சில நினைவுகள்

லா. ச. ரா. – சில நினைவுகள்

- Advertisement -
la-sa-ramamirtham
la-sa-ramamirtham

இன்று நூற்றாண்டு கண்ட தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு பாணியில் கதை, கட்டுரைகள், நாவல்கள் மற்றும் சிறுகதைகள் படைத்து அதன் மூலம் ரசிகர்களின் மனதில் மறைந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கும் லா. ச. ராமாமிர்தம் (30.10.1916 – 29.10.2007) அவர்களின் பிறந்த நாளில் அவருடன் சந்தித்த தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

“புரியாத நிலையிலும் மந்திரம்போல மனதில் ஒட்டிக் கொள்ளும் மாயமே லா.ச.ரா-வின் சிறப்பு. புரிவதும் புரியாததும் தற்காலிக நிலைகள். ஒரு விஷயத்தை இன்று புரிந்துகொள்ளும் விதம் நாளை மாறலாம். ஆனால், லா.ச.ரா-வின் மந்திரச் சொற்கள் தரும் மயக்கம் நீடித்து நிற்கும்.”

மலை உச்சியில் பிறக்கும் நதி பல வடிவங்களையும் பெயர்களையும் எடுத்தபடி கடலை நோக்கிப் பாயும். அதன் மொத்த விகாசத்தையும் குறிப்பிட்ட வகைக்குள் அடக்க முடியாது. லா.ச.ரா-வின் எழுத்தும் அத்தகையதுதான். ஆனால், புற உலகில் வேர் கொண்டு சம்பவங்களால் நகர்ந்து செல்லும் வலுவான யதார்த்தக் கதைகளையும் அவர் எழுதியுள்ளார்

லா.ச.ரா.வின் பிரசித்தமான நாவல்களில் ஒன்று “அபிதா”. க.நா.சு. தொடங்கி இன்றைய விமரிசகர்கள் வரை அனைவரின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் படைப்பு. வாழ்வின் பல வண்ணங்கள் கலந்த ஒரு ஓவியம் “அபிதா”.

ஆன்மிகம், அதீத அனுபவம், பாலியல், காதல் அனைத்தையும் உள்ளடக்கிய உணர்வுகளின் வடிகாலாக திகழ்கிறது இந்நாவல். இதன் அதீத அனுபவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட, சராசரி மனிதர்களுக்கு ஏற்படாத அனுபவங்களாகத் தோன்றும். ஆனால், எந்த ஒருவருக்கும் எந்த நேரத்திலும் எந்த விஷயத்திலும் அகப்புலன்களின் வழியே உய்த்துணரப்படும் மெய்யனுபவமே அபிதா என்பதை ஆழமான வாசிப்பில் உணர முடியும்.

“அபிதா” தரும் பரவச அனுபவம் முற்றிலும் புதுமையானது. எந்த இஸத்துக்குள்ளும் அடங்காத தத்துவ தரிசனம், சொல்லைத் துறந்து தன் சுயத்தில் இயங்கும் ஆன்மீகம், நாவல் முழுக்க இழையோடும் உறவின் கவிதா சோகம் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க “அபிதா” புது முகம் காட்டும் – நாவல் வெளிவந்த போது வந்த விமர்சனம்.

1989ல் அவருடைய சிந்தா நதி என்ற சுயசரிதைக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 1990 பிப்ரவரி மாதத்தில் விருது வாங்க வந்த நேரத்தில் அவருடன் அளவளாவியதை பகிர்ந்து கொள்கிறேன். (படத்தில் அவருடன் நான்)

லால்குடி அது இலக்கிய மேதையையும் இசை மேதையையும் ஒருங்கே தந்த பெருமையுடையது. ஆம்.. லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம், லால்குடி கோபாலகிருஷ்ண ஜெயராமன்.

இலக்கிய பிதாமகன் லா. ச. ரா. ஆம், பிதாமகரே தான், மணிக்கொடி தொடங்கி தனிக் கொடியாக இலக்கிய விருட்சத்தில் படர்ந்தவர்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் அவரை தென்காசி சுவாமி சந்நிதியில் உள்ள வங்கியில் வேலை பார்த்த போது பார்த்தது, அவர் தான் லா. ச. ரா. என்று தெரியாது, அவர் எழுத்தில் எனக்கு ஒரு அபிமானம்.

அவருடைய அறிமுகம் அவர் சாகித்ய அகாதெமி விருது வாங்க வந்த சமயத்தில் கிட்டியது. என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன். அவர் என்னைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ, ரொம்ப காலம் பிரிந்தவரைப் பார்ப்பது போல மிகுந்த வாஞ்சையோடு என் தோளைத் தட்டி தோளில் கை போட்டபடி அளவளாவினார், அவருடைய மூத்த மகன் சப்தரிஷி என்னிடம் தென்காசி பாஷையின் நெடி உங்கள் பேச்சில் இருக்கிறதே என்று கூறி அறிமுகமானர் கூடவே அவருடைய தம்பி மூர்த்தி, சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் அவரது தாயாரையும் அறிமுகப் படுத்தினார்.

நானும் நண்பர் திரு பொன்னுதுரையும் அவரை சந்திக்க அவர் தங்கியிருந்த புது தில்லி ரயில்வே நிலையம் அருகில் உள்ள பகவதி லாட்ஜிற்கு சென்றோம், அவர் அப்போது தான் அகில இந்திய வானொலிக்கு திரு ஏ. ஆர். ராஜாமணி (இந்த உரையாடலை திருத்தம் செய்து குங்குமம் பத்திரிகைக்கு அனுப்பு என்று அவர் கைப்பட கடிதம் எழுதினார்) கூட நேர்காணல் மற்றும் பேட்டியில் கலந்து கொண்டு திரும்பிய நேரம். வணக்கம் சொல்லி உரையாடலைக் தொடர்ந்தோம்.

உங்கள் எழுத்து புரியவில்லை என்கிறார்களே என்று கேட்க அவர் உடனே – ஒருவருக்கு ஒரு விதமாக படுவது மற்றவருக்கு வேறு விதமாக படுகிறது, இன்றைக்கு புரியாவிட்டால் நாளைக்கு புரியட்டும். எழுத்தாளன், எழுத்து என்பது தனி ரகம், கழுதைக்கு காமம் கத்தினால் தான் தீரும் அதுபோல எழுத்தாளனுக்கு எழுத எழுதத்தான் அடங்கும்.

மணிக்கொடி எழுத்தாளர்களின் பேரில் எங்கள் உரையாடல் சென்றது. அவர் – என்னையும், தி. ஜானகிராமனையும் பி. எஸ். ராமையா மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் என்று அடிக்கடி சொல்ல கேள்வி பட்டு இருக்கேன். புதுமைப் பித்தளையும், தி. ஜ. ரா, சிட்டி, சி.சு. செல்லப்பா, நா. பிச்சமூர்த்தி இவர்களை பற்றி மிகவும் உயர்வாக புகழ்ந்தார், ஏதோ ஒரு வகையில் இவர்கள் எழுத்துக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட பிக்குகள். மணிக்கொடி எழுத்தாளர்கள் புடம் போட்ட தங்கம்.

நான் அவரிடம் “பார்யா ரூபவதி சத்ரு” என்று ‘பாற்கடல்’ என்ற நாவலில் எழுதி உள்ளீர்களே, உங்கள் பார்வையில் மனைவி என்பவள் அழகாக இருக்கக் கூடாதா? என்று கேட்க – அவர் எப்போ எழுதியது என் இதயத்துக்கு அப்போது ஒப்படைத்த அந்தரங்கம், எந்த எழுத்துமே அந்தரங்கம் தான் எழுத்தாகிவிட்ட பிறகு கிழிக்க மனம் வரவில்லை.

லா. ச.ரா. – அவர் எழுத்து தனிப் பாணி அதிலிருந்து கடைசி வரை விலகியே இல்லை, இயல்பானவற்றை எழுதினார், இயல்பாகவே வாழ்ந்தார்,

அவர் ஒரு சிந்தா நதி,
தெளிந்த நீரோடை,
ஓடும் தனி நதி,

அதில் சிதறிய நீர்த்துளிகள் –

நீ காலத்தைப் போக்க இங்கு
வரவில்லை
நீ காலத்தோடு போகவும் இங்கு
வரவில்லை
நீ காலத்தை நிறுத்த
வந்திருக்கிறாய்
ஒரு கணத்தில் ஒரு யுகம் பண்ண
வந்திருக்கிறாய்
நீ நித்தியன்!
காலம் – நியமித்ததே நீ
உன் கண்களின் ஒளி
உன் மண்டையில் ஊறும் மாணிக்கம்
உன் விஷத்தை சிந்தாதே! சேமி!
அத்தனையும் மாணிக்கம்…
நீ நித்தியன்…. என
அவர் சிந்தா நதியில் கூறியுள்ளது அவருக்கும் பொருந்தும்..

ரொம்ப வருடங்களுக்கு முன்பு லா. ச. ராமாமிர்தம் அவர்கள் கூட எடுத்த ஒரு உரையாடல் – இன்று அவருடைய 104வது பிறந்தநாள் (91 வயதில் 29.10.2007ல் மறைந்தார்)

  • கே.ஜி.ராமலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe