― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கட்டுரைகள்வ.உ.சிதம்பரம் பிள்ளை உறவினர், ஆன்மிகத் தமிழறிஞர் ப. முத்துக்குமாரசுவாமி காலமானார்!

வ.உ.சிதம்பரம் பிள்ளை உறவினர், ஆன்மிகத் தமிழறிஞர் ப. முத்துக்குமாரசுவாமி காலமானார்!

- Advertisement -
muthukumarasamy1

தமிழறிஞர் ப. முத்துக்குமாரசுவாமி

தமிழறிஞர் ப. முத்துக்குமாரசுவாமி (85) காலமானார்! ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் அண்மையில் காலமான ப. முத்துக்குமாரசுவாமி. பக்தி இலக்கியத்தில் தோய்ந்த பெருமகன். திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தரின் மாணவர் வேறு எப்படி இருக்க முடியும்?

 நெற்றியில் பெரிய குங்குமத் திலகத்தோடு மலர்ந்து சிரிக்கும் கள்ளம் கபடமற்ற முகத்தோடு அவர் காட்சி தருகையில் அவரைச்சுற்றி எல்லா மங்கலங்களும் கொலுவீற்றிருப்பதாய்த் தோன்றும்.

 உழைப்புக்கு அஞ்சாதவர். தம் புத்தகங்கள் எழுத்துப் பிழையில்லாமல் வெளிவரவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார். தினமணி, அமுதசுரபி போன்ற இதழ்களைத் தம் கட்டுரைகளால் அலங்கரித்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பெயரர். வ.உ.சி.க்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இவரும் தமிழறிஞர். இவரும் தெய்வ பக்தி நிரம்பப் பெற்றவர். இவரும் பெரும் தேசபக்தர்.

 தொலைபேசியிலும் நேரிலும் பேசும்போது தமிழில் அன்பைக் குழைத்துப் பேசுவார். அதிரப் பேசுதல் அறியாதவர். அன்னை மூகாம்பிகைமேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.

தமிழ் மாநாடுகள் சிலவற்றை ஒருங்கிணைத்து நடத்திய அனுபவம் உள்ளவர். மலர் தயாரிப்பதில் நிபுணர். கட்டுரைகளைக் கேட்டுக் கடிதம் எழுதி, மறுபடி நினைவூட்டு மடல் எழுதி, அறிஞர்களின் படைப்புகளை வாங்கி அலுப்பேயில்லாமல் மலர்ப்பணி நிகழ்த்துவார். வெற்றிகரமாக மலர் வெளிவந்ததும் அவர் முகம் மலர்ந்திருப்பதைப் பார்ப்பதே ஒரு தனி ஆனந்தம்.

யார் யாரிடமிருந்து கட்டுரைகள் வந்தன, யார் யார் கட்டுரைகளெல்லாம் மிகச் சிறப்பாக அமைந்தன என்பன போன்ற செய்திகளையெல்லாம் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்வார்.

 அவர் தாம் தயாரித்த புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் பெருமிதம் அவர் முகத்தில் தென்படும். பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகப் பிரிவின் நிர்வாகியாகப் பணிபுரிந்தவர்.

 `அம்பிகை, சிவன், மகாகணபதி, சிவ தரிசனம், பஞ்ச பூதத் தலங்கள், பன்முகப் பார்வையில் திருநாவுக்கரசர், அட்டவீரட்டத் திருத்தலங்கள், தென்னாட்டுச் சிவத் தலங்கள், நவக்கிரகத் திருத்தலங்கள்,  முக்தி தரும் தலங்கள், தேவாரத்தில் சமுதாயச் சிந்தனைகள், உலக மொழிகளில் தமிழ், இலக்கிய வளம், திருவாசகத் தேன், மெய்ப்பாட்டியல்,  கங்கைக் கரையினிலே` என்றிப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர். அவர் எழுதிய `செந்தமிழ் முருகன்` என்ற நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.

 அவரின் எல்லா நூல்களுமே பக்தி இலக்கிய அன்பர்களைப் பரவசப் படுத்தக் கூடியவை. பகுத்தும் தொகுத்தும் தமிழ் பக்தி இலக்கியச் செய்திகள் பலவற்றையும் விவரித்து எழுதப்பட்டவை. தங்குதடையற்ற ஆற்றொழுக்கான இனிய நடை அவருடையது.

  இறைபக்தி நிறைந்த அவரின் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும்.

  • திருப்பூர் கிருஷ்ணன் (ஆசிரியர், அமுதசுரபி)
muthukumarasamy2

நெற்றி நிறைந்த நீறுடையான்

நம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்துகிற செய்தி,அறிஞர் முத்துக்குமாரசாமி அவர்களின் பெரும் பிரிவு. அய்யா பத்திரமாக இருங்கள் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்த அவர் விடைபெற்றுவிட்டார்.

கப்பல் ஓட்டிய தமிழரின் கொள்ளுப் பேரர்.ஆன்மிகச் செல்வர்.அன்பின் அமுதசுரபி.திருப்பராய்த்துறை தந்த புதல்வர். சுவாமி சித்பவானந்தரின் நிழலில் வளர்ந்த பக்திப் பழம்.அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுக்குப் பின் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தில் நூல் வெளியீட்டுத் துறையை வளமுற வளர்த்தெடுத்த இலக்கியச் செம்மல்.காவியக் கடலில் முக்குளித்தெழுந்த முகில்.

பக்தி இலக்கியங்களில் புனித நன்னீராடிய பெருந்தகை. உலகப் பெரியோர்களின் உன்னத வரலாறுகளில் தானும் ஈடுபட்டு நம்மையும் அவற்றில் ஈடுபடச் செய்த இலக்கிய ஞானரதம். மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒத்திசைந்த அறிஞர்.

100 கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய அழகிய சித்திரங்களையும் ஓவியக் கவிஞர் அமுதோன் அவர்களால் வரையச் செய்து ஒவ்வொரு கவிதையையும் வெளியிட்டு அந்த அழகிய நூலுடன் கவிஞர்களின் ஓவியங்களையும் பெரிதாக்கித் தந்து கவியுலகுக்கு மரியாதை செய்தவர்.அந்த நூலுக்குப் பரிசும் பாராட்டும் பெற்று பதிப்பகத்துக்கும் பெருமை தேடித் தந்தவர்.
சுவாமி சித்பவானந்தரின் நூல்கள் அனைத்தையும் 18 பெருந் தொகுதிகளாக அற்புதமான பதிப்புகளாக அழகுறக் கொண்டு வருவதற்குப் பேருழைப்பை நல்கியவர்.என் கருணைக்கடல் இராமாநுசர் காவியம் வெளி வர உறு துணையான தூய நட்பின் இலக்கணம்.

தினமணி நடத்திய தமிழ் இனி உலக்க் கருத்தரங்கம் வெற்றி பெற அயராது உழைத்த பெருந்தமிழ்த் தொண்டர். சிங்கப்பூர் ,மலேசியா,இலங்கை எனத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஓடியோடி உதவிகள் செய்த பெருந்தகை.

பன்முறை உலக நாடுகளை வலம் வந்த ஓய்விலாப் பயணி. அன்பருக்கு வற்றாத நேசத் தென்றல். இளைஞரைப் போல் ஆடை புனைவது மட்டுமல்ல,சுறுசுறுப்பிலும் அப்படியே.நெஞ்சில் பாதுகாத்து வைத்துக் கொள்ள இந்த மனிதரைக் காட்டிலும் உயர்ந்த மாணிக்கங்கள் இல்லை. பத்தரை மாற்றுத் தங்கமான அய்யா முத்துக் குமாரசாமி அவர்களுக்கு ஓராயிரம் கை கூப்புக்கள்….

நெற்றி நிறைந்த நீறுடையான்
நெஞ்சில் சைவப் பேறுடையான்
வற்றா அன்பின் வடிவுடையான்
மனித நேயக் கனிவுடையான்
சுற்றி உலகை வலம் வந்தான்
தமிழுக்கே தன் உளம் தந்தான்
முற்றி முதிர்ந்த நறுங் கனியே
முத்துக் குமரா வணங்கு கிறோம்

  • கவிஞர் சிற்பி
muthukumarasamy3

தென்னகம் தந்த சொத்து

முத்துக்குமாரசுவாமி 2002இல் கலைஞன் பதிப்பகம் நந்தா அனுப்பி வைத்து அப்போது எனக்குப் பழக்கமானவர். கப்பலோட்டிய தமிழன் வ உ சி கொள்ளுப் பெயரன் என்று அப்போது அறிமுகமானவர். எனக்கு அந்தக் காலகட்டத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த வ உ சி வாலேஸ்வரன் என்பவரும் அறிமுகமாகி இருந்தார் அவர் தாம் வ.உ.சியின் பெயரன் என்று சொன்னார்… அதன் மூலம் இவரிடம் நட்பு முறையில் பழக்கம் வந்தது.

முத்துக்குமாரசுவாமி அப்போது கலைஞன் பதிப்பகம் சார்பில் தயாரான கலைமகள் கதம்பம் என்ற தொகுப்புக்காக அடிக்கடி அலுவலகம் வந்திருந்தார். அவருக்கு வேண்டிய பக்கங்களை உடன் இருந்து பிரதி எடுத்துக் கொடுத்து, குறிப்புகள் கொடுத்து உதவி, என்னாலான உதவிகள் செய்தேன். அந்தத் தன்மையால், அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது

வெளிநாட்டு தொடர்புகள் அதிகம் உண்டு அவருக்கு. வெளிநாடுகளில் நடைபெறும் தமிழ் மாநாடுகளில் பங்கேற்று தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர். நான் தினமணி பணியில் இருந்த போது அடிக்கடி அலுவலகம் வருவார். அப்போதும் சந்தித்து உலகளாவிய விஷயங்கள் குறித்து பேசுவோம்.

தமிழ் அறிஞர். புத்தகங்கள் பல தொகுத்திருக்கிறார். ஆன்மிக நாட்டம் அதிகம் உண்டு. நெற்றியில் குங்குமம் இல்லாமல் இவரை பார்க்க முடியாது. இவர் கொரானாவின் பாதிப்பால் அக்.29 மதியம் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தம் தந்தது. பேஸ்புக்கில் தன்னையும் கொரானா விடவில்லை என்று கடந்த வாரம் நகைச்சுவையாக பதிவிட்டார். மதியம் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார் … அன்னாருக்கு நம் அஞ்சலி!

  • செங்கோட்டை ஸ்ரீராம் (மூத்த பத்திரிகையாளர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version