Home இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை தென்னகத்தின் திருச்செங்கோடு! வாசுதேவநல்லூரில் வந்து நின்ற சிந்தாமணி நாதர்!

தென்னகத்தின் திருச்செங்கோடு! வாசுதேவநல்லூரில் வந்து நின்ற சிந்தாமணி நாதர்!

vasu1
vasu1

கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்தேன். இரவு 7 மணி ஆகியிருந்தது. அன்று ஏகாதசி. அடியேன் தகப்பனாரின் ஆப்திகம் முடிந்து ஒவ்வொரு கோயிலாகச் சென்று வருகிறேன். திருப்பதி, திருஅல்லிக்கேணி, சிங்கர்கோயில், திருவரங்கம், அன்பில், திருவில்லிபுத்தூர் என இப்போது ஒரு சுற்று. ஒரு வருடமாக உள்ளூர் கோயிலில் கூட எட்டிப் பார்க்கவில்லை.

அன்று ஆண்டாள் சந்நிதியில் புகுந்த போது… உள்மண்டபத்தில் இரு புறமும் கோஷ்டி, சேவார்த்திகள்… நம் ஆப்தர் அரயர் பாலமுகுந்தாச்சார் Arayar Sri Bala Mukunthachariarswamy ஸ்வாமி கீழே குனிந்து எதோ படித்துக் கொண்டிருந்தார். அருகில் சென்று குனிந்து… ஸ்வாமி அடியேன் செங்கோட்டை சீராமன் … என்றேன். நிமிர்ந்து பார்த்தவர்.. வாரும் வாரும்… அஹத்தில் அம்மா சௌக்யமா… எப்படி இருக்கீர் என்று நலம் விசாரித்தார்.

சரி வாரும்… தாயாரை சேவிப்போம் என்று, அருகே அழைத்துச் சென்று சேவை பண்ணி வைக்கும்படியாய் கைங்கர்யபரரிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஏகாதசி புறப்பாடு, கோஷ்டி, சாத்துமுறை, பிரசாதம் என வெகுநேரம்… சந்நிதியில் கழித்துவிட்டு… ஸ்வாமியிடம் விடைபெற்று திரும்பினேன்.

பைக்கில் திரும்பிய போது, மிகச் சரியாக சேத்தூர் பஸ் ஸ்டாண்ட் முன் வண்டி நின்றுபோனது. எவ்வளவு முயன்றும் இன்சின் இயங்கவில்லை. சரி… அனேகமாக காயில் போயிருக்கும் என்று நினைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். பாண்டியன் சைக்கிள் ஸ்டோர் என மெக்கானிக் கடை… அந்த இரவு நேரத்திலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவரும் ப்ளக் சுத்தம் செய்தார். ஆயில் ட்ரை ஆயிருச்சு என்று கூறிவிட்டு, ஆயில் விட்டுப் பார்த்தார். அப்படியும் தேறவில்லை. சரி சார்.. நீங்க செங்கோட்டைக்கு பஸ்ஸில் போயிருங்க. நான் இன்சினை வேலை பார்க்கணும். 2 நாள் ஆகும் நான் சொல்றேன் வந்து எடுத்துக்குங்க என்றார்.

sethur1

நேற்று… காலை போன் செய்தார். வண்டி ரெடி ஆயிருச்சு. எடுத்துக்குங்க என்றார். அப்போது தான், எனக்கு சேத்தூர் – யாரோ ஒருத்தர் இங்க இருந்து போன் பண்ணுவாரே… ஒரு கோயில்… என்றெல்லாம் நினைவுக்கு வர… பேஸ்புக்கில் தேடி அந்த மனிதரைத் தொடர்பு கொண்டேன். ஐயா அடியேன் சேத்தூருக்கு இன்று வருகிறேன்… பார்க்கலாமா? உங்க கோயிலுக்கு கூப்பிட்டீங்களே… வரேன் என்றேன்.

sethur2

ஸ்வாமி.. வாங்க… ரொம்ப சந்தோஷம்… பாருங்க.. நீங்க இங்க வரணும்னே வேணுகோபாலன் உங்களை இங்க நிறுத்தியிருக்கிறார் என்றார் சிரித்துக் கொண்டே.

காரணம்… சக்தி விகடனில் நான் பணி செய்த அந்த 12 ஆண்டுக்கு முன் கோயில் திருப்பணிக்கான தகவல்களுடன் இவர் அணுகியிருந்தார். அப்போதிருந்து, சரி ராஜபாளையம் கடந்து தானே நாம் ஊருக்கு போயாக வேண்டும். நேரில் பார்த்து பின்னர் எழுதலாம் என்று வைத்திருந்தேன். ஆனால் காலம் கடந்தது. அந்த வாய்ப்பு அமையவில்லை. இப்போது… வாகனம் நின்றதால்… சேத்தூரில் நிற்க வேண்டியதாயிற்று.

sethur4

அவர் பெயர் குமரேஷ். சிறிய கோயில். ஒரே பிரதான சந்நிதி. வேணுகோபாலர். இடுப்பில் ஒட்டியாணம் குறுவாளுடன். மிகப் பழைமையான கோயில் என்றார். குடிசையில் இருந்தது. எங்க தாத்தா காலத்தில் சமுதாயக் கோயிலாக இருந்தது. பின்னர் பக்த சபை தொடங்கி எல்லாருக்குமான கோயிலாக இதனை பெரிதாக்கியிருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர் தான் இதன் பராமரிப்பு. கோசாலை வைத்திருக்கிறோம். போன வருடம் பொது முடக்க காலத்தில் ஆனிமாதம் குடமுழுக்கு நடந்தது. ஸ்ரீவி. ஜீயர் வந்திருந்தார். எல்லோருக்கும் ஆசீ அளித்தார். உத்ஸவங்கள் நடத்தறோம். பெரிய அளவில் செய்ய வேண்டும் என்று ஆசைதான். இப்போ தான் கருட வாகனம் வந்தது. பின்னாளில் இந்த ஆஞ்சநேயர் சந்நிதி, தாயார் சந்நிதில்லாம் கட்டினோம். கைங்கர்யத்துக்கு ஆள் இல்லை. ஒரு வேளையாவது பெருமானுக்கு நித்திய படி தளிகை அம்சேத்தி பண்ணனும். .. சொல்லிக் கொண்டே போனார்.

கோயிலுக்கு எதிரே… வீதி. அதுவே பழைமையைப் பறைசாற்றியது. (அவருடைய கோயில் பக்கத்தில் தகவல்கள், படங்கள் பதிவு செய்திருக்கிறார்… https://www.facebook.com/ga.gum.3 கோயில் கைங்கர்யம் தொடர்ந்து நடக்க பக்தர்கள் உதவினால் நன்றாக இருக்கும் என்றார்.

திரும்பும் வழியில்… வாசுதேவநல்லூர் ! அட அருமையான வாய்ப்பு. நேரமும் இருக்கு… என்று சிந்தாமணி நாதர் கோயில் பக்கம் திருப்பினேன்.

vasu4

முன்னர் சன் டிவி., தெய்வதரிசனம் பகுதியில் இந்தக் கோயிலின் அருமையான அமைப்பை, வீடியோ பார்த்து எழுதியிருந்தேன். அப்போதிருந்து உள்ளுக்குள் ஆசை.

கோயில் மிக பிரமாண்டம். பெரீய்ய முன்மண்டபம். வரிசையாக அமைந்த கற் தூண்கள். தென்காசி கோயிலின் பரப்பையும் மிஞ்சியதாய் தோன்றியது. ஓதுவார் ஒருவர் தேவாரம் பாட, இளைஞர்கள் மூவர் செல்போனில் பார்த்தபடி, அவருடன் சேர்ந்திசைத்தார்கள்.

கோயில் பட்டர் ஓர் இளைஞர். பார்த்துப் பழகிய முகம் போல் இருந்தது. எனைப் பார்த்ததும், உள்ளே சென்று அர்த்தநாரீஸ்வரர் எனும் சிந்தாமணி நாதரான அம்மையப்பரின் பெருமையைச் சொல்லி, கற்பூரம் காட்டி… உத்ஸவரைப் பார்த்தால் உங்களுக்கு பெருமான் திருமேனி அழகு புரியும் என்று அழைத்துச் சென்று.. விவரித்தார்.

vasu6

தலத்தின் சிறப்பே… இந்த பிருங்கி மகரிஷிதான். அவர்தான், அர்த்தநாரீஸ்வர தோற்றத்தின் மூல காரணர்…. என்றார். ம்ம்ம்.. அடியேன் எழுதியிருக்கிறேன். சன் டிவி., தெய்வதரிசனம் பகுதியில் என்றேன்.

ஓ… நீங்கள் ….?
செங்கோட்டை ஸ்ரீராம்…

என் சித்தப்பா செங்கோட்டையில் இருக்கிறார்… ராஜான்னு பேர்…
அட நம்ம ராஜா … அவர் வீட்டுக்கு எதிர்வீடுதான் நம் வீடு…

ஆனா… அது ஸ்ரீராம் அண்ணா வீடாச்சே…
யப்பா… அது நாந்தானப்பா…

ஓ.. சாரின்னா… அன்று நான் உங்காத்துக்கு வந்தபோது நீங்க வேஷ்டியில் இருந்தேளா.. இப்போ பேண்ட் சர்ட்டில் அடையாளம் தெரில…

இவர் பேர் ரமேஷ் என்ற ராமசுப்பிரமணியன். கோயிலின் அமைப்பை விளக்கினான். அண்ணா இந்தக் கோயில் கேரள பாணி, பாண்டியர் ஸ்டைல், சோழர் ஸ்டைல் என மூன்று விதமா இருக்கு. இந்த கொடுங்கை, தாழ்வாரம், முகப்பு எல்லாம் கேரள பாணி கட்டடம். முன் மண்டபம் மீன் இலச்சினையுடன் தூண்கள், மேல் கூரை, எல்லாம் பாண்டியர் காலம்… அவ்வப்போது எடுத்துக் கட்டி, பிரமாண்டமாக்கியிருக்கிறார்கள்…

மூலவர் திருமேனி அர்த்தநாரீ கோலம். திருச்செங்கோட்டுக்கு பின்னர் இங்கதான் சிறப்பாக இந்தக் கோலத்தை பார்க்கலாம். நம்ம மாவட்டத்துல உள்ள சிறப்பே… சங்கரநாராயணர் கோலத்தில் சங்கரன்கோவிலும், அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் இங்கயும் தான்.

vasu3

இங்கே பல சிறப்பு உண்டு. துர்வாசர் சாபத்தால் பதவி இழந்த இந்திரன், இங்கே தவம் புரிந்து மீண்டும் பதவி அடைந்தான். வாசவன் என்ற இந்திரன் தவம் புரிந்த தலம் வாசவனூர் என்றானது. அதுவே காலப் போக்கில் வாசவநல்லூர் ஆகி, இப்போ வாசுதேவநல்லூர் ஆகியிருக்கிறது.

சேர மன்னன் ரவி வர்மன், இந்த மூர்த்தியை வணங்கி பிள்ளைப் பேறு பெற்றதால், கோயிலை விரிவாக்கி, நிலம் எழுதி வைத்து உத்ஸவங்கள் நடத்தியிருக்கிறான். ரவிவர்மனின் உலோகத் திருமேனி இங்கே உத்ஸவ மூர்த்திகளை வணங்கிய கோலத்தில்.. இதோ பாருங்கள் … என்று காட்டினான் பட்டர் ரமேஷ்.

சக்தியையும் சிவனையும் பிரித்துப் பார்த்து வண்டாய் வடிவு கொண்டு பெருமானை மட்டும் வலம் வந்த பிருங்கி மகரிஷிக்கு தாம் இருவரும் ஒன்றே என அம்மையப்பராய், உமையொரு பாகனாய் உருக்காட்டிய கோலம் இங்கே. அதனால் தனியாக அம்பாள் சந்நிதி இல்லை. இத்தகைய தன்மையால், தம்பதிகள் ஒற்றுமைக்கு பரிகாரம், 60ம் கல்யாணம், 80ம் கல்யாணம் செய்வதற்கு என பக்தர்கள் இங்கே குவிகிறார்கள்.

கோஷ்ட மூர்த்தங்கள் வழக்கம் போல். 63 நாயன்மார்கள் சப்த மாதர்கள் என கோயிலின் பிரமாண்டம் விரிகிறது. கல்லால் ஆன நடராஜருக்கு தனி மண்டபம், வெளியே பைரவர்க்கு தனி சந்நிதி பெரிதாக… என்று ஒரு கோயிலின் பிரமாண்டத்தை நீங்கள் உணர வேண்டுமானால்… மதுரை, ராஜபாளையம் வழியில் குற்றாலம் தென்காசி வரும் போது… சிவகிரியை அடுத்துள்ள இந்த வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து பார்க்க வேண்டும்.

அருகே இருக்கும் தலம் தான்… ஆனால் அசட்டையாக இருந்துவிடுவோம். அப்படித்தான் இந்தக் கோயிலையும் நான் இதுநாள் வரை பார்க்காது இருந்து விட்டேன். இன்னும் ஒரு கோயில் உள்ளது. அருகில் உள்ள கடையநல்லூர். சிலர் சொல்லும் போது… ஆர்வம் அதிகரிக்கிறது. கடயநல்லூர் என்ற ஊர்ப் பெயர் வரக் காரணமாக அமைந்த கடகாலீஸ்வரர் ஆலயத்துக்கு அடுத்து செல்ல வேண்டும்!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version