Home இலக்கியம் கட்டுரைகள் பாரதி-100: பரசிவ வெள்ளம் (1)

பாரதி-100: பரசிவ வெள்ளம் (1)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் “பரசிவ வெள்ளம்” – 1
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாரதியார் ஒரு தீர்க்கதரிசி, ஞானச்சித்தர், ஜீவன் முக்தர் என்றெல்லாம் எவரேனும் எழுதினால் அதனை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பாராட்டுக்கள் அத்தனைக்கும் தகுதியானவர் பாரதியார். இதற்கு அவரது படைப்புகளே சாட்சி. பாரதி அறுபத்தியாறில் 

எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி;

என்று அவரே தன்னை ஒரு சித்தன் என்று பாடுவார். அவருடைய பாடைப்புகளில் சங்க இலக்கியம், சமய இலக்கியம், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், ஒப்பிலக்கியம், கீர்த்தனை, வண்டிக்காரன் பாட்டு, நொண்டிச் சிந்து என எல்லாமும் இருக்கும்.

பாரதியாரின் நூறாவது நினைவு நாளில் (11.09.2021) அவருடைய “பரசிவ வெள்ளம்’ என்ற பாடலைப் பற்றியே சிந்தித்தேன்… முதலில் பாடலைப் பார்ப்போம். 24 கண்ணிகளைக் கொண்ட இப்பாடல் 1915இல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் வெளியான ஒரு பத்திரிகையில் இக்கவிதை வெளியானது. பாரதி அப்போது இதழியல் பணிக்கு வரவில்லை. இதோ பாடல்.

உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே

காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே

எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.

வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.

தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி

தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.

எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே

வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.

காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.

எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.

மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.

இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.

வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.

ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.

வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!

யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!

எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!

எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா

யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!

காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.

சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!

தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!

சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!

நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!

இதன் விளக்கத்தை நாளை காணலாம்...

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version