Home கட்டுரைகள் பாரதி-100: கண்ணன் பாட்டு (2)

பாரதி-100: கண்ணன் பாட்டு (2)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 2, பாரதியின் இசை அறிவு

     வ.வெ.சு.ஐயர் அவர்கள் பாரதி இனிமையாகப் பாடக்கூடியவர் என்று கூறியிருப்பதிலேயே பாரதியார் புதுவை கடற்கரையில் இந்தப் பாடல்களைப் பாடும்போது உடனிருந்து அவர் கேட்டு அனுபவித்திருக்கிறார் என்பது புலனாகிறதல்லவா? இங்கு ஐயர் கூறும் சொற்களைக் கவனிக்க வேண்டும். பாரதி பாடும்போது ‘கற்பனா கர்வத்தோடும்’ ‘சிருஷ்டி உற்சாகத்தோடும்’ பாடியதாக விளங்குகிறது. ஆம் உலக மகா கவிகளுக்கொப்பாகத் தானும் ஓர் அரிய பாடலை இயற்றிய அந்த மகாகவிஞனுக்கு கர்வமும், அப்படியொரு பாடலை சிருஷ்டித்ததாலேயே உற்சாகமும் கொள்ளுவதும் இயற்கையன்றோ?

     பாரதியின் குரல் மிகமிக இனிமையானது என்று அவர் பாடும்போது கேட்ட அனைவருமே சான்று பகர்கின்றனர். அப்படியொரு இனிமையான, கம்பீரமான குரலில் அவர் பாடும்போது கேட்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள். இதில் ஒரு வருத்தமான செய்தியும் உண்டு. மகாகவியின் இந்த அற்புதமான பாடல்களை அவர் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் சரிவர ஆதரிக்கவில்லை. இதனைப் பலரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். இதைக் குறிப்பிட்டு வ.வெ.சு.ஐயர் அவர்களேகூட இப்படிச் சொல்லியிருக்கிறார்:- “……..ஆசிரியரின் நூல்களை நம் நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே, “சுற்றி நில்லாதே போ, பகையே – துள்ளி வருகுது வேல்” “கைதனில் வில்லும் உண்டு காண்டீபம் அதன் பேர்” என்றும் உள்ள அக்ஷர லக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும் அவருடைய உற்சாகம் குன்றிப்போயிருக்கிறது” “வ.வெ.சு.ஐயர் அவர்கள் இப்படி எழுதியிருப்பதிலிருந்து கண்ணன் பாட்டு அக்காலத்தில் எப்படி மதிக்கப்பட்டிருக்க வேண்டுமோ அப்படி மதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது” என்று “வழி வழி பாரதி” எனும் நூலில் சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களும் எழுதுகிறார்.

     அவர் மேலும் சொல்லுகிறார்:- “போப் ஐயர் வரைந்த “இலக்கண நூற் சுருக்கம்” அவர் காலத்திலேயே இலட்சக் கணக்கில் விலை போயிற்று. ஆனால் பாரதியாரின் கவிதை நூல் சில நூறு பிரதிகள் என்ற அளவில்கூட விலை போகவில்லை. இன்று தமிழ் பெற்றுள்ள எழுச்சிக்கு மூல காரணம் பாரதியாரே என்றாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மதித்தவர் ஒரு சிலரே. குருவிந்தக் கல்லுக்கும் கோமேதகத்திற்கும் உள்ள வாசியை, கண்ட அளவிலே உணர்பவர் ஒரு சிலர்தாமே. அதுபோலத்தான் மேதைமையை உணர்தல் என்பதும்” என்று. கண்ணபிரானை தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், ஒரு விளையாட்டுப் பிள்ளையாய், காதலனாய், கணிகைக்கும் காந்தனாய், காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய் தரிசிக்கும் வழக்கம் ஆழ்வார்கள் காலத்திலிருந்தே நம் பண்பாட்டில் இருந்திருக்கிறது என்கிறார் சேக்கிழாரடிப்பொடி.

     வட இந்தியாவில் பக்தி இயக்க காலத்தின் மிக முக்கிய பிரிவுகளாக ‘இராம பக்தி தாரா’, ‘கிருஷ்ண பக்தி தாரா’ என இரண்டைக் குறிப்பிடுவர். இதனை பெ.சு. மணி அவர்கள் “இந்திய இலக்கிய மரபில் கிருஷ்ண பக்தி எனும் இலக்கிய மரபு தனது அழுத்தமானச் சுவடுகளைப் பல மொழிகளில் பதித்துள்ளது என்றும், பக்தி இயக்கம், இலக்கிய இயக்கமாகவும் விளங்கிய காலம் அது” என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்டுரையில் கூறுவதாவது:- “மகாகவி பாரதியார் அவர்கள், இந்தியக் கவிதை உலகில் கிருஷ்ணனைப் பற்றிய குறியீட்டுக் கவிதை பெற்றுள்ள சிறப்பைக் குறிப்பிட்டுள்ளார்.

subramanya bharathi

     மகாயோகி அரவிந்தரின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றிற்கு (அஹானாவும் இதரப் பாடல்களும்) 1916 ஜூலை 16ஆம் நாள் வெளியான “காமன் வீல்” (ஆசிரியர் அன்னிபெசண்ட்) இதழில் எழுதிய விமர்சனத்தில் இந்தியக் கவிஞர்களைக் கவர்ந்த கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிய பின்வருமாறு மொழிந்துள்ளார்:

“Krishna-symbolism has been in the past, one of the most rapturous themes for the Indian poet’s heart. In Hindusthan and in Bengal, in the Maharashtra and the Tamil land, the older seers have written some of their best songs about the picture of the cow-herd boy, his flute and his kine – of God. His love and His illuminations.”

அதாவது இடைக்குலச் சிறுவனின் வேய்ங் குழலும், ஆநிரையும், அவன் அன்பும், அருளொளியும் கொண்ட சொல்லோவியங்களை வங்கம், மராட்டியம், இந்திப் பிரதேசம், தமிழ்நாடு முதலான பிரதேசங்களைச் சார்ந்த கவிஞர்கள் தங்கள் பாடல்களில் படைத்ததைப் பாரதியார் குறிப்பிடுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version