Home இலக்கியம் கட்டுரைகள் பாரதி-100: கண்ணன் பாட்டு (5)

பாரதி-100: கண்ணன் பாட்டு (5)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 5, கண்ணன் – என் தோழன், பாடலின் பொருள்

     ஒருவனுக்கு அமைந்த உயிர்த்தோழன் அவனுக்கு எந்தெந்த விதங்களிலெல்லாம் உதவி செய்வானோ அங்ஙனமெல்லாம் கண்ணன் தோழனாய் உதவி செய்கிறானாம். அப்படி கண்ணனைத் தோழனாய் அடைந்தவன் பார்த்தன் அல்லவா?

  • அவன் சுபத்திரையை மணம் செய்ய என்ன வழி, அண்ணன் பலராமன் தடையாக இருக்கிறாரே என்று கேட்டதற்கு அவளை சிறையெடுத்துச் செல்ல ஓர் உபாயம் உடனே சொல்லி உதவி புரிகிறான்.
  • வில்வித்தையில் அர்ச்சுனனுக்கு நிகரான கர்ணனைப் போரில் எப்படி வெல்வது, அவன் தர்மங்கள் அவனைச் சுற்றி நின்று பாதுகாக்கின்றனவே இதற்கு நீதான் ஓர் உபாயம் சொல்லவேண்டுமென்று அவனைத் தஞ்சமடைந்தால் கண்ணன் ஓர் கணத்தில் அதற்கு வழி சொல்லுகிறான்.
  • பாண்டவர்கள் கானகத்தில் சுற்றித் திரிந்த நாட்களிலும், குருக்ஷேத்திர யுத்தத்திலும் உறுதுணையாக நின்று உதவி செய்தவனல்லவா கண்ணன். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக அமர்ந்து கீதை உபதேசம் செய்து யுத்தத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வழிநடத்திக் கொடுத்தவன் கண்ணன்.
  • உடலுக்கு நோய் வந்தால் உற்ற மருந்து சொல்வான், ஈனக் கவலைகள் நெஞ்சை வாட்டுகின்றபோது அதற்கு இதம் சொல்லி ஆறுதல் கூறுவான். அவனை எப்போது அழைத்தாலும் சாக்கு போக்கு சொல்லாமல் அரை நொடிக்குள் வந்து சேர்வான். துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் உணவு அருந்த வருகிறேன் எனச் சொல்லி நீராடச் சென்றபொது, திரௌபதி கண்ணனை வேண்டியதும் அவன் உடனே வருகிறான். சூதாட்டு அவையில் துகிலுறியும்போது அவள் அழைக்கிறாள் அவன் வருகிறான்.
  • மழைபெய்யும்போது குடை போலவும், பசி நேரத்தில் கிடைக்கும் உணவு போலவும், எங்கள் வாழ்வுக்குக் கண்கள் எங்கள் கண்ணன் என்று பார்த்தன் நயந்து சொல்வான்.
  • கேட்ட பொருளை உடனே கொடுப்பான், கேலி செய்தால் பொறுத்துக் கொள்வான், மனம் துவண்டபோது ஆட்டங்கள் ஆடி, பாட்டுக்கள் பாடி துயரம் தீர்ப்பான், மனதில் கொண்ட எண்ணத்தைக் குறிப்பறிந்து புரிந்து கொள்வான், சுற்றிப் பழகும் அன்பர் கூட்டத்தில் இந்த கண்ணனைப் போல ஒரு தோழன் யாருக்குக் கிடைப்பான்?
  • மனத்தில் கர்வம் தோன்றினாலோ அவன் சொல்லாலும் செயலாலும் நமக்கு ஓங்கி ஒரு அடி கொடுப்பான், நெஞ்சில் கள்ளத்தைத் தேக்கி வஞ்சனை செய்தால் காறி உமிழ்ந்திடுவான். மகாபாரத யுத்த முடிவில் தேரோட்டி தேரிலிருந்து இறங்கி தேர் வீரனுக்கு வணக்கம் செய்ய வேண்டும்; ஆனால் கண்ணன் பார்த்தனை முதலில் இறங்கச் சொல்கிறான்; பார்த்தன் செருக்கோடு ஏன் அப்படி என வினவும்போது கண்ணன் அவனைக் கடிந்துகொள்கிறான். பின்னர் தான் பார்த்தனௌக்கு தன்னைக் காக்கவே கண்ணன் அவ்வாறு செய்தான் எனப் புரிகின்றது.  
  • சின்னக் குழந்தையைப் போல சிரித்து விளையாடிக் களித்திருப்பான், அவன் சொன்னபடி நடக்கவில்லை யென்றால் அவ்வளவுதான் அவன் தரும் தொல்லைக்கு அளவே இருக்காது.
  • அப்பேற்பட்ட கண்ணனின் நட்பு இல்லையேல் அவ்வளவுதான் இந்த சகத்தினில் ஏது வாழ்வு?
  • கோபம் தலைக்கேறி முகம் சிவக்க நிற்கும்போது ஏதோவொன்றைச் சொல்லி குலுங்கிச் சிரிக்கச் செய்திடுவான்; ஏதோவொரு மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ஏதோ சொல்லி மனம் தளிர்க்கச் செய்திடுவான்; பெரும் ஆபத்து நேரிடும் போது பக்கத்தில் நின்று அதனை விலக்கிடுவான்; நமக்கு ஏற்படும் தீமைகளையெல்லாம் விளக்கில் விழும் பூச்சிகளைப் போல விழுந்து அழிந்திடச் செய்திடுவான்.
  • உண்மை தவறி நடப்பவர்களை அவன் மன்னிக்கமாட்டான்; ஆனால் மற்றவர்கள் நன்மை கருதி அவன் மட்டும் நிறைய பொய்களைச் சொல்லுவான்; பெண்மைக்குரிய இரக்கமும், எதிர்பாராத காரியங்களைச் செய்வதால் பித்தனைப் போலும், பிறருக்கு இதந்தரும் தண்மை குணங்களும் கொண்டவன் தான் என்றாலும் சில நேரங்களில் தழலைப் போல் சுட்டு எரிக்கவும் செய்வான்.
  • சூதுவாதறியாத குழந்தை மனம் கொண்டவன்; நல்லவர்களுக்கு ஒரு தீங்கும் நேராது காப்பவன்; தீயோருக்கு விஷம்போல, நோய்போல, தீயினைப் போல கொடியவனாவான்.
  • அப்பேற்பட்ட குணநலன்களையுடைய இந்த கண்ணன் யார் தெரியுமா? வேதங்களை உணர்ந்து தவத்தில் சிறந்த முனிவர்களின் உணர்வில் இருக்கும் பரம்பொருளே அவன்! கீதையெனும் அறவுரை தந்து கீர்த்தி பெற விளங்கியவன். அவன்தான் என் தோழன் என்கிறார் பாரதியார் இந்தப் பாட்டில்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version