Home கட்டுரைகள் பாரதி-100: கண்ணன் பாட்டு (7)

பாரதி-100: கண்ணன் பாட்டு (7)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 7, கண்ணன் – என் தாய்

தாயே குழந்தையின் முதல் ஆசிரியர்

     இனி கண்ணன் பாட்டின் இரண்டாம் பாடலின் பொருளைக் காணலாம்.

     கண்ணன் – என் தாய். கண்ணனே என் தாயாக வந்தாள். அவளது விஸ்வரூபம்தான் என்னே! குழந்தையான என்னை வானம் எனும் தன்னிரு கைகளிலே அள்ளியெடுத்துத் தூக்கிப் பின்னர் பூமி எனும் தனது மடியிலே வைத்துத் தாலாட்டிப் உயிரும் உணர்வுமாய்ப் பாலூட்டி மனம் மகிழும் பற்பல கதைகளைச் சொல்லி அவள் மனம் களிப்பாள். அடடா! அவள் சொல்லுகின்ற கதைகள்தான் எத்தகையன? இன்பம் தரும் கதைகள், ஏற்றமும் வெற்றியும் தரும் சில கதைகள், துன்பச்சுவை நிரம்பிய கதைகள், தோல்வி வீழ்ச்சி எனும் கதைகள், என் வாழ்வின் பருவங்களுக்கேற்ப பொருத்தமான கதைகள் இப்படிப்பலப்பல சொல்லிக்கொண்டே யிருப்பாள். மனம் பரவசத்தில் திளைக்கும். தாய்மார்கள் பிள்ளைகளிடத்தே பேசவேண்டும் என்பதயும் விதவிதமான கதைகள் சொல்ல வேண்டும் என்பதையும், தாய்தான் குழந்தையின் முதல் ஆசிரியர் என்பதையும் பாரதியார் எவ்வளவு அழகாக விளக்கியுள்ளார் பாருங்கள்.

     குழந்தையாம் எனக்கு அந்தத் தாய் காட்டும் விளையாட்டுகள்தான் எப்படி? சந்திரன் என்றொரு பொம்மை, அதிலிருந்து தண்மையும் அமுதத்தின் சுவையும், பரந்து விரிந்த மேகக்கூட்டத்தோடு கூடிய மிக அழகான பொம்மை அது. பூமிக்கு இனிமைதருவது மழை. அந்த மழையைக் கொடுக்கும் சூரியன் என்றொரு பொம்மை, அந்த சூரியனின் முகத்தின் ஒளி அதனை விளக்க வார்த்தைகள் இல்லையே! வானவெளியெங்கும் வெள்ளி மணிகளை வாரி இரைத்தாற்போல நட்சத்திரக் கூட்டங்கள், அவற்றை எண்ணி எண்ணி மாளாமல் விட்டுவிட்டேன். இப்படி ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகளுக்கு அறிவியலையும், வானவியலையும் வானிலையியலையும் சொல்லித்தரலாம்.

     அடர்ந்த கானகத்தில் மோனத்தில் ஆழ்ந்தவைபோல் அசையாமல் அமர்ந்திருக்கும் மலைகளின் கூட்டம். நல்ல நல்ல நதிகள், அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும். மெல்ல மெல்ல விளையாடிக்கொண்டே விரிந்த கடலில்போய் விழும்; அந்த கடல் பொம்மையோ மிகப் பெரிது. அதற்கு எல்லையே காணமுடியவில்லை. அதன் மீது வீசுகின்ற அலை பாட்டு இசைக்கின்றது, அந்தப் பாட்டு ‘ஓம்’ என்று என் காதில் ஒலிக்கின்றது. இங்கே புவியியலின் தொடக்கப் பாடங்கள் தாயால் குழந்தைக்கு சொல்லித் தரப்படுகின்றன.

     பூமியின் மீதுதான் எத்தனை சோலைகள்; காடுகள்; அவைகளில்தான் எத்தனையெத்தனை வண்ண மலர்கள்; மரங்களிலெல்லாம் கனிவகைகள் இப்படி எத்தனை பொம்மைகள் எனக்கு. தின்பதற்குப் பண்டங்கள், செவிகளுக்கு நல்ல பாடல்கள்; பழகுதற்கு நல்ல தோழர்கள் அதுமட்டுமா “கொன்றிடுமென இனிதாய், இன்பக் கொடு நெருப்பாய், அனற் சுவையமுதாய் நன்றியல் காதலுக்கே இந்த நாரியர்தமை எனைச் சூழவைத்தாள்”.

subramanya bharathi

     வானில் திரியும் பறவைகள்; நிலத்தில் திரியும் விலங்குகள், கடல் முழுதும் மீன் வகைகள் இப்படி எத்தனை வகை தோழர்கள் அன்னை எனக்களித்தாள். எங்கெங்கு காணினும் இன்பமடா! அதை நினைத்துப் பார்க்கவும் கூடுவதில்லை.

கோடி வகை சாத்திரங்கள் வைத்தாள் அன்னை அவைகளை அறிந்திடும் வகை ஞானம் வைத்தாள், இவைகளுக்கிடையே நான் வேடிக்கையாய் சிரித்து மகிழ்ந்திடவே இடையிடையே பொய் வேதங்களையும், மதக் கொலைகளையும், அரசர்கள் செய்யும் கோமாளிக் கூத்துக்களையும், வயதில் முதிர்ந்தோர் சிலர் செய்யும் பொய்க்காரியங்களும், இளையோர் தம் கவலைகளையும் அன்னை இங்கே படைத்து வைத்தாள்.

     வேண்டியதனைத்தையும் அன்னை கொடுத்திடுவாள்; அவை வேண்டுமென நான் நினைக்குமுன்பாக அவை எனக்குக் கிடைத்திட வகை செய்வாள்; அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பாள்; அர்ச்சுனனைப் போல என்னை ஆக்கிடுவாள்; அந்த அன்னையை அவளது அருளை என்றென்றும் நான் பாடுகின்ற தொழிலைச் செய்வேன்; அப்படிச் செய்துகொண்டேயிருக்கும் எனக்கு அவள் நீண்ட புகழ்மிக்க வாழ்க்கையையும், நிகரற்ற பெருமைகளையும் அள்ளியள்ளித் தருவாள்.

     இந்துமத பக்தி மரபில் இஷ்டதெய்வத்தைப் பல *பாவங்களில் வழிபடுவது என்பது நெடுங்காலமாக வரும் விஷயம். தன்னைத் தொண்டனாகப் பாவிக்கும் தாஸ்ய பக்தி, நண்பனாக பாவிக்கும் ஸக்ய பக்தி, நாயகி பாவம் அல்லது மதுரபாவம் இவை பக்தி இலக்கியங்களில் காணப்படுகின்றன. சுந்தர் தம்பிரான் தோழர் என்ற உரிமையோடு சிவபெருமானிடத்தில் பேசுகிறார்.

திருநாவுக்கரசர் தொண்டனேன் என்ற நிலையிலேயே தொழுகிறார். ஆண்டாள் கண்ணனை நாயகனாகவே காண்கிறாள். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரும் தம்மை நாயகியாகக் கருதிப் பாடிய பாசுரங்கள் மிகப்பல. பெரியாழ்வார் யசோதையின் நிலையிலேயே கண்ணனை முழுதுமாக அனுபவித்திருக்கிறார். ஆனால் பாரதியார் இப்பாடலில் புதுவிதமாக கண்ணனைத் தன்னுடைய தாயாக பாவித்துப் பாடுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version