Home இலக்கியம் கட்டுரைகள் பாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு

பாரதி-100: பாரதியின் கண்ணன் பாட்டு

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 21, கண்ணம்மா – என் குழந்தை

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

     இப்பாடல் பராசக்தியைக் குழந்தையாகக் கொண்டு பாடிய பாட்டு. பைரவி இராகத்தில், ரூபக தளத்தில் அமைந்த பாடல். பராசக்தி நாராயணனின் தங்கை எனக் கருதப்படுபவர். கண்ணன் திருஅவதாரத்தின்போது, சிறையில் பிறந்த கண்ணனை நந்தகோபனின் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு அங்கேயிருக்கின்ற பெண் குழந்தையை வசுதேவர் கொண்டுவருகிறார். கம்சன் வழக்கம்போல அந்தப் பெண் குழந்தையின் கால்களைப் பிடித்து சுவற்றில் அடித்துக் கொல்ல முனைகிறான். அந்தப் பெண் குழந்தை அவன் கையிலிருந்து விடுபட்டு, விண்ணிற்குச் சென்று, பராசக்தியாக காட்சியளிக்கும். அந்த வகையில் பராசக்தி, பாரதிக்கு கண்ணனின் மறு வடிவும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பற்றி எப்படியெல்லாம் கொஞ்சுவாள் எனப் பாடல் சொல்லுகிறது. இனிப் பாடலைக் காணலாம்.  

[ஸ ஸ ஸ – ஸா ஸா – பபப

தநீத – பதப – பா

பபப -பதப – பமா – கரிஸா

ரிகம – ரிகரி – ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு

மனோபாவப்படி மாற்றி பாடுக. – என்று பாரதியார் பாடலின் தொடக்கத்தில் கூறியிருக்கிறார்.]

சின்னஞ் சிறு கிளியே, – கண்ணம்மா!

செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலி தீர்த்தே – உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்! … 1

பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா

பேசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத்திடவே – என் முன்னே

ஆடி வருந் தேனே! . … 2

ஓடி வருகையிலே – கண்ணம்மா!

உள்ளங் குளிரு தடீ!

ஆடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்

ஆவி தழுவு தடீ! … 3

உச்சி தனை முகந்தால் – கருவம்

ஓங்கி வளரு தடீ!

மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ! … 4

கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ!

உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா!

உன்மத்த மாகுதடீ! … 5

சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது

சஞ்சல மாகு தடீ!

நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு

நெஞ்சம் பதைக்கு தடீ! … 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் – என்நெஞ்சில்

உதிரம் கொட்டு தடீ!

என்கண்ணிற் பாவையன்றோ? – கண்ணம்மா!

என்னுயிர் நின்ன தன்றோ? … 7

சொல்லு மழலையிலே – கண்ணம்மா!

துன்பங்கள் தீர்த்திடு வாய்;

முல்லைச் சிரிப்பாலே – எனது

மூர்க்கந் தவிர்த்திடு வாய். … 8

இன்பக் கதைகளெல்லாம் – உன்னைப்போல்

ஏடுகள் சொல்வ துண்டோ ?

அன்பு தருவதிலே – உனைநேர்

ஆகுமோர் தெய்வ முண்டோ ? … 9

மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்

வைர மணிக ளுண்டோ ?

சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்

செல்வம் பிறிது முண்டோ ? … 10

இது ஒரு மிக மிக எளிய பாடல். விளக்கவுரை தேவையில்லை. குழந்தைகளுக்கான பாடல் அல்ல. தாய்மார்களுக்கான பாடல். ஐயமிருந்தால்

“கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்

கள்வெறி கொள்ளு தடீ!”

என்ற வரிகளை மீண்டும் படியுங்கள். இருப்பினும் இதன் விளக்கவுரையை நாளை காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version