Home இலக்கியம் கட்டுரைகள் பாரதி-100: கண்ணன் பாட்டு- கண்ணன் என் குழந்தை!

பாரதி-100: கண்ணன் பாட்டு- கண்ணன் என் குழந்தை!

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு பகுதி – 23
கண்ணம்மா – என் குழந்தை – விளக்கம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

என்பது வள்ளுவர் வாக்கு. அவ்வாறு தன்னுடைய பெண் பிள்ளையை ஊரார் மெச்சிப் புகழ்ந்தால், தாயானவள் மேனி சிலித்து, குழந்தையை உச்சி முகர்ந்து கர்வம் அடைவாளாம். குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டால் போதை ஏறுகிறதாம். கட்டித் தழுவினாலோ பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடுகிறதாம். அந்தக் குழந்தை அழுது, அதனால் முகம் சிவந்தால் மனதில் சஞ்சலம் ஏற்படுகிறது. ஏதொ கவலையால் குழந்தையின் நெற்றி சுருங்கினால் தாயின் நெஞ்சம் பதைபதைக்கிறது.

நெற்றி சுருங்கியதற்கே அப்படியென்றால் உன் கண்ணில் நீர் வழிந்தால் தாயின் நெஞ்சில் இரத்தம் வருகிறதாம். அழவேண்டாம் என் மகளே நீ என் கண்ணின் மணி அல்லவா? நீ என் உயிரல்லவா? என தாய் புலம்புகிறாள்.

உன்னுடைய மழலை சொல்லாலே என் துன்பங்கள் எல்லாம் தீர்ந்துபோகும். உன் முல்லை சிரிப்பாலே என்னுள்ளே மூர்க்க குணமெல்லாம் தீர்ந்துபோகும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் “செங்கீரைப் பருவம்” என்று ஒரு பருவம் உண்டு. இவ்விலக்கியத்தின் இரண்டாவது பருவம் செங்கீரைப் பருவமாகும். இது குழந்தையின் ஐந்தாம் திங்களில் நிகழ்வதாகும்.

“கீர் என்பதற்கு சொல் எனப் பொருள் கொண்டு இது குழந்தைகள் மழலையை விட இனிமையான பொருள் தெரியாத ஓசையை எழுப்பும் பருவம்” என்றும், “ஆடுக செங்கீரை எனப்பாடுவதால் குழந்தை ஒருகாலை உயர்த்தியும் ஒரு காலை மடக்கியும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி முகத்தை மேலே உயர்த்தி ஆடுதலாகிய பருவம்” என்றும், “அவ்வாறு ஆடும் பொழுது சுற்றத்தார் சிறந்த சொற்களை மழலை கூற வேண்டும் என்று வேண்டிக் கொள்வர்” என்றும் கூறுவர்.

எடுத்துக்காட்டாக புலவர் செங்கைப் பொதுவன் எழுதியுள்ள கொங்குக் குமரி பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.

முப்பா லருந்திடும் மூரலின் திருவாயில்
முலைப்பால்முன் தேக்கெறித லால்
முத்துமணிக் காழ்வடம் முறைமலர் மாலைகள்
முழுதும் நனைந்தொழுகிடும்
அப்பால் அமிழ்தூறல் ஆறாய்ப் பெருகியே

அருகோடக் காவிரித்தாய்
அலைக்கைகள் ஏந்தியே ஆரப் பருகிடும்
அருமருந் தன்ன மகளே
தப்பாமல் செந்தமிழ் தன்னைப் பழகிடத்

தமிழ்மக ளாகவந்தாய்
தமிழவை தன்னிலுன் தலைவன் பயின்றதால்
தானே அமைந்து விடுமோ!
செப்பாமல் நீயிருந் தாலது வாராது

செங்கீரை யாடி யருளே
தேடாத வர்க்குமருள் செய்யும்கொங் குக்குமரி
செங்கீரை யாடி யருளே 12

நீ சொல்வதைப் போல இன்பக்கதைகளெல்லாம் கதைப் புத்தகங்கள் சொல்வதுண்டோ? அன்பைப் பொழிவதில் உன்னைப் போல ஒரு தெய்வம் உண்டோ? நான் நெஞ்சோடு அணிகின்ற வைரமலைகள் உனக்கு ஈடாகுமா? சிறப்பாக வாழ்வதற்கே உன்னைப் போல செல்வம் வேறு ஏதேனும் உண்டா?

இதனைவிட சிறப்பாக தன்னுடைய பென் குழந்தையைப் பற்றி ஒரு தாயால் சொல்ல முடியுமா?

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version