
– B. R. கீதா
வள்ளலும் இளவலும் வனத்திற்குச் செல்ல ஆயத்தமாகி விட்டனர். மண்மகள் சீதையும் மரவுரி அணிந்துவிட்டாள். தாய்மார் இருவரும் தடுக்க இயலாமல் தவித்து நிற்கின்றனர். கோசலையின் துயரமோ சொல்லத்தரமன்று; கன்றினைப் பிரிந்த பசுவாய்க் கதறுகின்றாள். சுமித்திரை அவளுக்கு ஆறுதல் கூறவும் வழியின்றித் தன்னிலை நொந்து நிற்கின்றாள்.
இந்தக் காட்சி கம்பன் கற்பனையில் விரிந்தது. அவன் திறமையும் உள்ளப்பாங்கும் கற்பவர் போற்றும் கவிதைப் பூக்களாய் மலர்ந்து மணம் பரப்பின. அப்பூக்களினின்றும் வடியும் தேனை மாந்தி மகிழத் தமிழர் யாவரும் தலைப்பட்டனர்.
கம்பராமாயணம் என்னும் கரும்பை எந்தப்பக்கம் சுவைத்தாலும் இனிக்கவே செய்யும். தீபாவளி இனிப்போடு, கம்பசித்திரம் என்னும் கரும்புச் சாற்றையும் பருகலாமே!
கம்பன் பாடிய பன்னீராயிரம் கவிதைகளில் இலக்கிய அன்பர்களின் இதயம் கவர்ந்த பாடல்கள் பல; பாத்திரங்கள் பல; காட்சிகள் பல; இவற்றைப் பட்டியலிட்டால் அடுத்த தீபாவளியே வந்துவிடும். எனவே, “நகர் நீங்கு படலத்தில்” இராமன் தாயாரிடம் விடைபெறும் காட்சியைப் பார்க்கலம்.
அயோத்தியா காண்டத்தில், “நகர் நீங்கு படலம்” நம் நெஞ்சை விட்டு நீங்காத படலம். ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் இங்கு கம்பன் கைவண்ணத்தில் அழகோவியமாய் மிளிர்கின்றன. வாக்குத் தவறாத தயரதன் மாண்பு, அவன் இராமன்பால் கொண்ட பாசத்தின் தவிப்பு, இருதலைக்கொள்ளி எறும்பென அவன் துடித்த துடிப்பு, தன்னலமே உருவான கைகேயியின் கல்நெஞ்சு, அநீதி பொறுக்காத இளவலின் சீற்றம், கணவரைப் பிரியவொண்ணாத கற்பரசி சீதையின் ஏற்றம், அயோத்தி மக்களின் ஆற்றொணாத் துன்பம், இவை அனைத்தையும் காட்டும் கம்பன், ஒரு மாதரசியின் மாண்பை இரண்டே பாடல்களில் வெளிப்படுத்தி, அவளை அனைவருக்கும் மேலாக உயர்த்திவிடுகிறான்.
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்”
என்பது வள்ளுவன் வாக்கு. அத்தகைய நிறைமொழி மாந்தர் என்றும் தம் நிலையில் திரியாதவர். எப்போதும் அறத்தின் வடிவாகவே இலங்குபவர். கவியிற்பெரியவனான கம்பன் அம்மாந்தருள் ஒருவராக இங்கு சுமித்திரையைக் காண்கிறான்.
எப்போது துன்பம் மிகுந்தபோதிலும், நம்மை அரவணைத்து, அமைதி தருபவை ஆன்றோர்தம் அறிவுரைகள்தாம். நயத்தக்க நன்மொழிகளை நிறைமொழி மாந்தரால் மட்டுமே நல்கமுடியும்; நம்மை நல்வழிப் படுத்தவும் முடியும்.
எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் மாறுபடாதவர்களே நல்லவர்கள். அவர்கள் பகரும் அறிவுரைகள் எக்காலத்துக்கும், எல்லாருக்கும் ஏற்றவையாகவே அமைந்துவிடுவன. கொதிக்கும் பாலில் சிறிது நீர் தெளித்தார்போல், அவர்தம் நன்மொழிகள் நம்மை நெறிப்படுத்த வல்லன. நம் உள்ளப்பாங்கினைப் பண்படுத்தவல்லன.
சுமித்திரையும் இங்கு அப்படிப்பட்ட மாண்புடையவளாகத் திகழ்கிறாள். ஆதிகாவியமான வான்மீகி இராமாயணத்தை அடியொற்றியே செல்லும் கம்பன், ஆங்காங்கே தன் முத்திரைகளைப் பதிக்கவும் தவறமாட்டான்.
இராமனுடன் வனம்புக நின்ற மகன் இலக்குவனை நோக்கி, “வனம் செல்ல வேண்டும் என்று உனக்கு எந்த ஆணையும் இல்லை. என்றாலும் உனக்கு வனம்தான் இனி அயோத்தி; இராமனே உன் தந்தை தசரதன்; சீதையே உன் தாய்; இனி இவ்வாறே நினைத்து ஒழுகு. இனி, நீ இங்கு நிற்பதும் தவறு, சென்று வா.”
“இராமனுக்குத் தம்பி என்ற முறையை மறந்துவிடு. ஏவலாள் ஆகவே நீ அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். வையத்தைக் காக்கவே கோசலை இராமனைப் பெற்றாள். அதுபோல், இராமனுக்குத் தொண்டாற்றிடவே உன்னை நான் பெற்றெடுத்தேன். இராமன் அயோத்தி திரும்பினால் நீ வா; இல்லை எனில், நீ முன்னால் இறந்துவிடு.”
இவை சுமித்திரையின் ஆசியுரைகள்.
“ஆகாத தன்றால் உனக்குஅவ் வனம் இவ்வயோத்தி
மாகாதல் இராமன்அம் மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர்த்தாயர்நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்ரலும் ஏதம் என்றாள்”
“பின்னும் பகர்வாள் மகனேஇவன் பின்செல் தம்பி
என்னும் படியன்று அடியாரின் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன்வந்திடில் வாஅ தன்றேல்
முன்னம் முடிஎன் றனள்வார்விழி சோர நின்றாள்”.
தன் மகன் இராமனுக்கே அடிமை என்று வழங்கிய வள்ளல் சுமித்திரை. அவள் சொற்களால் எவரையும் துன்புறுத்தியதில்லை. தன் தவப் புதல்வர் இருவரையும் கோசலை மகனுக்கும், கைகேயி மகனுக்கும் ஈத்துவந்த பெரியவள். தசரதனின் பட்டத்தரசியரில் அறிவுச்சுடர் வீசி நின்ற அற்புதத் திருமகள். அடக்கத்தின் திருவுரு.
அவளுக்கு மீண்டும் ஒரு குறளையே காணிக்கையாக்கி நிறைவு செய்யலாம்.
“நிலையின் திரியாது அடங்கியார் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது”
தன் நிலையை விட்டு என்றும் பிறழாத நேர்மையுடையவர்கள் மலையைவிடப் பெரியவர்கள் என்பார் தெய்வப் புலவர். நிறைமொழி மாந்தருள் ஒருவராகத் திகழும் சுமித்திரையும் அத்தகையவளே – என்று கூறாமல் கூறித் தன் கவிதையில் உயர்கிறான் கம்பன்.
ஞானச் சுடரொளி நம்மிடமும் பரவட்டும்!