— திருப்பூர் கிருஷ்ணன்
இந்திரா செளந்தரராஜன் அவர் வசிக்கும் மதுரையில் அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி திடீரென ஹொசூரிலிருந்து, லா.ச.ரா. சப்தரிஷி மூலம் எனக்குக் கிடைத்தது.
இந்திரா செளந்தரராஜனின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் க்ளிக் ரவியைத் தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப் படுத்திக் கொண்டேன்.
அதற்குள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் செய்தி இடம்பெறத் தொடங்கி விட்டது.
65 என்பது காலமாகிற வயதல்ல. இன்னும் நிறைய எழுதவும் பேசவும் திட்டங்கள் வைத்திருந்தார்.
ஆனால் இயற்கையின் திட்டம் வேறுமாதிரி அமைந்து விட்டது.
என்றாலும் இறுதி நாள் வரை வற்றாத ஊற்றெனத் தன்னுள் பொங்கிய எழுத்தைப் பதிவு செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார்.
அவர் சோம்பேறி அல்ல. ஓயாத உழைப்பாளி. நாள்தோறும் எழுதுபவர்.
அவரை எப்போது முதன்முதலில் சந்தித்தேன் என்று யோசித்தேன்.
ஆனந்தவிகடன் பரிசு பெற்ற மனிதன் என்ற அற்புதமான நாவலை எழுதிய ஏ.எஸ். ராகவன் பல ஆண்டுகளுக்கு முன்னால் காலமானபோது அவர் குடும்பத்தினரிடம் துயரம் விசாரிக்கப் போயிருந்தேன்.
அங்குதான் இந்திரா செளந்தரராஜனை முதன்முதலாகப் பார்த்தேன். ஏ.எஸ். ராகவனின் நெருங்கிய உறவினர் அவர் என்பதைப் புரிந்துகொண்டேன்.
அவரைக் கடைசியாக எப்போது சந்தித்தேன் எனவும் யோசித்தேன்.
சென்னையைச் சார்ந்த நங்கநல்லூரில் மகாசுவாமிகள் சரணாலயம் எழுப்பப் பட்டுள்ளது. ஜி.ஆர். மாமா என்பவர் அதன் பின்னணியில் இயங்குகிறார்.
அண்மையில் அங்கு நடைபெற்ற விழாவில் பேச நானும் இந்திரா செளந்தரராஜனும் இன்னும் சிலரும் அழைக்கப் பட்டிருந்தோம். அங்குதான் அவரை நான் கடைசியாகச் சந்தித்தது.
தளர்ந்திருந்தார். வயதை மீறிய முதுமை அவரிடம் தென்பட்டது. சில உடல்நலப் பிரச்னைகள் அவருக்கு இருந்தன என்பதை இப்போது அறிகிறேன்.
அமுதசுரபியில் அவரது சிறுகதைகளை வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன்.
சிறுகதை வெளிவந்ததும் மறக்காமல் நன்றி தெரிவித்துக் குறுஞ்செய்தி அனுப்புவார். அவரது பண்பாட்டை மனத்தில் மெச்சிக் கொள்வேன்.
கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, சோ போன்ற சிலர் எழுத்து பேச்சு என இரண்டு கலைகளிலும் தேர்ச்சியுடன் திகழ்ந்தவர்கள்.
அந்த வரிசையில் சேர வேண்டிய இன்னொரு பெயர் இந்திரா செளந்தரராஜன்.
மேலே சொன்னவர்கள் அரசியல் மற்றும் இலக்கியம் பேசினார்கள் என்றால் இவரோ முற்றிலும் ஆன்மிகத்தோடு தன் பேச்சின் எல்லையை வரையறுத்துக் கொண்டார்.
இன்று அவரைப் போன்ற ஆன்மிகப் பேச்சாளர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள்.
சுஜாதா, பாலகுமாரன் போல இவருக்கும் ஒரு பெரிய வாசகர் வட்டம் உண்டு. இவரது மகாசுவாமிகள் பற்றிய உரைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
ஆவிக்கதை, மர்மக்கதை என்றெல்லாம் கொஞ்சம் இவர் எழுதினாலும் அந்தச் சின்னச் சிமிழில் இவரை அடைத்துவிட இயலாது.
உண்மையில் பி.வி.ஆர்., மகரிஷி போன்றோரைப் போல ஒரு சிறந்த சமூக நாவலாசிரியராகவே இவரை மதிப்பிட வேண்டும்.
தான் அவ்விதம் மதிப்பிடப் படுவதைத்தான் அவர் விரும்பினார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஒருமுறை மதுரையில் வசிக்கும் நெல்லை பாலு அவர்கள் ஒரு சொற்பொழிவுக்காக என்னை அழைத்தபோது நான் மதுரை சென்றேன்.
அப்போது என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்திரா செளந்தரராஜன் தன் இல்லம் வருமாறு அன்புடன் அழைத்தார்.
நான் போனபோது அவர் வீட்டினர் அளித்த விருந்துபசாரம் மறக்க இயலாதது. அவர் மனைவியையும் வெளிதேசத்திலிருந்து அங்கு வந்திருந்த அவர் மகளையும் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.
தான் எழுதுவது மாடியில்தான் என்று சொல்லி என்னை அங்கு அழைத்துச் சென்றார். அவரின் கிருஷ்ண ஜாலம் என்ற புத்தகத்தையும் அன்பளிப்பாக வழங்கினார்.
அவரைப் பற்றிய இன்னும் பல எண்ணங்கள் மனத்தில் அலைமோதுகின்றன.
மலர்ந்த முகமும் எப்போதும் அன்பு மயமாகப் பேசும் பேச்சுமாக வாழ்ந்து மறைந்த அவர் நினைவுகள் என்றும் என் மனத்தில் மணம் வீசிக் கொண்டிருக்கும். அவர் தம் எழுத்துகளில் வாழ்வார்.