spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்களாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்!

தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்களாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்!

- Advertisement -

ilakkuvanar

கல்விப் பணிகளுடன் களப்பணிகளும் இதழ்ப் பணிகளும் ஆற்றித் தமிழை வளர்த்தும் பரப்பியும் காத்தும் வாழ்ந்த ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி இலக்குவனார் மட்டுமே மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ்ப் பொழிவுகள் ஆற்றி மக்களிடையே தமிழைப்பரப்பிய செம்மல் இலக்குவனார். படிக்கும் பொழுதே தனித்தமிழ்ப் பாவியம் படைத்த பாவலர் இலக்குவனார். பயின்று கொண்டே தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய தொல்காப்பிய அறிஞர் இலக்குவனார்.

குறள்நெறி, சங்க இலக்கியப் பரப்புரைப் பணிகளை இளமையில் தொடங்கி. வாணாள் இறுதி வரை அவற்றைக் கைவிடாமல் இருந்த சங்கத்தமிழ்க் காவலர் இலக்குவனார். சொற்பொழிவுகள், நூல்கள், கட்டுரைகள் மூலம் மட்டுமல்லாமல் தமிழ் முழக்கங்கள் மூலமும் தமிழ் உணர்ச்சியை மக்களிடையே பரப்பிய தமிழ்ச்சான்றோர் இலக்குவனார்.

பேராசிரியர் சி.இலக்குவனார் உருவாக்கித் தமிழ் உலகில் உலவ விட்ட முழக்கங்கள் நூற்றுக்குமேல் இருக்கும். இம்முழக்கங்களுடன் பாரதியார், பாரதிதாசன் பாடல் வரிகளையும் முழக்கங்களாகப் பயன்படுத்தி மக்களுக்குத் தமிழ் உணர்வு ஊட்டுவார் இலக்குவனார். அவற்றுள் ஏறத்தாழ 70 முழக்கங்களை ‘இதழியல் அறிஞர் இலக்குவனார்’ என்னும் கட்டுரையில் அளித்துள்ளேன். இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே நாம் காணலாம்.

தனித் தமிழ்க் காப்பு முழக்கங்கள்

தமிழில் பிற மொழிச்சொற்களையும் பிற மொழி எழுத்துகளையும் கலந்ததால்தான் இந்திய நிலப்பரப்பு முழுமையும் இருந்திருக்க வேண்டிய தமிழ் எல்லை சுருங்கித் தமிழ்நாட்டளவில் இருக்கிறது என்பதைப் பல இடங்களில் இலக்குவனார் உணர்த்தியுள்ளார். இவ்வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல் நாமும் இப்பொழுதும் தமிழ்க்கொலை புரிவது கண்டு உள்ளம் நைந்தார் அவர். கட்டுரைகள், நூல்கள் முதலியவற்றை முழுமையாகப் படிக்க இயலாதவர்களுக்கும் தமிழ் உணர்வை உள்ளத்தில் பதிக்க விரும்பினார். எனவே, தாம் நடத்திய இதழ்களில் பக்கங்களின் இறுதியில் தமிழ் முழக்கங்கள் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டார். இது நல்ல பயனை அளித்தது. இவரது முழக்க வரிகள் படைப்பாளர்களின் கவிதைகளிலும் சொற்பொழிவுகளிலும் இடம் பெறலாயிற்று.

தமிழ் வழிக் கல்விக்கான முழக்கங்கள்:

தமிழ்வழிக்கல்வியை நாளும் வலியுறுத்திய நற்றமிழறிஞர் இலக்குவனார். ‘பயிற்சிமொழிக்காவலர்’ என்று அதனால்தான் அவருக்குப் பட்டமளித்துச் சிறப்பித்தனர். தமிழ்ப்பயிற்சி மொழிக்காகத் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு ஏற்பாடுசெய்து அதனால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படிச் சிறை செய்யப்பட்டவர் தமிழ்ப்போராளி இலக்குவனார்.

பயிற்சி மொழியைத் தெரிவு செய்யும் உரிமையை மாணவர்க்கு வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இலக்குவனார். தமிழ் மட்டுமே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழிகள் மொழிப்பாடங்களாகக் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். எனவே,
பயிற்று மொழியில் உரிமை பாழ்படுத்தும் கல்வியை! – என்னும் முழக்கத்தைப்பரப்பித் தமிழ்வழிக்கல்விக்கான உணர்வை ஊட்டினார்.

தாய்மொழியில் பயிலாததால்தான் நம் நாட்டில் நோபள் பரிசு பெறும் அறிஞர்கள், அறிவியலறிஞர்கள், சிறந்த தலைவர்கள் உருவாகவில்லை என்று வருத்தப்பட்டு உரைத்தார். எனவே, பைந்தமிழைப் பல்கலைக்கழகப் பாடமொழியாக்குக! – என வலியுறுத்தினார்.

மேற்குறித்த இரண்டும் அரசிற்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்துவதற்காக மக்களிடையே பரப்பியவை. மக்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழிக்கல்வியில் சேர்க்க வேண்டும்; அதற்கு மாணாக்கர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தங்களைத் தமிழ் வழிக்கல்வியில் சேர்க்குமாறு வலியுறுத்த வேண்டும் என்பதற்காகப் பின்வரும் முழக்கத்தைப் பரப்பினார்.

தாய் மொழியில் பயின்று தக்கோராக வாழ்மின்! தக்கவராக வாழ அயல்மொழிக்கல்வி உதவாது. தாய்மொழிக்கல்வியே உதவும், நமக்குத் தமிழ்வழிக்கல்வியே உதவும் என இதன் மூலம் உணர்த்தினார்.

அப்பொழுது தமிழ்வழிக்கல்வி பள்ளிகளில் இருந்தது.கல்லூரியில்தான் இல்லாமல் இருந்தது. கோயம்புத்தூரில் மட்டும் தமிழ்வழிப்பட்டப்பிரிவைத் தொடங்கிய அரசாங்கம், இலக்குவனாரின் முயற்சியால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு நாடு முழுவதும் கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வியை அறிமுகப்படுத்தியது. அங்கே படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்தது.

ஆனாலும், கல்வி வணிமாக மாறி, அரசே இதனை ஊக்குவிக்கத் தொடங்கிய பின்னர் இலக்குவனார்போன்ற அரசிற்கு எடுத்துரைக்கும் துணிவான அறிஞர் இன்று இல்லாமையால் நாம் பள்ளிக் கல்வியிலேயே தமிழை இழந்து கொண்டுள்ளோம்.

பயன்பாட்டுத் தமிழ்

பயன்பாட்டு மொழியாகத் தமிழ் எல்லாத் துறைகளிலும் சிறப்புற இருத்தல் வேண்டும் என்பதைத் தமிழ்ப்போராளி இலக்குவனார் எந்நாளும் வலியுறுத்தி வந்தார். எழுதுவதுபோல் பேசினால்தான் மொழி வாழும்; பேசுவதுபோல் எழுதினால் மொழி அழியும் என்பது அறிஞர்கள் கண்டறிந்து உணர்த்திய உண்மை. இதனைப் பேராசிரியர் இலக்குவனாரும் வலியுறுத்தினார். தமிழ்க்கடல் மறைமலையடிகள் வழியில் தனித்தமிழ் அறிஞராகத் திகழ்ந்த அறிஞர் இலக்குவனார் மக்களிடையேயும் பிறமொழிக் கலப்பின்றி எழுதவும் பேசவும் வலியுறுத்தினார்.

தமிழிலே உரையாடுக! தமிழிலே எழுதுக! தமிழிலே பெயர்களிடுக! – என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்ச் சொற்களிருக்க வேற்றுச் சொற்களை விரும்புவதேன்? – என வினா தொடுத்து உணர்வு ஊட்டினார்.

அயல்மொழிச் சொற்கலப்பு அழிக்கும் தமிழை! – என்னும் வரலாற்று உண்மையை மக்கள் மனங்களில் பதியவைத்தார்.

தமிழ் வீட்டு மொழியாகவும் நாட்டு மொழியாகவும் திகழ வேண்டும் என வலியுறுத்தினார். அன்றாடப் பயன்பாட்டில், உரையாடலில், கல்வியில், வழிபாட்டில், இசையில், கலைகளில் என எங்கும் எதிலும் தமிழே நம் பயன்பாட்டு மொழியாக இருக்கவேண்டும் என வற்புறுத்தினார்.

தமிழ் பயன்பாட்டிலிருந்து நீங்கிய இடங்களில் எல்லாம் தமிழ் மொழி சிதைந்து, புது மொழி தோன்றி தமிழ். பயன்பாட்டுப் பரப்பில் குறைந்து போனதால் அங்கெல்லாம் தமிழர்கள் மறைந்தைமையச் சுட்டிக்காட்டினார். எனவே, தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு என்றார். இதுபோல் தமிழ் மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து பொருளியலில் உயர்ந்தால்தான் தமிழ் மக்களையும் அவர்கள் பேசும் தமிழையும் உலக மக்கள் மதிப்பர். எனவே, அறிவில் உயர்ந்து வினையில் சிறந்து தமிழர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழை வாழச் செய்ய வேண்டும் என்றார். எனவே, தமிழர் வாழ்வே தமிழின் வாழ்வு என்றார். பின்னர் இரு முழக்கங்களையும் இணைத்து ஒரு முழக்கமாக்கினார்.

கிரந்தப் பயன்பாடு கூடாது, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பனவும் கூடா. இந்தித் திணிப்பு கூடாது. ஆங்கில முதன்மை அகற்றப்பட வேண்டும் என்பனபோல் தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ்க் காப்பிற்காகவும் பல முழக்கங்களை உருவாக்கிப் பரப்பியவர் தமிழ்நலப் போராளி இலக்குவனார். அவரது நினைவு நாளில் நாம் இவற்றைக் கடைப்பிடித்துத் தமிழைக் காத்து நன் மாந்தர்களாகத் திகழ்வோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன் ([email protected])

[03.09.1973 தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் மறைந்த நாள். அவர் நினைவாக இக்கட்டுரை]

1 COMMENT

  1. தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரை நினைவுகூர்ந்து கட்டுரையைவெளியிட்டதற்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe