கோபதாபக்கார யோகமுனி பரசுராமன் கதை, மகாபாரத உப கதைகளில் வலிமையானது.

தனக்கென தனி அவதாரம் கண்டவன் பரம வீரன் பரசுராமன். அவன் சீரிய முனிவனா, சீறிப் பாயும் சிங்கமா? கடமைக் கண்ணனா? ….. பெற்றோர்க்குப் பெரும் பணிவு, அவர்கள் இட்ட ஆணையை இட்டு நிரப்புவது, நட்புக்கு நாயகன், இஷ்டமுடன் ஏற்ற சபதத்தை நிறைவேற்ற கோடரிக் காம்புடன் அரசர்களைத் தேடி அலைவது…. அப்பப்பா பரசுராமன் நம்மைத் திணற வைக்கும் பாத்திரம்! அவன் கோபத்தைக் கண்டு அரள்கிறோம்-அவன் பாசத்தைக் கண்டு நெகிழ்கிறோம்-அவனின் வேத வேதாந்தக் கருத்துக்களைக் கேட்டு சிலிர்க்கிறோம்-கையில் உள்ள பரசுவையும் தானம் தந்து மகிழ்வதைப் பார்த்துப் பரிதவிக்கிறோம்.

உணர்ச்சிகள் ஓலமிடும் இந்தப் பாத்திரத்தை மையப்படுத்தி அவாண்ட் நாடக அமைப்பு மேடை ஏற்றிய ‘பரசு’ நாடகம், சிங்கப்பூர் நாடக வரலாற்றிற்குப் புதிய பக்கம் எழுதி தந்திருக் கிறது. ரசனைக்குப் புதிய பாதை திறந்திருக்கிறது.

பரசுராமரையும், அவரை சுற்றிச் சுழலும் கதா பாத்திரங்களையும் முழுமை குறையாமல் மேடை ஏற்றி இறக்குவது எளிமையே அல்ல. அத்தகைய கடுமைப் பணியைத் தூக்கிச் சுமந்து நிறைவுடன் நிறைவேற்றி இருக்கிறார் இயக்குனர் ஜி.செல்வா. மன நிறைவுடன் பாராட்டுவோம்.

நாடகத்தின் அடிக் கல், மேடைக் கதை, வசனங்கள்! கவிதை போல் அவர் காட்சிகளை நகர்த்தும் அழகில் நாம் நேரத்தை மறக்கிறோம். பாத்திரங்களின் சொல்லாடல்கள், சுகமோ சுகம்!

கதா பாத்திரங்களின் பாய்ச்சல், மோதல், காதல் ரம்யங்கள், பாசப் பிடிப்புகள், வீரச் செறிவுகள், சோகக் குமுறல்கள் என நவரசச் சாறு நாடகம் முழுவதும்! நாடகத்தின் உயிர் நாதமான கதைக் காட்சிகள் உரிய முறையில் அறிமுகமாகின்றன. வசனகர்த்தா முனைவர். இளவழகன் முருகன், ஒவ்வொரு காட்சியிலும் உயிர்ப்புடன் உமிழும் வசனங்கள், நாடகத்தின் ஜீவ நாதம்! அயோத்தி ராமன்- மிதிலை நாயகியுடனான சல்லாபம், பரசுவோடு மோதத் துணியும் ஜானகியின்பாங்கு, அம்பையின் அர்த்தமுள்ள ஆர்ப்பாட்ட அலறல்கள், பீஷ்மரின் தடுமாற்றம், துரோணரின் யாசிப்பு மற்ற பல அனைத்து நிகழ்வுகளும் இளவழகனுக்கும், செல்வாவுக்கும் பெருமை சேர்ப்பன.

நடிப்பில் யாருமே சோடை போகவில்லை.அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். பாத்திர முக்கியத்துவம் பெற்ற பரசு, ஜமதக்கினி, அவர் மனைவி, கார்த்த வீரியன், அம்பை, ராமர், சீதை தவிர, மேடை முழுதும் ஆடி, ஓடி, விழுந்து எழுந்த அரூப உருவங்கள் கூட கதைச் சூழலுக்கு சுருதி சேர்த்தனர். .இன்னொருவருக்கு த் தனி மரியாதை தந்தே ஆக வேண்டும். . குதிரை மேய்க்கும் சிறுவன், நாடகத்தின் சூத்ரதாரி! குறும்பு கொப்பளிக்க,வளைந்து நெளிந்து வாய் ஜாலம் காட்டிய அப் பாத்திரம், நாடகத்தில் தொடர்ந்த நீள் வசனக் காட்சிகளுக்கு இடையே பெரிய ரிலீப்! அவர் வழி பரசுவின் கதையை லாவகமாக நகர்த்திச் செல்லும் அழகே அழகு!

நம் சிங்கையின் வசதிமிகு எஸ்பிளனேடு தியேட்டரை முழுமையாகப் பயன்படுத்தத் தகுந்த தொழிற் திறம் தேவை. எளிய அதே நேரத்தில் ஆழமான எபக்டுகளை நாடகம் முழுவதும் தூவ விட்டிருக்கிறார் டைரக்டர் செல்வா. காட்சிக்கேற்ற இசை, நாடகத்திற்கு உயிர் கொடுத்தது. எளிய சில பின்னொலிகள், பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம் என நம்புகிறேன்.

நாடகம் முழுவதையும் மனத்தில் தேக்கி அதனை ரசிக உள்ளங்களுக்குக் காணிக்கையாக்கிய இயக்குனர் செல்வா,, நெஞ்சில் நிலைக்கும் கதை வசனங்கள் தந்த முனைவர் இளவழகன், பொறுப்புணர்வுடன் பெரிய, சிறிய பாத்திரங்களைப்c பரிமளிக்கச் செய்த கலைஞர்கள் அனைவரும் நம் பொக்கிஷங்கள்! –

– ஏ பி ஆர். (ஏ.பி.ராமன், சிங்கப்பூர்)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...