அன்பு செய்வோம்… சிந்தனைக்கு சில வரிகள்!

‘”உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏங்குகிறது.தான் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறது.சரியான அன்பும்,அங்கீகாரமும் பெறப்பட்டு வளரும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான மனநலத்துடன் வளர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள பிள்ளைகளாக மாறுகிறது.

சிறு வயதிலிருந்து இந்த அன்பும், அங்கீகாரமும் கிடைக்காமலே வளரும் குழந்தைகள் ஒருவித தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்து பிறகு இளைஞனாக வளர்ந்த பின் அவ்விரண்டையும் ஏதோ ஒரு விதத்தில் பெறும் முயற்சியில் ஈடுபட்டு அது கிடைக்காத பட்சத்தில் மனதிற்குள் வன்மம் உருவாகி சமூகம் விரும்பாத செயல்களை செய்யும் அளவிற்கு செயல்களில் ஈடுபடும் மனநிலைக்கு உட்படுகிறான்.

வளர வளர நம்மிடையே அன்பு செய்வதில் ஏனோ பாரபட்சம் ஏற்படுகிறது.அன்பு செய்வது என்பது அகச்செயல் ஆகும்.அன்பு செய்வதால் தனது அகம் மலர்கிறது.அன்பு செய்வதால் ஆயுளும், ஆரோக்கியமும் கூடுகிறது.யாரும் அன்பு செய்வது போல ரொம்ப நாட்களுக்கு நடிக்க முடியாது.இந்த உலகம் அன்பினால் தான் இயங்கி கொண்டிருக்கிறது.

அன்பில் பல வகை உள்ளது
ஒரு தொழிலாளி முதலாளி மீது காட்டும் அன்பு விசுவாசம்.
முதலாளி தொழிலாளி மீது காட்டும் அன்பு பட்சாதாபம்.தாய் தனது பிள்ளையிடம் காட்டும் அன்பு பாசம்.
பசியால் வாடும் ஒருவனிடம் காட்டும் அன்பு கருணை.
ஒரு இளைஞன் மனம் விரும்பும் பெண்ணிடம் காட்டும் அன்பு காதல்.
உலகில் வாழும் எல்லா உயிர்களிடம் காட்டும் அன்பு ஜீவகாருண்யம்.
ஒரு பக்தன் கடவுளிடம் காட்டும் அன்பு பக்தி.
ஒரு ஆசிரியர் மாணவனிடம் காட்டும் அன்பு அக்கறை.

இப்படியாக அன்பில் பல வகைகள் உள்ளது.மனம் விசாலமடைய இந்த அன்பானது தனது குடும்பம் தாண்டி, உறவுகள் தாண்டி எல்லோர் மீதும் அன்பு செலுத்தத் தூண்டுகிறது.நமது வள்ளலார் அவர்கள் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் ” என்கிறார்.இவரது அன்பு மனிதர்களை கடந்து அன்பு செய்ய மனம் ஏங்குகிறது.

தாவரங்களுக்கு உயிர் உண்டு என விஞ்ஞானம் மெய்பித்திற்கிறது. நமது விவசாய பண்ணைகளில் வளர்க்கப்படும் பயிர்களிடமும், மரங்களிடமும் அன்பாக பேச மகசூல் பெருகுகிறது என விஞ்ஞானம் கூறுகிறது. பயிர்களிடையே தினமும் இசையை உண்டாக்கினால் விளைச்சல் பெருகுகிறது.

இதைப் படித்த போது இளவயதில் எனது தந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.

“கரம்பை சுற்றினால் கால் பணம் “என்பார்.கரம்பை என்பது நெற்பயிர் பயிரிடப்பட்ட இடம் ஆகும்.அவர் தினமும் எழுந்து சென்று அந்த வயல்வெளியின் நான்கு பக்கமும் உள்ள வரப்பைச் சுற்றி வருவார்.அந்த பயிரின் வளர்ச்சி நிலையை ஆராய்வார்.அந்த பயிர்களோடு பேசுவார்.என்னையும் திட்டுவார்.வயலை சுற்றிப் பார்த்து விட்டு வா என்பார்.

அப்பொழுது அவர் கூறியது புரியவில்லை.அவர் விஞ்ஞானம் படித்தவர் அல்ல. ஆனால் தினமும் வயலைச் சுற்றி வந்தால் பணம் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் தான் கரம்பைச் சுற்றினால் கால்பணம் என ரிதமிக்காக கூறியிருக்கிறார்.

பயிர்களிடம் அன்பு செலுத்தினால் விளைச்சல் பெருகும் என வளர்ந்து வந்த கல்லூரிக் காலங்களில் படித்த போது தான் இந்த விஞ்ஞான அறிவை படிக்காத விவசாயியான எங்கள் கிராம மக்கள் மெய்ஞானத்தால் அறிந்திருந்தனர் என்பதை எண்ணும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

அன்பு செய்தால் மரம் ,பயிர் கூட நல்ல விளைச்சலைத் தருகிறது என்பதை விளக்கவே இவ்வளவு நேரம் பயிர் பற்றிய கதைகளைக் கூறி வந்தேன்.எனவே அன்போடு வளர்க்கப்படும் குழந்தைகள் சமூகத்தில் நன்முறையில் வளர்ந்து நல்ல மகசூலைத் தருவார்கள்.

அன்பு செயவதற்கு விசாலமான பார்வை பெற வேண்டும்.அதற்கு மனப்பயிற்சி தேவை.வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூறுகிறார்

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையோர் என்பும் உரியர் பிறர்க்கு ” என்கிறார்.

மனதில் அன்பு இல்லாதவர்கள் எல்லாம் தனது என்பர். அன்புடையவர்களிடம் உள்ளது மட்டும் அல்ல அவரே பிறர்க்கு பயன்படும் நபர் ஆவார் என்கிறார்.

– பிரபு 
🌹 தினசரி. காம்🌹

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...