உ.வே.சா., நினைவில்! கலைமகள் களிநடம் புரியும் திருக்கோயில்!

என் சரித்திரம்  – மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர்
அத்தியாயம்-49  கலைமகள் திருக்கோயில்

மாயூரத்தில் வசந்தோத்சவம் ஆன பிறகு சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன் பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படி மடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன. தேசிகரின் பொழுதுபோக்கு சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும் வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோ சம்பாஷணை செய்வது, மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச் செய்வது ஆகிய விஷயங்களிலே பெரும்பாலும் பொழுதைப் போக்கி வந்தார்.

நீராடல் :

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் எழுந்து விடுவார். சில சமயங்களில் ஒரு முதிய தம்பிரான் வந்து அவரை எழுப்புவார். எழுந்தவுடன் ஐந்து மணியளவுக்குக் காவிரிக்கு நீராடச் செல்வார். மடத்திலிருந்து காவிரித்துறை அரை மைல் தூரம் இருக்கும். நடந்தே செல்வார். ஆசனப் பலகை, மடி வஸ்திரப் பெட்டி முதலியவற்றுடன் தவசிப்பிள்ளைகளும், தம்பிரான்களும் உடன் செல்வார்கள். ஸ்நானம் செய்து திரும்பி வரும்போது, காவிரி சென்று ஸ்நான அனுஷ்டானாதிகளை முடித்துக் கொண்ட பிராமணர்களும் சைவர்களம் அவரைக் கண்டு பேசிக் கொண்டே உடன் வருவார்கள். காவிரிக்குச் செல்லும் பொருட்டு அமைக்கப் பெற்ற சாலையின் இரு பக்கங்களிலும் மருத மரங்கள் வளர்ந்திருக்கும். அம்மருத மரச் சாலையில், தேசிகர் ஸ்நானம் செய்துவிட்டு வரும்போது அவருடன் சல்லாபம் செய்வதற்காகவே சிலர் காவிரித்துறையில் காத்திருப்பார்கள்.

ஆலய தரிசனம்

வரும் வழியில் சமாதித் தோப்பு என்ற ஓரிடம் இருக்கிறது. அதைச் சார்ந்து திருவாவடுதுறை மடத்தில் தலைவர்களாக இருந்த பலருடைய சமாதிக் கோயில்கள் உள்ளன. அதற்கு முன்னே சிறிது தூரத்தில் சாலையின் ஓரமாக மறைஞான தேசிகர் என்ற பெரியாரின் சமாதி இருக்கிறது. சுப்பிரமணிய தேசிகர் காவிரியிலிருந்து மடத்துக்கு வரும்போது அவ்விடத்தில் நின்று தரிசனம் செய்துவிட்டு வருவார். அப்பால் சிவாலயத்துக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்து, பிறகு மடத்திற்குச் செல்வார். செல்லும்போது ஆலயத்தின் கிழக்கு வாயிலிலுள்ள துணை வந்த விநாயகருக்குச் சில சிதர்த் தேங்காய்கள் உடைக்கப்படும். மடத்தில் முதலில் திருமாளிகைத் தேவரைத் தரிசித்துவிட்டுப் பிறகு ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி சந்நிதியில் வந்து தரிசிப்பார். அம்மூர்த்தியின் தோத்திரமாகிய ஸ்ரீ பஞ்சாட்சர தேசிகர் மாலை என்னும் பிரபந்தத்திலிருந்து பத்துப் பாடல்களை ஓதுவார்கள் முறையே சொல்வார்கள். ஒவ்வொரு பாடல் சொல்லி முடிந்ததும், ஒருமுறை தேசிகர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வார். இவ்வாறு பத்து நமஸ்காரங்கள் செய்துவிட்டு அடியார்களுக்கு விபூதி அளிப்பார். பிறகு ஒடுக்கத்திற்குச் சென்று தம் ஆசனத்தில் அமர்வார். ஐந்து மணிக்கு முன்னரே எழுந்தவர் ஒடுக்கத்துக்கு வந்து அமரும்போது காலை மணி எட்டாகிவிடும். உடனே மடத்திலுள்ள தம்பிரான்களும் மற்ற அடியார்களும் தேசிகரைப் பணிந்து விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொள்வார்கள். பிறகு யாரேனும் யாசகர் வந்திருக்கிறாரா என்று தேசிகர் விசாரிப்பார்.

தர்மச் செயல்

யாரேனும் தேசிகரிடம் பொருளுதவி பெறும் பொருட்டு வந்தால் அவர்கள் காலையிலே தேசிகரைப் பார்த்துத் தம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். தேசிகர் தம் ஆசனத்தில் அமர்ந்தவுடன் கவனிக்கும் முதற் காரியம், ”யாசகர் வந்திருக்கிறார்களா?” என்று ஆராய்ச்சிதான். யாரேனும் வராவிட்டால், ”இன்று ஒருவரும் வரவில்லையே!” என்று சிறிய வருத்தத்தோடு சொல்வார். காலையில் அவர் எந்த உணவையும் உட்கொள்வதில்லை. முதலில் சைவ சித்தாந்த சாஸ்திரங்களைப் பாடம் சொல்ல ஆரம்பிப்பார். சில தம்பிரான்கள் கேட்பார்கள்.

வரிசை அறிதல்

சாஸ்திரங்களில் விற்பத்தி உள்ள வித்துவான் யாரேனும் வந்தால் அவரைப் பார்த்துப் பேசுவதிலும் அவர் என்னென்ன விஷயங்களில் வல்லவர் என்பதை அறிந்து கொள்வதிலும் அவருக்கு அதிக விருப்பம் இருந்தது. வித்துவான்கள் வந்தால் மடத்து வேலைக்காரர்கள் உடனே தேசிகரிடம் தெரிவிப்பார்கள். கொலு மண்டபத்து வாயிலில் ஒரு காவற்காரன் இருப்பது வழக்கம். அக்காலத்தில் முத்தையன் என்ற ஒரு கிழவன் இருந்தான். சுப்பிரமணிய தேசிகரிடம் தொண்டு புரிந்து பகிய அவன் அவருடைய இயல்புகளை நன்றாக அறிந்திருந்தான். யாராவது சாஸ்திரிகள் வந்தால் அவரிடம் மரியாதையாகப் பேசி அவர் இன்ன இன்ன விஷயங்களில் வல்லவர் என்பதை அறிந்து கொள்வான். பிறகு ஓரிடத்தில் அவரை அமரச் செய்து உள்ளே சென்று பண்டார சந்நிதிகளிம் ”ஒரு பிராமணர் வந்திருக்கிறார்” என்பான்.

”என்ன தெரிந்தவர்?” என்று தேசிகர் கேட்பார்.
”தர்க்கம் வருமாம்” என்றோ, ”மீமாம்சை தெரிந்தவாம்” என்றோ, வேறு விதமாகவோ அவன் பதில் சொல்வான்.
உடனே வித்துவான் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அவர் சென்று தேசிகரோடு சம்பாஷணை செய்வார். பேசப் பேச, வந்த வித்துவான், ”நாம் ஒரு சிறந்த ரசிக சிகாமணியோடு பேசுகிறோம்” என்பதை உணர்ந்து கொள்வார்.
வித்துவானுடைய திறமையை அறிந்து தேசிகரும் ஆனந்தமுறுவர். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, தேசிகர் வந்த வித்துவானுடைய தகுதியை அறிந்துவிடுவார். அப்பால் அவருக்கு அளிக்கப் பெறும் அந்தச் சம்மானத்தை வித்துவான் மிக்க மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார்.
”இங்கே சில காலம் தங்க வேண்டும்; அடிக்கடி வந்து போக வேண்டும்” என்று தேசிகர் சொல்வார். அவ்வார்த்தை உபசார வார்த்தையன்று; உண்மையான அன்போடு கூறுவதாகவே இருக்கும். ”இம்மாதிரி இடத்துக்கு வராமல் இருப்பது ஒரு குறை” என்ற எண்ணம் வித்துவானுக்கு உண்டாகிவிடும். அவர் அது முதல் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவராகிவிடுவார்.

இவ்வாறு வருகிற வித்துவான்களுக்கு ஊக்கமும், பொருள் லாபமும் உண்டாவதோடு தேசிகருடைய அன்பினால் அவர்களுடைய கல்வியும் அபிவிருத்தியாகும். ஒரு துறையில் வல்லார் ஒரு முறை வந்தால் அவருக்குத் தக்க சம்மானத்தைச் செய்யும்போது தேசிகர், ”இன்னும் அதிகமான பழக்கத்தை அடைந்து வந்தால் அதிக சம்மானம் கிடைக்கும்” என்ற கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவார். வித்துவானும் அடுத்த முறை வரும்போது முன் முறையைக் காட்டிலும் வித்தையிலே அதிக ஆற்றல் பெற்று வருவார். அதன் பயனாக அதிகமான சந்தோஷத்தையும் சம்மானத்தையும் அடைவார். பல சமஸ்தானங்களில் நூற்றுக்கணக்காகச் சம்மானம் பெறும் வித்துவான்களும் தேசிகரிடம் வந்து சல்லாபம் செய்து அவர் அளிக்கும் சம்மானத்தைப் பெறுவதில் ஒரு தனியான திருப்தியை அடைவார்கள். தேசிகர் அதிகமாகக் கொடுக்கும் பரிசு பதினைந்து ரூபாய்க்கு மேல் போகாது. குறைந்த பரிசு அரை ரூபாயாகும். ஆனாலும் அப்பரிசை மாத்திரம் அவர்கள் கருதி வருபவர்களல்லர்; வித்தையின் உயர்வையும், அதை உடையவர்களின் திறமையையும் அறிந்து பாராட்டிப் பேசும் தேசிகருடைய வரிசை அறியும் குணத்தை அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணியே வருவார்கள்.

மடத்திற்கு வரும் வித்துவான்கள் சில சமயங்களில் வாக்கியார்த்தம் நடத்துவார்கள். தாம் தேசிகரைப் பாராட்டி இயற்றிக் கொணர்ந்த சுலோகங்களையும் செய்யுட்களையும் சொல்லி விரிவாக உரை கூறுவார்கள். பல நூற் கருத்துக்களை எடுத்துச் சொல்வார்கள். இடையிடையே தேசிகர் சில சில விஷயங்களைக் கேட்பார். அக்கேள்வியிலிருந்தே தேசிகருடைய அறிவுத் திறமையை உணர்ந்து அவ்வித்துவான்கள் மகிழ்வார்கள். இப்படி வித்தியா விநோதத்திலும் தியாக விநோதத்திலும் தேசிகருடைய பொழுது போகும்.

மடத்து நிர்வாகம்

மடத்துக் காரியங்களைக் கவனிப்பதற்கு நல்ல திறமையுள்ளவர்களத் தேசிகர் நியமித்திருந்தார். பெரிய காறுபாறு, சின்னக் காறுபாறு, களஞ்சியம் முதலிய உத்தியோகங்களில் தம்பிரான்கள் பலர் நியமிக்கப் பெற்றிருந்தனர். உக்கிராணம், ராயசம் முதலிய வேலைகளில் மற்றவர்களையும் நியமித்திருந்தார். மடத்தில் தினந்தோறும் நிகழ வேண்டிய காரியங்கள் ஒழுங்காக ஒரு தவறும் இல்லாமல் காரியஸ்தர்களுடைய மேற்பார்வையின் கீழ் நடைபெறம். ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தாமே தலையிட்டுத் தம் மனத்தையும் பிறர் மனத்தையும் குழப்பும் இயல்பு சுப்பிரமணிய தேசிகரிடம் இல்லை. ஏதேனும் விசேஷமான காரியமாக இருப்பின் கவனித்து இன்ன இன்னபடி நடக்க வேண்டுமென்று கட்டளையிடுவார். காறுபாறு முதலியோர் அக்கட்டளையைச் சிரமேல் தாங்கி ஒழுங்காக நிறைவேற்றுவார்கள். இம்முறையில் எல்லாம் நடந்து வந்தமையால் மடத்து நிர்வாக விஷயத்தில் கவலையடையாமல் வித்துவான்களுக்கிடையில் சிறந்த ரசிகராகவும் இரவலர்களுக்கு இடையில் உயர்ந்த தாதாவாகவும் விளங்குவது
அவருக்குச் சாத்தியமாயிற்று.

தேசாந்தரிகள்

பதினொரு மணிக்குப் பூஜை செய்துவிட்டுப் பன்னிரண்டு மணிக்குச் சுப்பிரமணிய தேசிகர் அடியார்களோடு பந்தியில் பகற் போஜனம் செய்வார். பிறகு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொள்வார். அப்பால் மீண்டும் பாடம் சொல்வதும் மாணாக்கர்களோடு பேசுவதும் வித்துவான்களோடு சல்லாபம் செய்வதும் ஆகிய காரியங்களில் ஈடுபட்டிருப்பார். இரவில் இரண்டாங்கால பூஜை நடக்கும் சமயத்தில் சிவாலயத்துக்குச் செல்வார். அவருடன் தம்பிரான்களும் மற்றவர்களுமாக முப்பது நாற்பது பேர்கள் போவார்கள். தரிசனம் செய்து மடத்திற்குத் திரும்புகையில் ஆலயத்திலுள்ள நந்திக்கருகில் வந்து, ”தேசாந்தரிகள் வந்திருக்கிறார்களா?” என்று பார்ப்பார். பிராமணர்கள் வந்திருந்தால் சத்திரத்தில் உணவு கொள்ளச் சொல்வார். அதிகப்படியானவர்கள் வந்திருந்தால் சத்திரத்திலுள்ள கிழவிக்குத் துணை செய்யச் சில சமையற்காரர்களை அனுப்பச் செய்வார். கோயிற் பிரசாதங்களையும் கொடுக்கச் செய்வது உண்டு. மற்றவர்களுக்கு மடத்திலே உணவளிக்க ஏற்பாடு நடக்கும். அபேக்ஷயுள்ளவர்களுக்கு மடத்திலிருந்து பாலும் பழமும் கொடுப்பதுண்டு.

வட மொழி மாணாக்கர்கள்

திருவாவடுதுறைக்கு அருகில் உள்ள திருவாலங்காடு, திருக்கோடிகா முதலிய ஊர்களில் வட மொழியில் வல்ல வித்துவான்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் யாவரும் மடத்து வித்துவான்களே. அவர்களுக்கு மடத்திலிருந்து வருஷாசனம் அளித்து வந்தனர். அவ்வித்துவான்களிடத்திலே சாஸ்திரங்களைப் பாடம் கேட்பதற்காகப் பல மாணாக்கர்கள் வருவார்கள். திருநெல்வேலி, மதுரை, சேலம் முதலிய இடங்களிலிருந்து அவ்வாறு படிப்பதற்காக வந்தவர்கள் பலரோடு நான் பழகியிருக்கிறேன். அம்மாணாக்கர்களிற் சிலர் திருவாவடுதுறையிலுள்ள அன்னசத்திரத்திலே உணவு கொண்டு வித்துவான்கள் உள்ள இடத்திற்கு முற்பகலிலும் பிற்பகலிலும் சென்று பாடம் கேட்டு வருவார்கள். சிலர் அவ்விடங்களிலே இருந்து சமையல் செய்து உண்டு வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய அரிசி முதலிய பொருள்கள் சுப்பிரமணிய தேசிகர் கட்டளையின்படி மடத்திலிருந்து அளிக்கப் பெறும்.

சங்கீதம் பயில்வோர்

மடத்தைச் சேர்ந்த சங்கீத வித்துவான்களிடமும் நாகசுரக்காரர்களிடமும் சிலர் சங்கீதம் பழகி வந்தனர். அடிக்கடி மடத்திற்குச் சங்கீத வித்துவான்கள்
வந்து வினிகை நடத்துவார்கள். அதனால் அம்மாணாக்கர்களுக்கு உண்டாகும் லாபம் அதிகம்.

தமிழ் மாணாக்கர்கள்

பிள்ளையவர்களிடமும் தேசிகரிடமும் பல மாணாக்கர்கள் தமிழ்ப் பாடம் கேட்டு வந்தார்கள். அவர்களில் பிராமணர்கள், சைவர்கள், மற்ற வகுப்பினர்கள் முதலிய பல வகையினர் இருந்தனர். பிராமணர்கள் அன்னசத்திரத்தில் உண்டு வந்தார்கள். சைவப் பிள்ளைகள் மடத்திற் பந்தியிலே ஆகாரம் செய்து வந்தனர்.
மற்றவர்களுக்கும் தக்கபடி உணவுக்கு ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. என்னோடு பிள்ளையவர்களிடம் தமிழ்ப் பாடம் கேட்டு வந்தவர்களில் சிலர் முதிய தம்பிரான்கள்; சிலர் குட்டித் தம்பிரான்கள். அண்ணாசாமி ஐயர், சாத்தனூர்ச் சுப்பிரமணிய ஐயர், கஞ்சனூர்ச் சாமிநாதையர் என்பவர்கள் பிராமண மாணாக்கர்களில் முக்கியமானவர்கள். மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயர், விக்கிரமசிங்கபுரம் அனந்தகிருஷ்ண கவிராயர், மதுரைச் சாமிநாத பிள்ளை, முகவூர் அருணாசலக் கவிராயர், சந்திரசேகர முதலியார், பூமிநாத செட்டியார் முதலிய பலர் சைவர்கள். இராமகிருஷ்ண பிள்ளையென்ற ஒருவர் இருந்தார். அவர் வைஷ்ணவ வேளாளர். இப்படிப் பல வகுப்பினரும் பல நிலையினருமாக மாணாக்கர்கள் இருப்பினும் யாவரும் ஒரு குடும்பத்தினரைப் போலவே பழகி வந்தோம். எல்லா மாணாக்கர்களிடத்தும் சுப்பிரமணிய தேசிகருக்கு உள்ள அன்புக்கு இணை வேறு ஒன்றுமில்லை. மடத்திற் படிக்கும் மாணாக்கர்களுக்கு ஒரு குறைவும் வராமற் பாதுகாக்க வேண்டுமென்பது அவரது கட்டளை. அவருக்குக் கோபம் வருவது அரிது. அப்படி வருமானால் அதற்குத் தக்க காரணம் இருக்கும். மாணாக்கர்களில் யாருக்காவது குறை நேர்ந்தால் அதற்குக் காரணமானவரிடம் தேசிகருக்கு உண்டாகும் கோபம் மிகவும் கடுமையானது.

சர்வ கலாசாலை

மடத்தின் விஷயம் ஒன்றும் தெரியாத அயல் நாட்டார் ஒருவர் வந்து பார்த்தால் அவ்விடம் ஒரு சர்வகலாசாலையோ என்று எண்ணும்படி இருந்தது அக்காலத்து நிலை. அங்கே ஆடம்பரம் இல்லை; பெரிய விளம்பரங்கள் இல்லை; ஊரறியச் செய்யும் பிரசங்கங்கள் இல்லை; வேறு வேறாகப் பிரித்து வகுக்கும் பிரிவுகள் இல்லை. பொருள் இருந்தது; அதைத் தக்க வழியிலே உபயோகிக்கும் தாதா இருந்தார்; அவர் உள்ளத்திலே அன்பு நிறைந்திருந்தது; எல்லோரிடமும் ஒற்றுமை இருந்தது. கல்வி நிறைந்திருந்தது. வயிற்றுப் பசியையும் அறிவுப் பசியையும் போக்கி வாயுணவும் செவியுணவும் அளிக்கும் நித்தியோத்ஸவம் அங்கே நடந்து வந்தது. அத்தகைய இடத்திலே கல்வி விளைந்து பெருகுவதற்குத் தடை என்ன? கலைமகள் களிநடம் புரியும் திருக்கோயிலாகவே அது விளங்கியது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...