spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்தெலுகு மொழியில் ஒரு பாரதியார்... குரஜாட வேங்கட அப்பாராவு!

தெலுகு மொழியில் ஒரு பாரதியார்… குரஜாட வேங்கட அப்பாராவு!

- Advertisement -

kurajata venkata apparao

நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரைப் போலவே தேச பக்திக்கும் சமுதாய சீர்திருத்தத்திற்கும் பாடுபட்ட தெலுங்கின் மிகப் பெரும் இலக்கிய ஆளுமை குரஜாட வேங்கட அப்பாராவு (1862-1915).

குரஜாட அப்பாராவின் பெயரை அறியாத இலக்கிய வாதிகளே இல்லை எனும் அளவு பெரும் கீர்த்தி பெற்ற நாடக ஆசிரியர் இவர். நவீன யுகத்தின் தெலுங்கு மொழிக்கு புத்துயிர் ஊட்டிய யுக புருஷர் என்று கொண்டாடப்படுகிறார்.

பேச்சு வழக்கு மொழியில் இலக்கியப் படைப்புகளை எழுதுவது பெரிய தவறாகவும் கையாலாகதத்தனமாகவும் கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இலக்கணச் சுத்தமான மரபுக் கவிதை வடிவில் தான் காவியங்கள் எழுதப்பட்டன.அவற்றைப் பண்டிதர்கள் மட்டுமே படித்துப் புரிந்து கொள்ள இயலும். அத்தகைய சூழ்நிலையில் சாமானியபாமர மக்களும் படித்துப் புரிந்து கொள்ளும் ஜீவமொழியில் உயிர்த்துடிப்புள்ள நடையில் கதைகளும் நாடகங்களும் கவிதைகளும் படைத்து தெலுங்கு இலக்கியத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய தீர்க்கதரிசி குரஜாட அப்பாராவு.

“எல்ல லோகமு ஒக்க இல்லு காவாலி!” – ‘முழு உலகமும் ஒரே வீடாக வேண்டும்’ என்று பாடிய இவர் ஒரு பிரஜா கவி. தான் இருந்த இடத்தில் தான் பார்த்த சமுதாய கீழ்மைகளை அப்போதைக்கப்போது தன் படைப்பினால் சீர்திருத்த பெரு முயற்சி எடுத்துக் கொண்ட பெருந்தகையாளர் ஸ்ரீ குரஜாட அப்பாராவு.

Telugu literature1

இவர் எழுதிய கன்யாசுல்கம் என்ற நாடகம் இவரது அனைத்து படைப்புகளிலும் முதன்மையானதாக இன்றளவும் போற்றப்படுகிறது. இது சமுதாயத்தின் தீய ஆசாரங்களை விமரிசிக்கும் விதமாக மட்டுமின்றி அதற்கு மாற்று வழியை எடுத்துரைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

இது பல இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பெருமை கொண்டது.சாமானிய மக்களுக்கு நூலறிவும் படிக்கும் ஆர்வமும் ஏற்படும்வரை நாடகங்கள் வாயிலாக மட்டுமே அவர்களை முன்னேற்ற முடியும் என்றுணர்ந்து நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.

குரஜாட அப்பாராவு விசாகப் பட்டினம் மாவட்டத்தில் எலமஞ்சிலி தாலுக்கா ராயவரம் கிராமத்தில்1862, செப்டம்பர்21 அன்று அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். இவருடையமூதாதையர் கற்றறிந்த பண்டிதர்கள்.

தந்தை வேங்கட ராமதாசு. தாயார் கௌசல்யம்மா. இவருக்கு சியாமளா ராவு என்ற தம்பி இருந்தார். இவர் தந்தை அரசரின் ஆஸ்தானத்தில் பணியில் இருந்தபோதுஅப்பாராவு சீபுருபலி என்ற ஊரில் படித்து வந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த பின் விஜயநகரம் வந்த அப்பாராவு மிகுந்த ஏழ்மையில் வாடினார். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டில் உணவுண்டு படிப்பைத் தொடர்ந்தார்.

அப்போது எம்ஆர் கல்லூரியில் முதல்வராக இருந்த சி.சந்திரசேகர சாஸ்திரி என்பவர் சிறுவன் அப்பாராவை ஆதரித்துவசிக்க இடமும் உணவும் கொடுத்து உதவினார். 1882ல்மெட்ரிகுலேஷன் முடித்து பின் 1884பி.ஏ.வில் சேர்ந்தார். அதே ஆண்டில் எம்.ஆர்.உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார்.

விஜய நகரத்தில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது நண்பர் கிடுகு ராமமூர்த்தியுடன் சேர்ந்து பேச்சு வழக்கு மொழியில் எழுதவும் படிக்கவும் செய்ய வேண்டும் என்ற புரட்சிகரமான எண்ணங்களில் ஊறினார்.

கல்லூரி மாணவனாக இருந்த போது ஆங்கில மொழியில் மிகத் தேர்ந்தவராக புலமை பெற்று விளங்கினார். கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிக் குவித்தார். ‘சாரங்கதாரா’என்ற ஆங்கிலக் காவியத்தைப் படைத்தார்.

கண்ணெதிரில் நடக்கும் சம்பவங்களைக்கொண்டு இயல்பான பேச்சு மொழியில் சீர்திருத்தப் படைப்புகளைச் செய்தார் குரஜாட. மெட்ரிகுலேஷன் படிக்கும் போதே ஆரம்பமான குரஜாடாவின் இலக்கியச் சேவை அதன் பின் ஏழ்மையிலும் தொடர்ந்தது. பள்ளி ஆசிரியராக, கலெக்டர் அலுவலக குமாஸ்தாவாக, கல்லூரி விரிவுரையாளராக, அதன் பின் ஆனந்த கஜபதி மகாராஜாவின் அந்தரங்க காரியதரிசியாக குரஜாடாவின் வாழ்க்கை பல திருப்பங்களைக் கண்டது.

1885ல் அப்பல நரசம்மாவுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லட்சுமி நரசம்மா என்ற மகளும் வேங்கடராமதாசு என்ற மகனும் பிறந்தனர்.

1886 ல் கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்தார்.1887 ல் விஜயநகரம் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியில் சேர்த்தார். அச்சமயத்தில் பசுபதி ஆனந்த கஜபதி மகாராஜாவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. பின் அரசரின் அந்தரங்க காரியதரிசியாகவும் பணிபுரிந்தார்.1892ல் தான் எழுதிய கன்யா சுல்கம் நாடகத்தை ஆனந்த கஜபதி அரசருக்கு சமர்ப்பணம் செய்தார். அரசாங்கத்துக்குத் தேவையான கல்வெட்டு சாசனங்களைப் படித்தறிய உதவினார். அரச குடும்பத்தினர் இவரை குருவாக மதித்தனர்.

அன்றைய சமூக நிலையை ஆழ்ந்து கவனித்த குரஜாட அப்பாராவுசமூக சீர்திருத்தத்தின் மீது மட்டுமின்றி அவற்றை எடுத்துரைக்கும் இலக்கிய படைப்புகளின் மொழிச் சீர்திருத்தத்திலும் கவனம் செலுத்தினார். ஆனந்தகஜபதி மகாராஜா, குரஜாட அப்பாராவின் சிறந்த நண்பரானார். அரசரின் உதவிகளும் இந்த இலக்கிய படைப்பாளிக்குக் கிடைத்தது.

கன்யாசுல்கம் நாடகம் 1892ல் ஆகஸ்ட் 13 அன்று மேடையில் அரங்கேறியது. விஜயநகரத்தில் ஜகன்னாத விலாச நாடக சங்கத்தார் அரங்கேற்றினர்.இது மிகமிக வெற்றிகரமாக பல முறை மேடையேற்றப்பட்டு மக்களால் போற்றப்பட்டது. சாமானிய மக்களின் ஏகோபித்த மனத்தால் ஏற்கப்பட்டு எங்கு நோக்கினும் அவர் புகழ் எதிரொலித்தது.1909ல்கன்யாசுல்கம் நாடகத்தை மீண்டும் திருத்தி எழுதி மேடையேற்றினார் குரஜாட.

1911ல் மதராஸ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். அப்போதுதன் நண்பர்களோடு சேர்ந்து ஆந்திர சாஹித்திய பரிஷத் என்ற அமைப்பைத் தொடங்கி தெலுங்கு மொழியின் செழுமைக்குப் பாடுபட்டார்.1913ல் பதவி ஓய்வு பெற்ற போது மதராஸ் பல்கலைக் கழகம் அவருக்கு Emieritus Fellow என்று பட்டம் அளித்து கௌரவித்தது.

1910ல்‘தேசமுனு ப்ரேமின்ச்சுமன்னா!’ என்ற முதல் தேச பக்தி கீதத்தைஅற்புதமாக தெலுங்கில் எழுதினார் குரஜாட அப்பாராவு.“தேசமுனு ப்ரேமின்சு மன்னா! மன்ச்சி அன்னதி பென்ச்சுமன்னா! ஒட்டி மாடலு கட்டி பெட்டவோய்! கட்டி மேலு தல பெட்டவோய்!சொந்த லாபமு கொந்த்த மானுகு! பொருகுவாடிகி தோடுபடவோய்!தேசமண்டே மட்டி காதோய்! தேசமண்டே மனுஷுலோய்!-என்பது அவர் எழுதிய உயிரோட்டமுள்ள கவிதைகளுள்மிகச் சிறந்த கவிதை.

‘புத்தடிபொம்மா பூர்ணம்மா’ என்றகவிதை குரஜாடாவின் படைப்புகளில் மிகப் புகழ்பெற்ற ஒன்று. இதன் சாராம்சமும் சமுதாய பலவீனங்களைக் களைந்தெறிவதே. கருணை ரசம் பொங்கி வழியும்கவிதை மயமான இந்தக் காவியம் இன்றளவும் தெலுங்கு மொழி பேசும் மக்களால் அன்போடு பாடப்பட்டு வருவது இதன் சிறப்புகளில் ஒன்று.புத்தடிபொம்மா பூர்ணம்மா கவிதை படித்து கண்ணீர் விடாதவர் இருக்க முடியாது.

Telugu literatureகன்யா சுல்கம் நாடகம்:-
மனைவியை இழந்த ஆண்கள் அக்னி ஹோத்திரம் செய்யும் அருகதையை இழப்பதால் அந்நாட்களில் மனைவி ஸ்தானத்தில் ஒரு பெண் இருந்தாக வேண்டும் என்று எண்ணப்பட்டது.

அக்கால வழக்கப்படி பெண் வயதுக்கு வரும் முன் திருமணம் செய்து விடுவதால் சிறு பெண்கள்தான் திருமணத்திற்குக் கிடைப்பார்கள். விதவைப் பெண்களுக்கு மறுமணம் மறுக்கப்பட்டு வந்த காலம் அது. யாகம், நோன்பு, சந்தியா வந்தனம், சமிதாதானம் போன்றவை செய்ய இயலாத பட்சத்தில் பிறவியே வீண் என்று எண்ணிய ஆண்கள் மனைவியை துரதிருஷ்டவசமாக இழந்த பின் மறுமணம் செய்து கொண்டார்கள்.

அக்காலத்தில் மனைவியை இழந்த எழுபது வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் கூட சின்னச் சிறு பெண்களை கன்யாசுல்கம் எனப்படும் எதிர்ஜாமீன் கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் கொடுமைகள் நிலவின. அந்தக் காலத்தில் கன்னிப்பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொடுப்பதும் செய்து கொள்வதும் வழக்கமாக இருந்தது.

இச்செயல் ஒருஆசாரப் பழக்கமாக அந்நாளில் நிலவியதால் கன்னிகைகளின் கனவுகள், ஆசைகள், அவர்களின் பரிபூர்ண எதிர்கால வாழ்க்கை எல்லாம் பணயமாக வைக்கப்பட்டன. கிழவர்களை மணந்த சிறுமியர் மிக இளம் வயதிலேயே விதவைகள் ஆக்கப்பட்டனர். அவர்களை சமுதாயம் எல்லா விதத்திலும் மிக மோசமாக நடத்தியது.

பெண்களுக்கு எதிரான மனிதத் தன்மையற்ற இந்த கிராதகச் செயலை தனி மனிதனாக எதிர்த்து வாதிட்டு இலக்கியத்தைத் துணை கொண்டு புரட்சி செய்தார் குரஜாட அப்பாராவு. அதிலும் உயர்குல ஆண்களை எதிர்ப்பது என்பது ஊகத்திற்கு அப்பாற்பட்ட துணிச்சலான செயல் என்றே கூற வேண்டும்.

வாசலில் பாண்டி விளையாடிக் கொண்டிருக்கும் எட்டு வயது சின்னச்சிறு சிறுமியை விவாகம் செய்து கொள்கிறானே! அவனுக்கு அறிவு இல்லையா? என்று கேட்டார் குரஜாட.

கன்யாசுல்கம் நாடகத்தின் மூலம் சமுதாயத்தின் சீரழிந்த சேஷ்டைகளை மக்கள் கண்முன் பளிச்சென்று நிறுத்திய பெருமை இவரையே சேரும். ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்கும் வரதட்சிணையை கன்யாசுல்கம் என்பர். இதனை தமிழில் எதிர் ஜாமீன் போன்றது எனலாம். இதன் காரணமாக பெண்ணைப் பெற்றோர் அவர் தரும் பொருளுக்கு ஆசைப்பட்டு தம் பெண்களை குழந்தைப் பருவத்திலேயே வயதான ஆண்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

இவற்றை விமர்சிக்கும் விதமாக தத்ரூபமாக இந்நாடகம் எழுதப்பட்டு மிகச் சிறந்த சமூகப் புரட்சியை அந்நாட்களில் உருவாக்கியது.

முதன் முதலில் நடை முறைப் பேச்சு வழக்கு மொழியில் எழுதப்பட்டு இலக்கிய வாதிகளால் அதற்காக விமரிசிக்கப்பட்ட நூல்கள் குரஜாட அப்பாராவுடைய நூல்கள். ஆனால் அம்மொழி நடை சாமானிய மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றி கண்டது.

கன்யா சுல்கம் பாத்திரப் படைப்பு:-
அக்னிஹோத்ர அவதானி, கிரீசம். ராமபந்த்துலு, மதுரவாணி, புச்சமா போன்ற கதாபாத்திரங்கள் உயிருள்ள மனிதர்களாக தோன்றும்படியாக அமைந்துள்ள நாடகம் கல்யாசுல்கம்.

அக்னி ஹோத்ராவதானியின் மனைவி வேங்கம்மாவை சிறந்த பெண்மணியாக வர்ணித்துள்ளார் ஆசிரியர். மகன் வேங்கடேசத்திற்கு ஆங்கிலக் கல்வி கற்பிக்க எண்ணினாள் வேங்கடம்மா. ஆனால் பணம் செலவாகும் என்பதால் கணவர் சம்மதிக்கவில்லை.

தன் பிறந்த வீட்டார் அளித்த சீதனமான நிலத்தை விற்று மகனைப் படிக்க வைப்பேன் என்று அந்தஇல்லத்தரசி கூறுவதன் மூலம் அக்காலத்தில் குடும்பப் பெண்களுக்கு இருந்த பொருளாதார சுதந்திரம் எத்தகைய பலம் பொருந்தியது என்ற அம்சத்தை வேங்கம்மா பாத்திரம் மூலம் குரஜாட வெளிப்படுத்தி உள்ளார்.

மதுரவாணி என்ற தாசி, அக்னிஹோத்ராவதானியின் இளைய மகள் சுப்பம்மாவின் பொருந்தா திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதில் கரடக சாஸ்திரியோடு சேர்ந்து நடத்திய நாடகத்தின் மூலம் அவளுடைய புத்த்திசாலித்தனம், சாமர்த்தியம், நல்லியல்பு போன்றவை வெளிப்பட்டு அந்த பாத்திரத்தின்மேல் ரசிகர்களுக்கு கௌரவம் ஏற்படுகிறது.

முதன் முதலாக விலை மாதுவை நல்லியல்புகள் கொண்ட பெண்ணாகச் சித்திரித்து அவள் மூலம் பல குடும்பப் பெண்களில் வாழ்வை மேம்படுத்தும் கதையை எழுதிய பெருமை கொண்டவர் குரஜாட.

கன்யாசுல்கம் நாடகத்தில் சமூகத்தில் நிலவிய தீய வழக்கங்களை நீக்கும் லட்சியம் மட்டுமின்றி வழக்கு மொழியில் இலக்கியம் படைக்கும் லட்சியமும் காணப்படுகிறது.

இவருடைய அனைத்து படைப்புகளிலும் பழங்கால ஒட்டடைகளை தூசு தட்டி புத்தம்புது மலர்ச்சியைச் சேர்க்கும் முயற்சியே நிகழ்ந்தது. இவருடைய கதைகள் பெரும்பாலும் பெண்களின் பிரச்னைகளை வெளிக் கொண்டு வருபவையே.

‘மெடில்டா’ என்ற கதையில் கிழப்புலியாக பெயர் பெற்ற முதியவரான கணவர் செய்த கொடுமை அவமானம் எல்லாம் பொறுத்துக் கொள்ளும இளைய மனைவி மெடில்டா.

‘சம்ஸ்கர்த்த ஹிருதயம்’ என்ற கதையில் சரளா என்ற விலைமாது தன்தொழிலை விடுத்து நல்ல இல்லத்தரசியாக வாழ விரும்புகிறாள். ஆனால் ப்ரொபசர் ஒருவர் அவளுக்கு உதவுவதாக வெறும் வார்த்தை கூறுகிறார். ஆனால் அவரும் சபலத்துக்கு ஆளாகி அதை நிறைவேற்ற இயலாமற் போகிறார்.

இக்கதை மூலம் சீர்திருத்தம் என்ற சொல்லைச் சொல்வதற்கும் அதனை நிறைவேற்றுவதற்கும் இடையே உள்ள ஆழத்தை நிரூபிக்கிறார் குரஜாட.

குரஜாடவின் முதல் சிறுகதை ‘தித்துபாட்டு’ 1910ல் ஆந்திரபாரதி பத்திரிகையில் பிரசுரமானது. விலைமகளோடு தொடர்பு கொண்டிருப்பதை பெருமையாகக் கருதிய அக்காலத்தில் அவ்வாறிருந்த தன் கணவனை திட்டமிட்டு திருத்தி நல்வழிப்படுத்திய மனைவியின் கதை இது.

நகைச்சுவையோடு நீதி போதிக்கும் விதமாக பேச்சு மொழியில் அமைந்த இக்கதையின் மொழி நடை, சாராம்சம், சீர்திருத்த பாவனை அனைத்தும் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தன.முத்யாலசராலு, கன்னிகா, சுபத்ரா போன்ற எத்தனையோ படைப்புகளால் தெலுங்கு இலக்கியத்தை அமிர்த பொக்கிஷமாக மாற்றினார் குரஜாட.

‘தேவுடுசேசின மனுஷுல்லாரா! மனுஷுலுசேசின தேவுள்ளாரா! மீபேரு ஏமிட்டீ?” என்ற கதையில் சைவ, வைணவ பக்தர்களிடையே நிகழும் தகராறு குறித்து நையாண்டியாக எழுதி உள்ளார். பக்தர்கள் வேடத்தில் நடமாடும் வஞ்சகர்களை தோலுரித்துக் காட்டும் கதை இது.

அவர் எழுதத் தொடங்கிய ‘சௌதாமினி’ என்ற நாவல் பாதியில்நின்று விட்டது. ‘பெண்களை பிறர் அபலை என்று கூறுவது தவறு. பெண் தன்னைத் தானே முன்னேற்றிக் கொண்டு போராடி வெற்றி பெற வேண்டும்’ என்ற அம்சத்தோடு கூடியது இந்நாவல். ‘பெண்கள் எப்போதும் தற்காப்புக்காக ஆயுதம் வைத்திருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் குரஜாட.

1897ல் குரஜாடாவின் அன்பு நண்பரான ஆனந்த கஜபதி அரசர் இயற்கை எய்தினார். அரசரின் மூத்த சகோதரியான முதிய மகாராணி கொண்டம்மாம்பாவுக்கு காரிய தரிசியாக குரஜாடாவின் முழு நேரமும் விஜயநகர அரசின் வழக்கு விவகாரங்களை கவனிப்பதிலேயே செலவழிந்து போனது. 1897 முதல்1915வரை சென்னப்பட்டினம் முழுவதும் சுற்றியலைந்து அரசாங்க சேவை செய்தார். ஊட்டியில் வேனிற்கால மாளிகையில் ராணி வசிக்கையில் உடன் சென்ற குரஜாட அங்கிருந்த இயற்கைச் சூழலை ரசித்துவிவரித்து நிறைய கவிதைகள் எழுதியுள்ளார்.அவை‘நீலகிரி பாடலு’ என்ற பெயரில் வெளி வந்து புகழ் பெற்றன.

அரசாட்சி தொடர்பான கோர்ட் விவகாரங்களுக்காகஅலைந்த ஆண்டுகளில் உணவு ஒத்துக் கொள்ளாமல் போனதால் அவருடையஉடல் நோயுற்றது. அந்நிலையிலும் அதைப் பற்றி கவலையற்றவராக இருந்தார். அமைதியான பிரசாந்தமான வாழ்க்கைக் காக அவர் மனம் ஏங்கினாலும் அது அவருக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. சரியான நேரத்தில் உணவு ஏற்காமல் இரவும்பகலும் அலைந்து அரச சேவை புரிந்த காரணத்தால் அந்த மிகச் சிறந்த இலக்கிய படைப்பாளி தன்53ம் வயதில் உடலை நீத்தார்.

தினமும் விடியற்காலையே எழுந்து குளிர் நீரில் குளித்து விடுவது அவர் வழக்கம். எத்தனை உடல் உபாதை இருந்தாலும் இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவருக்கு இருந்த உற்சாகம் இறுதி மூச்சு வரை குறையவில்லை. தனியாகப் பயணம் செய்ய இயலாதநிலையில் இருந்தார் குரஜாட.மீண்டும்எழுத்தை ஆயுதமாகக்கொண்டு அவர் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று அவருடைய நண்பர்கள் விரும்பினர்.

அவரை அது குறித்து உற்சாகப்படுத்தினர்.1915 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் படுக்கையில் விழுந்தார் அந்த மகாகவி.

அம்மாதம் முழுவதும் படுக்கையில் இருந்தபடியே இலக்கிய ரசனைகளில் ஈடுபட்டார்.தன் மகனிடம் வெற்றிலை பாக்கு கேட்டு வாங்கி வாயிலிட்டுக் கொண்டார். தான் பிழைத்து எழுந்தால் தனக்கு ஒவ்வாமை ஏற்படுத்திய உணவு வகைகளைப் பற்றி ஒரு நாவல் எழுதப் போவதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஆனால் நவம்பர் முப்பதாம் தேதி அமரரானார்.

தெலுங்கு இலக்கியப் புரட்சியில் ஒரு யுகம் முடிவடைந்தது. எத்தனையோ இலக்கியப் படைப்பாளிகளுக்கு முன்னோடியாக நின்ற குரஜாட அப்பாராவு தெலுங்குமக்களைப் பிரிந்து இன்றைக்கு 103 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இலக்கிய வாசகர்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கிறார்.

“‘சூத்ரகா’என்ற புலவர் சமஸ்கிருதத்தில் எழுதிய ‘மிருச்சகடிகம்’ என்ற நாடகத்திற்குப் பிறகு தெலுங்கில் குரஜாட எழுதிய கன்யாசுல்கம் போன்ற பிறிதொரு நாடகம் இந்திய மொழிகளில் இதுவரை எழுதப்படவில்லை” என்று சாகித்திய அகாடமி விருது பெற்ற தெலுங்கு கவி ஸ்ரீஸ்ரீ புகழ்ந்துள்ளார்.

“குரஜாடாவின் படைப்புகள் அனைத்தும் நஷ்டமானாலும் ஒரு தேசபக்தி கீதம் மீதி இருந்தாலும் போதும். அவர் உலகத்தின் உயர்ந்த கவிஞர்களுள் ஒருவரான மகாகவி என்று நாம் கர்வம் கொள்வதற்கு” என்றார் ஸ்ரீஸ்ரீ.

முதன் முதலில் 1892ல் எழுதி மேடையேற்றப்பட்ட கன்யாசுல்கம் நாடகத்திற்கு 1992ல் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

கவி சேகரர், அப்யுதய கவிதா பிதாமகர், நவயுக வைதாளுடு போன்ற விருதுகள் இவரை வந்தடைந்து பெருமை பெற்றன. குரஜாடாவின் இல்லம் தற்போது அவருடைய நினைவு நூலகமாக பராமரிக்கப்படுகிறது.

– எழுத்து: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe