spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்நெல்லைச் சீமையின் சங்கப் புலவர்... மாங்குடி மருதனார்... வாழ்வும் வாக்கும்!

நெல்லைச் சீமையின் சங்கப் புலவர்… மாங்குடி மருதனார்… வாழ்வும் வாக்கும்!

- Advertisement -

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது, சங்கப் புலவர் மாங்குடி மருதனார் நினைவுத் தூண்.

இந்த நினைவுத் தூணுக்கு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மலர் தூவி மரியாதை செய்தார்.


மாங்குடி மருதனாரைக் குறித்து, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரை:

சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார் , இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில்  விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது

மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது, அதைக் காண்பதற்காக நான்கு நாட்களுக்கு முன்பாகச் சென்றிருந்தேன்.

வெயிலேறிய சாலைகள், நாயோடு முயல் வேட்டைக்கு அலையும் சிறுவர்கள், இரையெடுத்த பாம்பு போல வானில் மெதுவாக நகரும் சூரியன், மேற்கில் அடிவானம் தெரியும் வெட்டவெளி

பிரதானச் சாலையை விலக்கிச் செல்ல செல்ல ஊரே கண்ணில் படவில்லை, சிறிய தார்சாலையில்  சென்று திரும்பும் போது ஊர் சரிவில் வீழ்ந்து கிடக்கிறது, பெரிய கண்மாய் ஒன்றும் அதன்முன்னால் பேருந்து நிறுத்தமும் காணப்படுகிறது, ஆயிரம் பேர் வசிக்கும் சிறிய ஊர், ஒரு காலத்தில் நாட்டுச்சாராயத்திற்குப் பேர்போன ஊராக இருந்திருக்கிறது, இன்று ஊரெங்கும்  ஆயுத்த ஆடைகள் அதிலும் குறிப்பாக நைட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன.

சிறிய ஊர் ஆனாலும் பல்லாயிர வருசத் தொன்மை கொண்ட நிலம்,

மாங்குடியை ஒட்டிய பகுதிகளில் தொல்கற்காலத்திலே மனிதர்கள் வசித்த தடயங்கள் அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன, சங்க்காலத்தில் இந்தப் பகுதியில் நிறைய ஊர்கள் இருந்திருக்கின்றன, அவை காலமாற்றத்தில் அழிந்து போய்விட்டன என்கிறார்கள், இந்த ஊரில் நடைபெற்ற அகழ்வாய்வில் சங்ககால நாணயங்கள் பானைகள், கல் ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன

மாங்குடி மருதனாரின் நினைவுத்தூண் ஒரு வேப்பமரத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது,  1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தூணின் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள், அடியில் ஒரு பீடம், அதில் புறநானூற்றுப் பாடல் பற்றிய குறிப்பு,  தூணில் மாங்குடி மருதனார் பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது, தமிழகத்தின் மூவேந்தர்களைக் குறிக்கும் புலி, மீன் மற்றும் வில் முத்திரை காணப்படுகிறது , மற்றபடி முறையான பராமரிப்பின்றி குப்பைகளும்  கழிவு நீரும் தேங்கிக் கிடக்க, நிழலுக்கு உறங்கும் நாயுமாக அந்த இடம் அதன் புராதனப்பெருமையை மறந்து கவனிப்பாரற்றுக்கிடக்கிறது, வருடம் ஒரு முறை பொங்கல் நாளில் இங்கே விழா எடுப்பதுண்டு என்கிறார்கள் உள்ளுர்வாசிகள்

செம்மொழியான தமிழ் மொழி என்று ஆரவாரம் செய்து கொண்டாடும் நாம் மதுரைக்காஞ்சிபாடிய மாங்குடி மருதனுக்கு ஒரு நினைவுத் தூண் வைத்த்தோடு அவரை அப்படியே மறந்து போய்விட்டோம்,  அவருக்காக ஒரு அரசு விழா எடுப்பதோ, அவரது பாடல்களைக் கல்வெட்டில் பதிந்துவைத்து ஒரு நினைவு மண்டபம் அமைப்பதோ இன்றும் செயல்படுத்தப்படவேயில்லை

எப்போதாவது  வெளியூரில் இருந்து ஒரு தமிழ் ஆய்வாளர் அல்லது வரலாறு அறிஞர் வந்து இந்த நினைவுத்தூணைப் பார்வையிடுவதோடு சரி வேறு எந்தக் கவனமும் கிடையாது, எங்கள் ஊர் விருதுநகர் திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களுக்கும் எல்லையில் இருப்பதால் இருவருமே எங்களைக் கண்டுகொள்வதில்லை என்று குறைபடுகிறார்கள் உள்ளுர்மக்கள்,

மாங்குடி மருதனார் பத்துப்பாட்டில் ஒன்றாகிய  மதுரைக் காஞ்சியை இயற்றியவர். பாண்டிய மன்னரான. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்,  அரசவையில் புலவராக இருந்தவர், புறநானூற்றில் இவரது பெயர் ‘மாங்குடி கிழார்’ என்று உள்ளது

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கு  வாழ்வின் நிலையாமைப் பொருளுணர்த்த மதுரைக் காஞ்சி எழுதப்பட்டது,  மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும் இந்த நூல் பண்டைய மதுரையின் உன்னதங்களின் சாட்சியாக உள்ளது, அதற்கு முக்கியக்காரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமே.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் என்ற புறநானூற்றுப்பாடலால் மாங்குடி மருதனாரின் பெருமை  நன்கு விளங்குகிறது

குறுந்தொகையில் மூன்று பாடல்கள்,  நற்றிணையில் இரண்டு பாடல்கள் அகநானூற்றிலே ஒரு பாட்டு, , புறநானூற்றிலே ஆறு பாடல்கள், திருவள்ளுவமாலையில் ஒன்று மாங்குடி மருதன் பெயரால் இடம் பெற்றுள்ளன   ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட  மதுரைக் காஞ்சி 782 வரிகளைக் கொண்டது

மழைகொளக் குறையாதுபுனல்புக மிகாது

கரைபொருது இரங்கும் முந்நீர் போல,

கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.

என்று மதுரை நகரில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றி மதுரைக்காஞ்சி விவரிக்கிறது, அதாவது  பொருள்களைக் குவிக்கக் குவிக்க , மக்கள் வாங்கி போய்க் கொண்டிருப்பார்களாம். கடல்நீரை மேகம் கொள்ளுவதால் கடல் ஒரு போதும் அளவில் குறைவதில்லை; ஆறுகள் சேர்வதால் கடல் மிகுதியாவதும் இல்லை. அதே போல் தான் , மதுரையின் கடை வீதிகளும்

மக்கள் கூட்டமாக வந்து பொருள்களை வாங்குவதால் குறைந்து போனதாகவோ, பலர் விற்கக் கொண்டு வரும் பொருட்களால் அதிகமாகிப் போனதாகவோ இன்றி எப்போதும் போல் விரிந்து விளங்கியது. என்கிறது மதுரைக்க்காஞ்சி

மதுரையில் ஒரு இரவு எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்ள அவசியம் மதுரைக்காஞ்சியை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்,  முதல் யாம, இரண்டாம் யாம நிகழ்ச்சிகள் எப்படி,  நடைபெறுகின்றன, கடைகள் எப்படி மூடப் படுகின்றன என விரிவாக மாங்குடி மருதன் விவரிக்கிறார்.

கள்வரையும், அவர்கள் வராது ஊர்க்காவல் செய்யும் காவலர்களையும்  அவர் வர்ணிப்பது அற்புதமானது , பேய்களும், துஷ்ட தெய்வங்களும் கூடித்திரியும் மூன்றாம் சாமத்தில், பெண்யானையின் கருத்ததோலைப் போன்று அடர்ந்த கரிய இரவில் கள்வர் வருவார்கள். .  பயமற்ற கண்கள் கொண்ட அவர்கள் கையில் கல்லையும், மரத்தையும் துண்டாக்கும் கூர்மையான வாள் இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பார்கள்.  இடையில்  உடைவாள். கருமையான மேலாடை ,சுவரில் ஏற ஒரு நூலேணி கொண்டு வருவார்கள் ஊரைக்காவல் காக்கும் காவலர்கள் தூக்கம் அறியாதவர்கள். அஞ்சாத வீரம் கொண்டவர்கள் களவு சாஸ்திரம் கற்றுத் தேர்ந்தவர்கள். தப்பி ஒடி முயலும் கள்வரை அம்புகளால் அடித்து வீழ்த்துவார்கள் யானையைப் பிடிக்கச் செல்லும் புலிபோல் கள்வரை மடக்கி  பிடிப்பார்கள் என்கிறார்.

மதுரை நகரில் விதவிதமான கொடிகள் பறந்த்தை மருதனார் விவரிப்பது ஒலிம்பிக்ஸில் காண்பது போலவே இருக்கிறது,  தச்சர், கொல்லர், பூ விற்போர், நெசவாளர், உழவர் உள்ளிட்ட  தொழிலாளர்கள் மதுரை நகரில் வாழ்ந்தனர். அறுத்தசங்கைக் கொண்டு வளையல் போன்ற அணிகலன்களை செய்பவர்கள்  தனியே இருந்தனர். இரத்தினக் கற்களிலே துளையிட்டு அவைகளை மாலையாகக் கோர்த்துக் கொடுப்போர் வசித்தனர்.

புடம்போட்டு எடுத்த பொன்னால் நகைகள் செய்பவர்களும் . புடவைகளை விலை கூறி விற்கும் வியாபாரிகள், செம்பை நிறுத்து விலைக்கு வாங்கும் வணிகர்கள், மலர்கள், அகில், சந்தனம் ஆகியவற்றை விற்பனை செய்வோரும் எதனையும் உயிரோட்டமாக வரையும்  ஓவியர்களும் இருந்தனர். இதனை

கோடுபோழ் கடைநரும் திருமணி குயினரும் சூடுறு நன்பொன் சுடர் இழைபுனைநரும்

பொன்உரை காண்மரும்கலிங்கம் பகர்நரும்

செம்புநிறை கொண்மரும் கலிங்கம் பகர்நரும் செம்புநிறை கொண்மரும்,

வம்புநிறை முடிநரும் பூவம்புகையும் ஆயும் மாக்களும்,

எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்கண்ணுள் விளைஞரும் என்ற மதுரைக்காஞ்சி வரிகள் தெளிவாக  எடுத்து காட்டுகின்றன,

மதுரையில் சமணர்கள் வாழ்ந்த சமணப் பள்ளியின் சுவர்களில் அழகான இயற்கை வண்ண ஓவியங்கள் தீட்டப்பெற்றி ருந்தமையை,

கயம்கண் டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்துநோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்க

இறும்பூது சான்ற நறும்பூண் சேக்கையும் மாங்குடி மருதனார் எடுத்து காட்டுக்கின்றார்.

இப்படித் தமிழ் மக்களின் வாழ்வைக் கொண்டாடிய ஒரு கவிஞரின் நினைவுத்தூண் இன்று கவனிப்பார் அற்று போயிருக்கிறது, உள்ளுர்வாசிகள் தாங்களாக மாங்குடி மருதனார் மன்றம் அமைத்து தங்களால் முடிந்த அளவு இதைப் பாதுகாத்து வருகிறார்கள்,

செம்மொழி நிறுவனங்கள் கல்லூரி கல்லூரியாக  ஆண்டிற்கு நூறு கூட்டங்கள் நடத்தி பல லட்சங்கள் செலவு செய்கின்றன ஆனால் இது போன்ற நினைவகங்களைக் கண்டுகொள்வதேயில்லை

செம்மொழி மையமோ, தமிழக அரசோ இதை முறையாகப் பராமரித்து மாங்குடி மருதனாருக்கு ஆண்டிற்கு ஒரு விழா எடுத்து கௌரவிக்க வேண்டும், அது தான் நம் மண்ணையும் மக்களையும் பாடிய கவிக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe