ரசிகமணி கண்டெடுத்த முத்து!

ரசிகமணி கண்டெடுத்த முத்து -ரசிகமணி டி.கே.சி. அவர்களின் வாக்கோடு இந்தக் கட்டுரையை தொடங்குவது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

ரசிகமணி கண்டெடுத்த முத்து -ரசிகமணி டி.கே.சி. அவர்களின் வாக்கோடு இந்தக் கட்டுரையை தொடங்குவது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

” ஒருவனுக்கு கைநிறைய வைரங்கள் கிடைத்தன. அவைகளை வைக்கப் பெட்டகம் இல்லை, வீடில்லை. கடைசியில் அவைகள் கிடைத்தன. அப்படியானால் அவனுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருக்கும். அதே போல் நானும் தமிழில் அரிய அற்புதமான பாடல்களைக் கண்டேன். வைக்க இடமில்லாமல்த் திண்டாடினேன். தாங்களும் வேலம்மாளும் ஒப்படைப்பதற்கு இருக்கிறீர்கள். எனக்கு எவ்வளவு ஆறுதல் என்று சொல்வானேன்”

06-06-1948 அன்று நீதிபதி மகராஜன் அவர்களுக்கு டி.கே.சி. அவர்கள் எழுதிய கடிதத்தில் உள்ள கருத்து தான் மேலே சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கோபுரத்தின் கீழே வடக்குப் பகுதியில் கல்வெட்டாக பராக்கிரம பாண்டியன் எழுதி வைத்த பாடலை டி.கே.சி. அவர்கள்தான் முதன் முதலில் பார்த்து தமிழ் உலகுக்கு அறிமுகப் படுத்தினார்.

தென்காசியில் இருந்து அரசாட்சி செய்து வந்த மன்னன் பராக்கிரம பாண்டியன் சிவபக்தன்.காசி விஸ்வநாதர் பேரில் மிகுந்த பக்தி கொண்டவன்.

காசிவரை சென்று விஸ்வநாதரை தரிசிப்பது என்பது எல்லோருக்கும் இயலாத காரியம் ஆதலால் நம் ஊரிலேயே காசிவிஸ்வநாதருக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும் என்னும் அவா அவனுள் எழுந்தது.

தென்காசியில் சிற்றாறு நதிக்கரையில் சற்று மேட்டுப்பாங்கான இடத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் மிகவும் விசாலமான கோவில் பராக்கிரம பாண்டியனால் கட்டி முடிக்கப் பட்டது.

விஸ்வநாத சுவாமி சன்னதிக்கு முன்னால் ஒன்பது அடுக்குகள் கொண்ட அற்புதமான ராஜகோபுரம் நிறுவி  தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றினான் மன்னன்
பராக்கிரம பாண்டியன்.

இவ்வளவு பெரிய கோவிலை நிர்மாணித்த மன்னனுக்கு  உள்ளத்துள் ஒரு கவலை ஏற்பட்டு விட்டது.ஏதேனும்  உற்பாதம் நிகழ்ந்து கோவிலுக்கு மாசு ஏற்பட்டு விடுமோ என்னும் எண்ணம் வந்து அவனை பாடாய்ப் படுத்தி வைத்தது.

பராக்கிரம பாண்டியனது உள்ளக்கிடையானது ஒரு கவியாக மலர்ந்து விட்டது. அந்தக் கவியை கோபுரத்தின் கீழே கல்லில் பொறித்து வைத்து விட்டால் காலகாலத்துக்கும் நிலைத்து நின்று பின் சந்ததியருக்கு சொல்லிக்கொண்டு இருக்குமல்லவா என்றெண்ணி
அப்படியே செய்தும் விட்டான் அரசன்.

ஆரா யினும்,இந்தத் தென்காசி மேவுபொன் ஆலயத்து
வாராத தோர்குற்றம் வந்தால், அப்போ(து) அங்கு வந்(து)அத னை
நேராக வேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே.

தான் கட்டிய கோவிலுக்கு எந்தவித பங்கமும் வராது என்கிற உறுதி பாண்டியனுக்கு இருந்துள்ளது என்பது “வாராததோர் குற்றம் வந்தால் ” என்னும் வாக்கியத்தில் மறைந்து கிடக்கிறது.. அப்படி இருந்தும் குறை வந்துதான் விட்டது. இது சம்பந்தமாக ரசிகமணி டி.கே.சி. அவர்கள் என்ன சொல்கிறார் என்பதையும் பார்க்கலாம்:

“சுமார் நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் கோபுரத்தை மின்னல் தாக்கிற்று. கட்டுக்கோப்பைத் தாங்குவதற்காகக் கட்டுக் கட்டாக மேலே மேலே அமைந்திருந்த மர உத்திரச் சட்டங்கள் எல்லாம் நெருப்புப் பற்றி எரிந்து போய் விட்டன. மரத்தில் மிச்சம் இல்லை என்று சொல்லும்படி, எல்லாம் எரிந்து சாம்பலாய்ப் போய்விட்டது. மரச் சட்டங்களெல்லாம் எரிந்து போயுங்கூடக் கட்டுக் கோப்பு அப்படியே நின்றது.

இடையிடையே சில துண்டங்கள் பிதிர்ந்து உச்சியிலிருந்து கோபுர வாசலில் முகட்டுக் கல் விட்டங்களில் விழுந்தன. அது காரணமாகக் கல் விட்டங்கள் கீறி விட்டன.

இதையெல்லாம் உத்தேசித்துச் சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன் விட்டங்களைப் புதுப்பித்தார்கள் அதை ஒட்டிப் பிதிர்ந்து நின்ற சில பாகங்களையும் இடித்து அப்புறப் படுத்தி விட்டார்கள். இப்போதும் கருங்கல்லால் அமைத்த கோபுரத்தின் அடிக்கோப்பு அப்படியே சிதையாமல் இருக்கிறது. மேல்ப் பாகம் மாத்திரம், இடைவெளியிட்ட இரண்டு பெரும் பகுதிகளாக நிற்கிறது.

பழுதுபட்ட கோபுரமாக இருந்தாலும் தமிழர்களுடைய சிற்பப் பண்பாட்டை அழகாய் எடுத்துக் காட்டிக் கொண்டு இரட்டை கோபுரமாக நிற்கிறது.” (தென்காசி சிற்பங்கள் -கல்கி தீபாவளி மலர் / 1946)

குற்றாலம் மலைமேல் சிற்றருவிக்கு அப்பால் ஒரு திறந்த வெளியில் பாறை ஒன்று இருக்கிறது. மாலை நேரத்தில் டி.கே.சி., ராஜாஜி, கல்கி மற்றும் இலக்கிய நண்பர்கள் அங்கு கூடி ரசிகமணி பாடும் கவிதைகளையும் அவரது விளக்கத்தினையும் கேட்டு மகிழ்வார்கள்.

அந்தப் பாறையில் இருந்து கீழே பார்த்தால் தென்னஞ்சோலைகளும் மரகத்தைப் பச்சையில் வயல்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.தூரத்தில் முருகன் கோயில் கொண்டிருக்கும் திருமலைக் கோவில் ஒருபுறமும், இன்னொரு புறம் “ரெட்டைக் கோபுரம்” தென்காசி அங்கேதான் இருக்கிறது என்று சுட்டிக் காட்டிக் கொண்டும் இருக்கும்

உலகம்மன் கோவிலுக்கு உள்ளே போகும் வாசலில் கீழே தரையில் புடைச் சிற்பமாக (bas-relief) பராக்கிரம பாண்டியன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல ஒரு
சிற்ப வடிவம் பதிக்கப் பட்டிருக்கிறது.

அம்மனை தரிசிக்கப் போகும் பக்தர்கள் எல்லாம் அந்தச் சிற்பத்தை மிதித்துக் கொண்டே தான் கோவிலுக்குள்ச் சென்றுகொண்டிருந்தார்கள் எவ்வளவோ ஆண்டு காலமாக.
இடையில் ஒரு பக்தருக்கு இந்தச் செயல் மிகுந்த வேதனையை அளித்தது. அவர் தினமும் சிறிய பூச்சரம் ஒன்றை சிற்பத்தின் மேல் வைக்கத் துவங்கினார்.

இன்றும் யாராவது பூச்சரம் வைப்பதை தொடர்கிறார்கள். பக்தர்கள் அனைவரும் அந்த சிற்பத்தை மிதியாது விலகிப்  போய்க்கொண்டிருக்கிறார்கள்.

மன்னன் பராக்கிரம பாண்டியன் வாழ்ந்த அரண்மனை தென்காசி ஊரின் கீழ்பக்கம் உள்ள மேலப்புலியூரில் இருந்ததாகக் கருதப் படுகிறது. அந்த அரண்மனை இப்போது இல்லை. மன்னன் எழுப்பிய பிரம்மாண்டமான ஆலயமும் ராஜகோபுரமும் தான் இன்றும் காட்சி தந்து கொண்டிருக்கின்றன.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு குழு அமைத்து  பராக்கிரம பாண்டியன் கட்டிய கோபுரம் போலவே புதிய  கோபுரம் அமைத்திட கோவில் நிர்வாகமும், அரசினரும்
பக்தகோடிகளும் முயற்சி மேற்கொண்டனர்.

தமிழ் நாட்டில் உள்ள எல்லா கோவில்களில் இருந்தும் நிதி வந்து குவிந்து கோபுரம் அழகாக எழுந்து நின்று விட்டது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கொப்ப வெளியூர், உள்ளூர் மக்கள் தினமும் திரண்டு வந்து தரிசனம் செய்து போவதை காண முடிகிறது.

கட்டுரை – தீப . நடராஜன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...