― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்நிகழ்ச்சிகள்மண்ணும் மனிதரும் - மதிப்பீடு!

மண்ணும் மனிதரும் – மதிப்பீடு!

- Advertisement -
sivarama-karanth
  • முனைவர் பெ. சுபாசு சந்திரபோஸ்
    மண்ணும் மனிதரும் – மதிப்பீடு
    சிவராம காரந்த்
    (தமிழாக்கம் – தி.ப. சித்தலிங்கையா)

இந்திய ஆளுமையில் சிவராம காரந்த் – (1902 – 1997)
சிவராம காரந்த் இலக்கியப் படைப்பு ஆளுமைகளில் ஒருவர். கன்னட இலக்கியத்தில் படைப்பாளி, போராளி, பன்முக ஆளுமையின் அடையாளங்கள். கன்னட நாவல் எழுச்சியைத் தொடங்கி வைத்தவர்.

அவர் கலை, இலக்கியவாதி, காந்தியவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, சுற்றுச்சூழலியல்வாதி, ஓவியல், நாடகவியலாளர், அணுசக்தி எதிர்ப்பாளர், கல்விச் சீர்திருத்தவாதி, நாட்டார் மரபியலாளர், நுண்கலை, கிராமியக் கூத்துக் கலைஞர் எனப் பன்முகக் களங்களில் இயங்கிய ஓர் இயக்கம்.

சிவராம காரந்த் வாழ்வு : அவர் தென் கன்னடப் பகுதியில் மூன்று பக்கம் ஆறும், ஒரு பக்கம் கடலும் கொண்ட நிலப்பகுதியான கோடி என்னும் கிராமத்தில் 10.8.1902இல் பிறந்து எழுத்து உலகில் சுதந்திரத்திற்கு முன் 1924இல் எழுதத் தொடங்கியவர். முதலில் கவிதைகள் எழுதிப் பின், ’விசித்திர கோட்ட நாட்டின் மறுமலர்ச்சிக்கு நவோதய இயக்கம் கண்டவர்.

அவர் வைதீகப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து தன் பள்ளியில் படித்த மராத்திப் பெண் லீலாவைக் கலப்புத் திருமணம் (1936) செய்து எதிர்ப்பை எதிர்கொண்டு வாழ்வை நடத்தியவர். அவர் 40 வயதில் 1945ஆம் ஆண்டில் ’மண்ணும் மனிதரும் மண்ணையும், மனிதரையும் பற்றிய வாழ்வின் பரிணாமங்களை விவரிப்பதாகும்.

சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஆறுக்கும், கடலுக்கும் நடுவில் ’கோடி கடலோரக் கிராமத்தில் வாழும் புரோகிதர் இராமஜதாளரின் குடும்பத்தின் வாழ்வைச் சொல்வதாகும். இந்நாவல் மூன்று தலைமுறைகள் (கிராம ஐதாளர் -> மகன் லெட்சுமி -> நாராயணன் -> மகன் ராமன்) வாழ்ந்த இன்ப, துன்பமான நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகிறது.

சிவராம காரந்த் படைப்புக்கள்: அவர் 1924ஆம் ஆண்டிலிருந்து 1987 மரணம் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய படைப்புக்கள்

  1. கவிதைத் தொகுதிகள் (2)
  2. நாவல் (47)
  3. நாடகம் (31)
  4. கட்டுரை/கலை விமர்சனங்கள் (31)
  5. சாகித்தியக் கட்டடக் கலை (1)
  6. யட்ச கானம் மீட்பு (2 தொகுதிகள்)
  7. குழந்தைகள் கலைக்களஞ்சியம் (3 தொகுதிகள்)
  8. கன்னடக் கலைக்களஞ்சியம் (12 தொகுதிகள்)
  9. அறிவியல் கலைக்களஞ்சியம் (4)
  10. குழந்தை இலக்கியம் (240)
  11. பயண நூல் (4)
  12. பறவை பற்றிய நூல் (1)
  13. சுயசரிதை (56 வயதில்) (1)

அவர் 1959ஆம் ஆண்டு ’யட்ச கானபாயலதா சாகித்திய அகாடெமி விருது பெற்றார். 1977இல் இந்திய அரசு பத்ம விபூஷன் விருதும், 1978இல் நாடகக் கலைக்காக ஞானபீட விருதும் பெற்றவர்.

அவர் திரைப்பட இயக்குநர், சிறந்த உரையாடல் செய்பவர் என்னும் பன்முக ஆளுமைகளைக் கன்னடத்தில் நிலைநாட்டிய படைப்பு எழுத்தாளர். அவர் மனைவி 1986ஆம் ஆண்டில் இறந்தபோது நாவல் எழுதுவதை அந்த ஆண்டோடு நிறுத்திக் கொண்டார்.

இந்தியாவில் பிரகடனப்படுத்திய அவசர நிலையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். அவருக்கு அரசியலில் எப்போதும் ஒரு கவனம் இருந்துகொண்டே இருந்தது. அவர் 95ஆம் வயதில் மறைந்தபோது கர்நாடக அரசு இரண்டு நாள் துக்கம் அனுசரித்து மரியாதை செய்தது.

மண்ணும் மனிதரும் – கதை அமைப்பு

இந்நாவலின் கதை ’கோடி இராமஐதாளர் வாழ்விலிருந்து தொடங்கும் கடலோரக் கதை. இதன் மையக் கதாபாத்திரமாகிய புரோகிதத் தொழில் செய்யும் இராம ஐதாளர் பிராமணக் குடும்பக் கதையின் விவரிப்பே இந்நாவல்.

அவரின் தங்கை படுமுன்னூரில் திருமணம் செய்து கணவனை இழந்துவிட்டு விதவையாகி அண்ணன் வீட்டில் தங்கி இருக்கிறாள் சரசுவதி. அவர் மனைவி பார்வதி மணூர் கிராமத்தின் நாராயணமய்யாவின் ஒரே மகள். அவருக்கு 25 வயதில் கொட்டும் மழையில் கடல் அலைகளுக்கு இடையில் திருமணம் ஆடம்பரமாக நடைபெறுகிறது. அவளின் தந்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து விட்டார்.

’கோடி பெண்ணும் வயலிலும் விறகுக்காக ஆற்றிலும் வேலை செய்யும் காட்சிகள் சொல்லப்பட்டுள்ளன. அவர்கள் மண்ணில் படும் கடுமையான உழைப்பே அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமாக அமைகிறது. சரசுவதியும் பார்வதியும் ஏர் பிடித்தும், நெல் மூட்டைகளைத் தலையில் சுமந்தும் பாடுபடுகின்றனர்.

உழைப்பில் எல்லோருக்கும் முந்திச் செயல்படுபவர் சரசுவதி.
பார்வதிக்குத் திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் கடந்தும் குழந்தை இன்மையால் பெரிதும் மனக்குழப்பத்தில் வாழ்கிறாள். அந்தக் கவலையைப் போக்க ஒரு குழந்தையை சுவீகாரம் எடுக்கத் தீர்மானித்து அண்ணனிடம் சொல்ல முற்படுகிறாள் சரசுவதி. அதை இராம ஐதாளரிடம் சொல்வதற்கு முன்பே வீட்டில் விசேஷ நிகழ்ச்சிக்கு சீனப்பையர் மூலம் ஏற்பாடு செய்கிறார்.


பார்வதியும், சரசுவதியும் சுவீகார நிகழ்ச்சி என்று நினைத்தனர். ஆனால் அது அண்ணணுக்கு இரண்டாம் திருமண ஏற்பாடாக அமைந்தது. அவர் தன் காலத்துக்குப் பிறகு இறுதிச்சடங்கு செய்ய வாரிசு வேண்டும் என்று இரண்டாம் திருமணத்துக்கு முடிவு செய்கிறார். படுமுன்னூர் மாதப்பையர் மகள் சத்தியபாமையை இரண்டாம்தாரமாகச் சீனப்பய்யர் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறுகிறது.

பார்வதி, சக்காளத்தி சத்தியபாமையை வரவேற்று இணைந்து ஒரு வீட்டிலே வாழ்கின்றனர்.

சத்தியாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றனர். அவர் மகனின் பெயர் லட்சுமி நாராயணன் என்னும் லச்சன், மகள் சுப்பம்மாள் என்னும் சுப்பி.
இந்நாவலில் வரும் சரசுவதி விதவையானாலும் சோர்ந்து போகாமல் குடும்பத்தை வழிநடத்திப் பார்வதியை வழிப்படுத்தும் ஆளுமை மிக்கவள்.

ஐதாளர் லச்சனை வக்கீலாக்க வேண்டும் என்று கருதி ஆங்கிலக்கல்வி பயிலத் தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அவனின் படிக்கும் காலத்தில் தீய பழக்கங்களில் ஈடுபட்டு உறவுகளிடம் அந்நியமாகிறான். அவன் குந்தாபுரத்திலும் உடுப்பியிலும் போகங்களில் ஈடுபட்டு அப்பாவின் தாத்தாவின் பணங்களை வீணாகச் செலவழித்து அலைகிறான்.

ஐராடி வக்கீல் வாசுதேவ அய்யரின் மகன் நாகவேணியை லச்சனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். நாகவேணி முதல் கர்ப்பத்தின்போது கணவனின் பாலியல் நோயால் கருக்கலைந்து நோயாளியாகிறாள். இத்தகவல்களைக் கேட்ட அப்பா ஐதாளரும், அத்தை சரசுவதியும் பெரியம்மா பார்வதியும் அம்மா சத்தியாவும் பெருங் கவலைப்பட்டு மனம் உடைந்து போனார்கள். மங்களூரில் வக்கீலாக வேலை செய்யும் நாகவேணியின் தந்தை தன் மகளுக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணித் துடித்துப் போனார்.

சீனப்பையர் மகன்கள் பெங்களூரில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். ஐதாளரிடம் 200 ரூபாய் கடன் வாங்கி ஒரு வீடு கட்டி முடித்துச் செல்வந்தராக வலம் வருகிறார். இதைக்கண்ட ஐதாளருக்குப் பொறாமை வந்து தானும் ஓடு போட்ட பெரிய வீடு கட்ட ஆசைப்படுகிறான். அந்த ஆசைப்படி வீடு கட்டுகிறார். அதை மகன் லச்சன் விரும்பவில்லை.

ஐதாளர் இறக்கும் தறுவாயில் தன் சுயமாகத் தேடிய சொத்துக்களை எல்லாம் மருமகள் நாகவேணிக்கு எழுதி வைக்கிறார். ஆனால் அவரின் மகன் லச்சன், அவர் மனைவி நாகவேணியை விட்டுப் பல ஊர்களில் வேலை செய்து பெண் மோகம் கொண்டு, சொத்துக்களை அழித்து விடுகிறான். நாகவேணிக்கு மூத்த குழந்தை ’பிட்டு இவன்தான் மூன்றாம் தலைமுறையின் பிரதிநிதி.

நாகவேணி, மகன் ராமனுடன் அப்பா வீட்டுக்குப் போய் தமையர்களின் உதவியுடன் மெட்ரிகுலேஷன் வரை படிக்க வைக்கிறாள். அவள் தந்தை, தாயுடன் இருக்கும் காலத்தில் கவலை மறக்க வயலின் இசையில் துயரத்தை மறக்கிறாள். அவள் கணவன் லச்சனும் சீனப்பையர் மகன் ஓரட்டனும் சேர்ந்து சொத்தை எல்லாம் இழந்து குடும்ப உறவுகளை தவிக்கவிட்ட பொறுப்பற்ற பிள்ளைகள்.

ராமன் சென்னை சென்று சுய உழைப்பில் படித்து வருகிறாள். நாகவேணியின் சகோதரி கிருஷ்ணவேணி வீட்டில் தங்கிப் படிக்கிறான். அவன் படிக்கும் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வேலூர் சிறையில் அடைக்கப் படுகிறான். இதைக் கேள்விப்பட்ட நாகவேணி கொதித்துப் போனாள். அவன் சுதந்திரப் போராட்டத்திலிருந்து விலகி பி.ஏ. முடித்துப் பட்டம் பெறுகிறான்.

அவன் வேலைக்காக சென்னை, பெங்களூர், மங்களூர், பம்பாய் என்று அலைந்து சரியான வேலை கிடைக்கவில்லை; கிடைத்த ஓட்டல் வேலையும் திருப்தி இல்லை.

அவன் தீர்மானமாக ’கோடி ஈடுபட்டுச் சொத்தின் ஒரு பகுதியை மீட்கிறான். உள்ளூர் பள்ளியில் ஆசிரியராகவும் வேலை செய்கிறான்.

ராமன் படுமுன்னூருக்குப் போய் மணியக்காரர் அழைத்துக் கொண்டு பிரம்மாவரத்துக்குப் போகிறான். அவனின் அத்தைச் சுப்பிக்கு உறவான நாகப்பையர் மகள் சரசுவதியைத் திருமணம் செய்கிறான்.

நாவலின் முடிவில் நாகவேணி புன்னகையோடு ராமனைப் பார்த்து, “ராமா அவள் பெயரும் உன் பெரிய பாட்டி (சரசுவதி) பெயரும் ஒன்றுதான்” என்கிறாள்.

“என் பேரும் தாத்தாவின் பேரும் ஒன்றாயிருப்பதைப் போல” என்று சொல்லிச் சிரித்தான், ராமன் (ப – 643)

இந்நாவலில் வரும் கதைமாந்தர்கள் மண்ணில் வாழ்ந்த வாழ்வும், அவர்கள் எதிர்கொண்ட சுகங்களும் சோகங்களும் மிகவும் எதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ள குடும்ப நாவல் ’மண்ணும் மனிதரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version