மக்களவைத் தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் மிகச் சிறப்பான அரசியல் நையாண்டி நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறது டி.வி.வரதராஜனின் யுனைட்டட் விஷுவல்ஸ்.

பத்திரிகை உலக ஜாம்பவான் சோ எஸ்.ராமசாமி அவர்களை ஒரு பாத்திரமாக்கி நாடகத்தைச் சுவைபட எழுதி உள்ளார் துக்ளக் சத்யா. இந்த நாடகத்தின் பலமே துக்ளக் சத்யா அவர்களின் கேலியும், கிண்டலும் நிறைந்த வசனங்களும், சோவாக தத்ரூபமாக நடித்திருக்கும் ரமேஷ் அவர்களும்தான்.

டி.வி.வரதராஜன் துக்ளக்காக சிறப்பான வேஷப் பொருத்தத்துடன் பதூதாவுடன் தமிழக அரசியல்வாதிகளிடம் நடத்தும் கூத்து தான் இந்த நாடகம். சோவும், நாரதரும் மேல் உலகில் சந்தித்து இந்திய அரசியலைத் தூய்மையாக்குவதற்காக துக்ளக்கையும் பதூதாவையும் தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு பேரிடமும் அல்லல்பட்டு துக்ளக் எப்படி சமாளித்து மீண்டும் மேல் உலகம் திரும்புகிறார் என்பதுதான் ஒரு சின்னக் கதைச்சுருக்கம்.

டி.வி.வரதராஜனை நூறு முறை பாராட்டினாலும் தகும். காரணம், எப்பொழுதுமே தரமான நாடகத்தை அரங்கேற்றக் கூடியவர் இவர். இந்த துக்ளக் தர்பாரும் எதைச் சொல்ல வேண்டுமோ அதை மக்களிடம் சொல்லி ஒரு விழிப்புணர்வை கொண்டு வரும் என்று நம்பலாம்!

சோவாக நடித்திருக்கும் திரு.பி.டி.ரமேஷ் சோவாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். அந்த இருமல் கூட அப்படியே இவரால் இமிடேட் செய்ய முடிகிறது. சுமார் 40 க்கும் மேற்பட்ட சோ பேசிய வீடியோ கேசட்டுகளைப் போட்டுப் பார்த்து அதே நடை, உடை, பாவனையுடன் அசத்தி இருக்கிறார் ரமேஷ்.

இரண்டு மங்கையர்கள் இந்த நாடகத்தில் கலக்குகிறார்கள். ஒன்று லோ க்ளாஸ் மங்கம்மா. இன்னொருவர் தலைமைச் செயலாளராக வருபவர் இருவருமே பாத்திரம் அறிந்து கணக்கச்சிதமாக செய்துள்ளார்கள். டாப் ஸ்டார் சங்கராக வரும் பாத்திரம் கைத் தட்டலை அள்ளுகிறது. குறிப்பாக அந்த டி.வி. நேர்காணல் சபையோரைப் பெரிதும் கவர்ந்தது. இந்த இடத்தில் சத்யா அவர்களுடைய கற்பனைத்திறன் பளிச்சிடுகிறது.

டி.வி.வரதராஜன் மிகச் சரியானவர்களை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றாற்போல் தேர்வு செய்ததோடு மட்டுமில்லாமல் சிறப்பான முறையில் இயக்கி இருக்கிறார். ஷோபனா ரவி, ராமகிருஷ்ணன், செந்தமிழ் அரசு, ரங்கநாதன் போன்றவர்களின் குரலில் செய்திகளை இந்நாடகத்தில் கேட்கும்போது நாம் பார்ப்பது நாடகமா இல்லை நிஜமாகவே நம் கண் முன்பாக காட்சிகள் ஓடுகிறதா என்கிற ஐயத்தைக் கூட வரதராஜன் ஏற்படுத்திக் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல!

கடைசி காட்சியில் சோ தோன்றி சோவுக்கே உரிய முறையில் பேசி இன்று சோ இருந்தால் என்ன சொல்வாரோ அதை அப்படியே தனது வசனத்தில் வடித்திருக்கிறார் துக்ளக் சத்யா. இந்த நாடகம் வரதராஜன் துக்ளக் சத்யா கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொல்லலாம்.

– விமர்சனம் : கீழாம்பூர் (கலைமகள் ஏப்ரல் 2019 இதழ் விமர்சனம்)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...