October 21, 2021, 10:46 am
More

  ARTICLE - SECTIONS

  வீடெங்கும் மாவிலைத் தோரணம்

  mango leaves1 - 1

  லட்சுமி அஷ்டோத்தரத்தில் ‘ஓம் ப்ரக்ருத்யை நமஹ!’ என்ற நாமம் உள்ளது. இயற்கையின் வடிவில் இருக்கும் லக்ஷ்மியை இந்த நாமம் போற்றுகிறது.

  மகளிர் நெற்றியில் இடும் குங்குமப் பொட்டு முகத்திற்கு லட்சுமி களையை அளிக்கிறது. ஸ்வாமி அறையில் ஏற்றும் தீபம் வீட்டின் உள்ளே லட்சுமி களையை விளங்கச் செய்கிறது. வீட்டு வாசலில் இடும் கோலமும் முகப்பு நிலை வாசலுக்கு கட்டும் மாவிலைத் தோரணமும் வீட்டிற்கு லட்சுமி களையை ஏற்படுத்துகின்றன.

  தெருவிற்கும் நம் வீட்டிற்கும் இடையில் இருக்கும் பாதுகாப்பு, வீட்டு முன் நிலைக் கதவு. இது திருடர்களிடமிருந்து வீட்டிலிருப்போரைக் காக்கிறது.

  நாம் வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும் போது தூசி, கிருமி, கண் திருஷ்டி எல்லாவற்றையும் சுமந்து வருகிறோம்.

  துவார பந்தம், துவார மகாலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படும் வீட்டு நிலை வாசற் கதவிற்கு மாவிலைத் தோரணம் கட்டுவது நம் முன்னோர் ஏற்படுத்திய சூட்சும விஞ்ஞானம்.

  வீட்டிற்கு வெளிப்புறம் நிலவும் எதிர்மறை சக்திகளைக் களைந்து நல்ல ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும் வல்லமை மாவிலைக்கு உண்டு. வீட்டு வாசலில் துளசிச் செடி அருகில் ஏற்றப்படும் பசு நெய் விளக்கிற்கும், வீட்டு வாசல் நிலைப்படிக்கு கட்டும் மாவிலைத் தோரணத்திற்கும் துர்தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி உள்ளது.

  வீட்டு நிலைப்படிக்கு மாவிலைத் தோரணம் கட்டுவதால் வாஸ்து தோஷம் நீங்குகிறது. மங்களம் சுபம் இவற்றின் அடையாளமாக வீடுகளில் மட்டுமல்லாது ஆலயங்களிலும் மாவிலைத் தோரணம் கட்டும் வழக்கம் உள்ளது.

  மாவிலைத் தோரணம் மனதுக்கு அமைதியை அளிக்கிறது. பசுமையான மாவிலைத் தோரணம் பார்க்கும் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி அசூயை போன்ற தீய குணங்களை விலக்குகிறது.

  சுப நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களில் கட்டும் மாவிலைத் தோரணம் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சிக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு சுற்றுச் சூழலை மாசு நீக்குகிறது என்ற அறிவியலை அன்றே அறிந்த நம் முன்னோர் சூட்சும அறிவியலையும் உணர்ந்திருந்தார்கள்.

  மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறாள். பூஜைகளின் போது கலசத்தில் மாவிலைக் கொத்து வைப்பது வழக்கம். பூஜை முடிந்த பின் மாவிலைக் கொத்தினால் தீர்த்தம் தெளிப்பார்கள்.

  மாமரத்தின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுபவையே. மா பலா வாழை என்ற முக்கனிகளில் முதலில் நிற்பது மாம்பழம். முருகப் பெருமான் பாலகனாக பழனிக்குச் சென்று ஆண்டி கோலத்தில் நிற்கக் காரணமானது கூட ஒரு மாங்கனியே. நூற்றுக்கு மேற்பட்ட மாம்பழ ரகங்கள் உள்ளன. உலகில் மாம்பழம் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இதில் கெரோடின், விட்டமின் சி, கால்ஷியம் அதிகமாக உள்ளது.

  மாமரத்தின் பல பாகங்கள் ஆயுர்வேதத்தில் வியாதி நிவாரணியாக விளங்குகிறது. கான்சர் வியாதிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் மரப்பட்டை ஒளஷத குணம் கொண்டது. இதன் திடமான மரப் பலகை ஊஞ்சல், கதவு, உத்தரம் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களாகப் பயனாகிறது.

  இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் தேசிய பழமாக மாம்பழம் விளங்குகிறது. பங்களாதேஷின் தேசிய மரம் மாமரம்.

  mango leaves2 - 2

  மாமரம் ஒரு வெப்பத் தாவரமாகும். இது நீண்ட நெடுங்காலம் பெரிதாக வளரக் கூடிய மகா விருக்ஷம். முன்னூறு ஆண்டுகள் கூட வாழ்ந்து பழம் கொடுக்கக் கூடியது.

  மாங்காயை நினைத்தாலே நாவில் நீர் ஊறும். மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும் என்பது பழமொழி.

  ஊறுகாய் போடவும், ஜூஸ் எடுக்கவும் அப்படியே சாப்பிடவும், மாங்கோ ஜெல்லி, ஆம்சூர் பொடி, மாங்காய் வற்றல் தயாரிக்கவும் பயன்படுகிறது. மாங்கோ ஜாம், மாங்கோ ஐஸ் க்ரீம் என்றால் குழந்தைகள் விடாமல் சுவைத்து உண்பார்கள்.

  உலகம் முழுவதும் பல விதங்களில் மாங்காய் ஊறுகாய் போடப்பட்டு ருசிக்கப்படுகிறது. வடு மாங்காய், உப்பு பிசறல், மெந்திய மாங்காய்… என்று வகை நீளும். குஜராத்தில் வெல்லப் பாகு சேர்த்து மாங்காய் ஊறுகாய் போடுகிறார்கள். ஊறுகாய்களிலேயே ராணியாக விளங்குவது ஆந்திராவின் ஆவக்காய் ஊறுகாய். இந்தப் பிரபலமான ஆவக்காய் ஊறுகாய் குண்டூர் மிளகாய்ப் பொடியும் கடுகு பொடியும் சேர்த்து காரசாரமாகப் தயாரிக்கப்பட்டு கண்ணையும் நாவையும் ஒரு சேர ஈர்த்து நீர் வரவழைக்கும் குணமுடையது.

  வேனிற்காலம் வந்தால் போதும். மாமரம் துளிர் விட்டு பூத்துக் குலுங்கி மாமரக் குயில்களை விரும்பி அழைத்துக் கூவச் செய்யும்.

  கடற்கரைக்கு காலாற நடக்கச் செல்பவர்கள் உப்பும் காரமும் தூவிய ஒட்டு மாங்காய் பத்தைகளை வாங்கிச் சுவைக்காமல் இருக்க மாட்டார்கள்.

  மாங்காய் வடிவம் புடவைகளிலும் ஆடை அணிகலன்களிலும் தங்க நகைகளிலும் சித்தரிக்கப்பட்டு அழகூட்டுகிறது.

  காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் பார்வதி தேவி தவமிருந்து சிவனை பூஜித்த மாமரம் பிரசித்தமானது.

  உலக மாம்பழ உற்பத்தியில் இந்தியா நாற்பது விழுக்காடு உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது. சைனாவும் தாய்லாந்தும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

  -ராஜி ரகுநாதன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,572FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-