காண்பதைக் கொண்டு

servant
கோப்பு படம்

ஒரு முடிவுக்கு வரும் முன், யோசித்து முடிவு செய்யுங்கள்.

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.

ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.

காவலாளியின் முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது.

ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.

ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.

முதலாளி பார்த்தது, காவலாளிக்கு தெரியாது.

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.

காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றார்.

இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையில் சுடச் சுட விதவிதமாக உணவு இருக்கும்.

அவரும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட்டு வந்தார்கள்.

இருந்தாலும் யார் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறார் என மனதுக்குள் ஒரு கேள்விக்குறி இருந்து கொண்டே இருந்தது.

திடீர் என ஒரு நாள் முதலாளி இறந்து விட்டார்.

வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும், வந்திருந்தனர்.

அன்று அதே இடத்தில் உணவுப் பொதியை தேடினார்.

உணவு இருக்கவில்லை.

ஒரு வேளை, பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது என நினைத்து அன்று விட்டு விட்டார்.

இரண்டாம் நாள் பார்க்கிறார், அந்த இடத்தில் உணவுப் பை இல்லை. மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறார். உணவுப் பை இருக்கவே இல்லை.

இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று.

உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்திக் கேட்டார்.

அதற்கு முதலாளியம்மா, மகனிடம் கலந்தாலேசித்து சொல்வதாக சொன்னார்.

இது நாள் வரை போதுமானதாக இருந்தது, இப்போது மட்டும் எப்படி பற்றாக்குறை ஏற்பட்டது என வினவினார்.

வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப் பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் முதலாளியம்மாவிடம் எடுத்துச் சொன்னார்.

எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனது என்று முதலாளியம்மா கேட்டார்.

அதற்கு அவரும் முதலாளி இறந்த நாளிலிருந்து என சொன்னார்.

முதலாளியம்மா ‘ஓ’ என அழத் தொடங்கினார்.

இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு கூட எனக்கு வேண்டாம் அம்மா,
நான் இங்கேயே வேலை செய்கிறேன்,
முதலில் நீங்கள் அழுவதை நிறுத்துங்கள் என கூறினார்.

அதற்கு முதலாளியம்மா, நான் அதை நினைத்து அழவில்லை.

என் கணவர் தினமும் ஏழு நபர்களுக்கு உணவளித்து வந்தார்.

அதில் ஆறு நபர்களை ஏற்கனவே அடையாளம் கண்டு விட்டேன். ஏழாம் நபரைத் தான் இத்தனை நாளாய் தேடிக் கொண்டிருந்தேன்.

ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன். இது அழுகை கூட இல்லை. என் இறைவனுக்கு நான் செலுத்தும் காணிக்கை என்றார்.

நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும்,
ஒரு நாள் கூட நம்மை ஏறெடுத்தும் பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என மலைத்தபடி நின்றார்.

அடுத்த நாளிலிருந்து, முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப் பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றார்.

காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு அவனது தந்தையைப் போலவே, பதில் சொல்லாமலேயே தினமும் செல்வார்.

ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடி வந்து உணவுப் பையை கையில் கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னார் காவலாளி.

அதற்கு அவரிடமிருந்து வழக்கம் போல எந்த பதிலும் வரவில்லை.

பொறுமையை இழந்த காவலாளி, மிகவும் உரத்த குரலில், “நன்றி சொன்னால் பதில் கூற மாட்டீர்களா?”
என வருத்தத்துடன் வினவினார்.

திரும்பிப்பார்த்த அந்த சிறுவர், “நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று எனக்கு தெரியாது. காரணம்:
எனக்கும் என் தந்தையைப் போலவே காது இரண்டும் கேட்காது” என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் போனார்.

நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது, பார்த்த மாத்திரத்திலேயே அவர்களை தவறாக முடிவெடுத்து விடுகிறோம்.

அடுத்தவர்களது நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத் தன்மையை அறியாமல் நாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.

இந்தக் கதையிலிருந்து மூன்று விடயங்களை எடுத்துக் கொள்ளலாம்;

ஒன்று: எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலேயே அதை நம்பி, நல்லதாகவோ, அல்லது கெட்டதாகவோ முடிவெடுக்கக் கூடாது.

இரண்டு: நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு மட்டும் தான் பிரச்னை. மற்றவர்களுக்கு இல்லை என நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது.

மூன்று: அவர்களுக்கு வசதியை கொடுத்த இறைவன்,
நமக்கு ஆரோக்கியத்தை அளித்துள்ளான்.

பல விஷயங்களில் நிறைவை தந்த இறைவன்,சில விஷயங்களில் குறைவை தந்துள்ளான். அதன் சூட்சுமம் அவன் மட்டுமே அறிவான் என மனப்பூர்வமாக எண்ணி அவனுக்கு அனுதினமும் நன்றி செலுத்த வேண்டும்.

உடையையும்,உள்ளத்தையும்,எண்ணத்தையும், பார்வையையும், தூய்மையாக வைத்து பாருங்கள்,

வாழ்க்கை எவ்வளவு அழகானது என புரியும்.

பணமும், வசதியும், அழகும், மட்டுமே வாழ்க்கை அல்ல.

நேர்மையும், இறை வழிபாடும், எவ்வளவு மன அமைதியையும், சந்தோஷத்தையும் தரும் என்பதை,
அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்.

முயற்சித்துத் தான் பாருங்களேன்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version