― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைபயில்வானை புத்தியால் ஓட ஓட விரட்டிய பார்ப்பனன்!

பயில்வானை புத்தியால் ஓட ஓட விரட்டிய பார்ப்பனன்!

- Advertisement -

ஒரு முறை தெனாலி ராமன் வாழ்கின்ற நாட்டு மன்னருக்கு அண்டை நாட்டு அரசன் ஒருவர் ஓலை அனுப்பியிருந்தார். அந்த ஓலையில், மதிப்புக்குறிய ராஜாவுக்கு, உங்கள் நாட்டின் மேல் நான் போர் தொடுக்க உத்தேசித்துள்ளேன்.

மூன்றாவது பெளர்ணமி அன்று உங்கள் நாட்டிற்கு எதிராக போர் முரசு கொட்டப்படும். எனது நாட்டுப்படையைப் பற்றி நீங்கள் அறியாததா? உங்களுக்கு போருக்கு சம்மதமா? கத்தியின்றி இரத்தமின்றி போர் முடிய வேண்டும் என்றால், நீங்களும், உங்கள் நாடும் என்னிடம் தோல்வியை ஏற்றுக் கொண்டு, நாட்டினை என்னிடம் கொடுக்க வேண்டும்.

அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்து நாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நீங்கள் வாழ்ந்து கொள்ளலாம். இப்படிக்கு, ராஜ ராஜ சிம்மன். மன்னர் உடனே அரச சபையினை நோக்கி அவர்களது கருத்துக்களை கூறச் சொன்னார்.

சேனாதிபதி முதல் மந்திரிகள் வரை ராஜ ராஜ சிம்மனின் படையை வெல்ல முடியாது என்பதை ஆணித்தரமாக கூறினார்கள். மன்னனுக்கும் தெரியும் அந்தப் படையை வெல்லமுடியாது. மேலும் போர் ஏற்பட்டால் எண்ணற்ற மக்கள் உயிரை இழப்பார்கள், பெரும் சேதம் ஏற்படும்.

இதற்கு என்ன தான் வழி என்று மன்னர் கேட்டார். உடனே அனைவரும் ஆளுக்கு ஒன்றாக பேசினார்கள். அனைவரின் கருத்தும் போரிடாமல் எதிரிக்கு தலை வணங்கலாம் என்பதே. இவ்வளவு நேரமும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த தெனாலிராமன் பேசத் தொடங்கினார்.

மன்னா! எதிரி மன்னன் ராஜ ராஜ சிம்மனிடம் நீங்கள் மண்டியிட்டு விட்டால், நாளைய வரலாறு நம் நாட்டையே கேலி செய்யும், இத்தனை நாள் நீங்க பெற்றிருந்த புகழ் எல்லாம் மங்கி போயிடும், மக்களுக்கும் பெரிய அவமானமாகி விடும்.. அதற்கு பதில் போரிட்டு மடிந்தாலும், மாபெரும் படையுடன் போரிட்டு செத்து மடிந்தார்கள் என்று வரலாறு இருக்கும்.

அரசரை தவிர அனைவரும் தெனாலிக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். முடிவில் மன்னர், தெனாலிராமன் சொல்வதில் உண்மை இருக்கின்றது. அடிமையாக வாழ்வதை விட போர் செய்து மடியவே விரும்புகின்றேன்! என்றார்.

அத்தோடு அரச சபை கலைந்து விட்டது. அதன் பின்னர் மன்னரும் தெனாலியும் நீண்ட நேரம் தனிமையில் உரையாடினார்கள். இதற்கு மாற்று வழி உண்டா என்று ஆய்வு செய்தார்கள். ஐந்து நாள்களுக்குப் பின் மீண்டும் அரச சபை கூடியது. அரசரைப் பார்த்து மன்னா உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருந்தால், இந்த விசயத்தை என்னிடம் விடுங்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன். எனது உயிரை கொடுத்தாவது இந்த நாட்டினை காப்பாற்றுகின்றேன் என்றார் தெனாலி.

அதற்கு மன்னர் சம்மதம் தெரிவித்தார். தெனாலி கூறுவதைப் போன்று ஒரு ஓலை எழுதி மோதிர முத்திரை பதித்து கொடுத்தார் தெனாலியிடம். அந்த ஓலையை எடுத்துக் கொண்டு தெனாலி எதிரி நாட்டு மன்னர் ராஜ ராஜ சிம்மம் முன்னால் போய் நின்றார். அரசர் கொடுத்த ஓலையை உரக்கப் படித்தார்.

மதிப்புக்குறிய மன்னர் ராஜ ராஜ சிம்மனுக்கு, உங்கள் படைக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல எம் வீரர்கள். போருக்கான நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். உங்கள் படையின் மனபலம் உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்று நினைக்கின்றேன்.

அவர்கள் எங்கள் படையோடு போர் செய்வதற்கு பயந்து நடுங்குகின்றார்கள். எதற்கு கோழைகளின் உயிரை கொல்லவேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த ஓலையை எடுத்து வந்த வீரர் எங்கள் படையில் மருத்துவ உதவி செய்பவர். இவரை உங்கள் நாட்டு சேனாதிபதி சண்டையிட்டு வென்று விட்டால், எனது நாட்டை உங்களுக்கு பரிசாக கொடுத்துவிடுகின்றேன்.

ஓலையில் எழுதியிருப்பதை கேட்ட ராஜ ராஜ சிம்மன், தெனாலியை மாறி, மாறிப் பார்த்தார். மெலிந்த உருவம் கொண்ட தெனாலியை கேலியாகப் பார்த்தார். யார் அங்கே இவனை பிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர். மன்னிக்கவும் மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாக வந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும் செயல் அல்லவா? என்றார் தெனாலி.

உமது மன்னர் உம்மை எமது சேனாதிபதியுடன் சண்டை செய்யும்படி அனுப்பியுள்ளதாக இந்த ஓலையில் எழுதியிருக்கின்றார், இது தெரியுமா உனக்கு? தெனாலி அப்படியா மன்னா. எங்கள் மன்னர் இதைப் பற்றி எனக்கு எதும் கூறவில்லை.

ஆனாலும் எங்கள் மன்னர் உத்தரவுக்கு கட்டுப்படுகின்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள். எங்கள் நாட்டு சட்டம், சண்டை செய்யும் முன், சண்டை செய்யும் இருவரும் மூன்று நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டும் என்பதே, அதன்படி என்னையும், உங்க சேனாதிபதியையும் சிறையில் அடையுங்க, நான்காம் நாள் நான் அவருடன் போட்டி போடுகிறேன்.

அப்போது தான் தெனாலி சேனாதிபதியைக் கண்டார். ஏழு அடி உயரத்தில் ஒரு மாமிச மலை போன்று இருந்தான் அவன். தெனாலியும், சேனாதிபதியும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இருவரும் அடுத்தடுத்த சிறையில் அடைக்கப்பட்டார்கள். இருவருக்கும் இடையில் ஒரு சுவர் இருந்தது.

இருவரும் பார்த்துக் கொள்ள முடியாது ஆனால் பேசிக் கொள்ளலாம். இருவருக்கும் நன்றாக சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பாடு முடிந்ததும், இப்போ சாப்பிட்டதைப் போல் தான் சண்டையில் உன்னை கொன்று, உன்னை சாப்பிடுவேன் என்று கத்தியபடி இருப்பான் சேனாதிபதி. சரி சரி அப்போது பார்த்துக் கொள்வோம் என்று மட்டும் பதில் சொல்வார் தெனாலி.

சேனாதிபதி நித்திரையானது இருவருக்கும் இடையில் இருந்த சுவரை தண்ணீர் ஊற்றி மெல்ல மெல்ல கரண்டியால் சுரண்ட ஆரம்பித்தார் தெனாலி. விடியும் போது ஒரு அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட சுவரை சுரண்டி மெல்லியதாக ஆக்கிவிட்டார்.

இது ஏதும் சேனாதிபதிக்கு தெரியாது. மறுநாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும், சேனாதிபதி கத்த ஆரம்பித்து விட்டான். உன்னை கொல்வேன், தின்னுவேன் என்று. சரி, சரி சேனாதிபதி. நாளை சண்டையின் போது அதைப் பார்ப்போம்.

இப்போ நான் வெற்றிலை சாப்பிடுகின்றேன் உன்னிடம் சுண்ணாம்பு இருந்தால் தா. சுண்ணாம்பு இருக்கின்றது எப்படி தருவது என்றான் சேனாதிபதி. இதோ விரலில் பூசி விடு என்று தான் சுரண்டிய சுவரில் கையால் குத்தினார். தெனாலியின் கை அடுத்த பக்கம் வந்து விட்டதை பார்த்து பயந்து விட்டான் சேனாதிபதி.

சேனாதிபதி சுண்ணாம்பை பூசிவிடும் போது அவன் கை நடுங்குவது கவனித்த தெனாலி, என்ன சுவரை உடைத்ததற்கே இப்படி பயப்படுகின்றார்? எங்கள் நாட்டில் நான் ஒரே அடியில் ஒரு யானையைக் கொன்று இருக்கின்றேன் தெரியுமா? நான் எல்லாம் சும்மா தான். எங்கள் சேனாதிபதி யானையை தனது ஒரு கையால் தூக்கி சுற்றுவதை நீ பார்க்க வேண்டும். யாரிடமும் சொல்லிவிடாதே எங்கள் நாட்டிற்கு வந்த ஒரு முனிவர், எங்கள் படையில் இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் அசுர பலம் கிடைக்க வரம் தந்தார்.

அதன் பின்னர் தான் எங்களுக்கு இப்படி அசுர பலம் கிடைத்தது என்றார் தெனாலி. எல்லாவற்றையும் கேட்ட சேனாதிபதி பயந்து விட்டான். மறு நாள் நாட்டு மக்கள் அனைவரும் சண்டையைக் காண வந்திருந்தார்கள். மன்னர் தனது வாளை சேனாதிபதிக்கு கொடுத்து தலையை கொய்து விடு என்றார். தெனாலியைப் பார்த்து உமக்கு என்ன ஆயுதம் வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளும் என்றார். மன்னா எனக்கு ஆயுதம் வேண்டாம். வெற்றிலை மாத்திரம் கொடுங்கள் போதும் என்றார்.

மன்னர் சிரித்துக் கொண்டு ஆகட்டும் என்றார். இரண்டு வீரர்கள் ஓடிவந்து, ஒருவர் வெற்றிலை கொடுத்தார். மற்றவர் சுண்ணாம்பு கொடுக்க போனார். சுண்ணாம்பை சேனாதிபதியின் நெற்றியில் வையுங்கள் நான் எடுத்துக் கொள்கின்றேன். சேனாதிபதியின் நெற்றியில் சுண்ணாம்பு வைத்ததும் தனது கை முட்டியை முறுக்கினார். அவ்வளவு தான். ஐயோ என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று தெனாலியின் காலில் விழுந்து விட்டார் சேனாதிபதி. மன்னா! இவர்கள் நாட்டின் மேல் ஆசைபடுவதை விட்டுவிடுங்கள். இவர் ஒருவரே நம் படையை அழித்து விடுவார் என்று எல்லாவற்றையும் சொன்னான்.

சுவரை போய் பார்த்த மன்னனும் உண்மை என்றே நினைத்து விட்டார். ஒரு குதிரை வண்டியில் நிறைய பொற்காசுகளை தெனாலியின் மன்னருக்கு பரிசாக கொடுப்பதாகவும், தன்னை மன்னித்து விடும்படியும் மன்னர் ஓலை எழுதி தெனாலியிடம் கொடுத்துவிட்டார். வெற்றியோடு நாடு திரும்பும் தெனாலியை வரவேற்க மன்னரும் மக்களும் எல்லையில் காத்திருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version