spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைஇது... என் மனத்தின் குரல்!

இது… என் மனத்தின் குரல்!

- Advertisement -
rajam artist

ஓவியர் ராஜம் எழுதிய கடிதம் இது. 2007இல்.
நான் மஞ்சரி இதழாசிரியராக இருந்த போது, கலைமகள் அலுவலகத்துக்கு ஓவியர் ராஜம் அனுப்பினார் என்று சொல்லி ஒருமுறை வந்தார் நீதிபதி ஒருவரின் மனைவியார். பெயர் பாரதி என்றார். அவரிடம் ஓவிய நுட்பங்களைக் கேட்டு கற்றுக் கொண்டிருந்தார்.

அப்போது இவர் உந்துதலில் சித்திர ஆழ்வார்கள் என்று ஆழ்வார்களின் சரித்திரத்தை ஓவியர் ராஜம் ஓவியமாக்க முனைந்திருந்தார். அதற்கான அடிப்படைக் குறிப்புகள் கேட்டிருந்தார். கொடுத்தேன். மேலும் தேவைப்பட்டது. வந்து பார் என்றார். அதே மயிலாப்பூர்தான். அருகில் இருந்த நடுத்தெருதான். ஆனாலும் என்னமோ நேரம் அமையாமல் என் அன்றாட வேலைகளில் குறிப்பாயிருந்து விட்டேன்.

வானொலி, டிவி., மாலை நேர மேடைகள், இதழ் தயாரிப்பு, இலக்கிய நாடக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பு, நண்பர்களுடனான கூடுதல் என பரபரப்பாக இயங்கி வந்த இள வயது.

ஓரிரு முறை போன் செய்தார். வருகிறேன் என்றேன். அவருடைய ஓவியங்கள் சில கலைமகள் / மஞ்சரி அட்டைக்கு சில காலம் முன் வரைந்து கொடுத்திருந்தார். அந்த ஒரிஜினல் பெயிண்டிங் வேண்டும் இருந்தால் எடுத்து வந்து கொடு என்றார். சரி என்றேன். அலுவலகத்தில் தேடிப் பார்த்தேன். அகப்படவில்லை. எப்படியும் அவற்றை எடுத்துக் கொண்டுதான் ராஜத்தை சந்திப்பது என்று இருந்தேன். அதனாலேயே நாள் கடத்திக் கொண்டு போக…

இவ்வாறு கடிதம் எழுதினார் ராஜம். ‘நெடுநாட்கள் ஆகி விட்டது. நீங்கள் ஒரிஜினல் பெயிண்டிங் வாங்கிக் கொடுக்கவும். சித்திர ஆழ்வார்கள் கட்டுரை (புத்தகத்துக்கு) மிக நாள்கள் ஆகியும் வரவில்லை. JUDGE CHANDRU மனைவி என்னைப் பார்க்கும்போதெல்லாம் கேட்பதால், இதை அதிசீக்கிரம் எடுத்து (படம் கட்டுரை) வர கோருகிறேன்.
. .. … …. …..
உங்களையும் என் பெயிண்டிங்க், சித்திர ஆழ்வார் கட்டுரையுடன் சப்தஸ்வர ஆரம்பத்தையும் எதிர்பார்க்கும்… ராஜம். – என்று எழுதியிருந்தார்.

rajam letter
  • திராவிட இயக்க சிந்தனாவாதிகளின் மனைவியர் பெரும்பாலும் ஆத்திகர்களாகவும், தெய்வத் தமிழின் பாலும், தெய்வ வழிபாடுகளின் மீதும் பெரும் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அறிவுடை நம்பி என்று ஒரு பெரியவர். ஒருமுறை கலைமகள் அலுவலகப் படிகளில் மூச்சிரைக்க ஏறி வந்தார். சிலரது முகங்களைப் பார்த்தாலே திராவிட இயக்கத்தவர்களின் சாயல் தென்படும். உதடுக்கு மேல் சற்று மீசையை லேசாக கத்திரித்து கோடு போல் வைத்திருப்பார்கள், சிலர் ஐப்ரோ பென்சிலால் வரைந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் இவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார். அவர் முகத்தில் பெருகிய வியர்வைத் துளிகளைக் கண்டு, அவரை சற்று நேரம் அமருங்கள் என்று கூறி, ஆசுவாசப் படுத்தி, குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து… சில நிமிடங்களுக்குப் பிறகே ம்ம்.. சொல்லுங்க சார் இப்ப பேசலாம் என்றேன்.

அவருக்கு அப்போதே என் மீதான நெருக்கம் மனத்தளவில் ஏற்பட்டுவிட்டது போலும்! அவர் கையில் வைத்திருந்த, அவர் எழுதிய அபிராமி அந்தாதி விளக்க புத்தகத்தை அளித்தார். தாம் அப்போதுதான் கபாலீசன் கோயிலுக்குச் சென்றுவிட்டு கற்பகாம்பாளை தரிசித்து விட்டு வருவதாகவும், அடுத்து கலைமகளின் கோயிலுக்கு வருவதாகவும் கொஞ்சம் சிலேடையாக சிரித்துக் கொண்டே சொன்னார்.

பின்னாளில் அவர் வீட்டுக்கும் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அழைக்க, என் பைக்கில் அடிக்கடி சென்றிருக்கிறோம். அவர் திராவிட இயக்க வழித்தோன்றல் என்பதை அவர் கூறிய சம்பவங்களில் இருந்து தெரிந்து கொண்டோம். தமக்குள்ள தலைவர்களின் தொடர்புகள், தாம் சட்ட மேலவையில் எம்.எல்.சி.,யாக இருந்தது, அண்ணாதுரை தொடர்புகள், கருணாநிதி, எம்ஜிஆர் சம்பவங்கள் என அடுக்குவார். அந்தக் கால திராவிட மேடைப்பேச்சு… தமிழன் ரத்தம் குடித்த மூட்டைப்பூச்சி துள்ளி எழுந்து ஓடிய கதை என அவரது விவரணைகள் சுவாரஸ்யமானவை.

ஒரு கட்டத்தில் ஆத்திக சிந்தனை மேலோங்கியவராக மாறியுள்ளார். அதையும் குறிப்பிட்டு, அபிராமி அந்தாதி பேரில் தமக்குள்ள விருப்பத்தையும் குறிப்பிட்டு… நிறைய சொல்லியிருக்கிறார். அந்தக் கட்டத்தில் என்னைப் பார்க்கும் போதெல்லாம்… என்ன நம்மாழ்வார் எப்படி இருக்கீங்க என்பார். நான் அவருக்கு நம்மாழ்வார் ஆகிப் போனேன். கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவருக்கு ஞானசம்பந்தர் ஆகிப் போனார். ஒவ்வொரு முறையும் அப்படித்தான் அழைத்துக் கொண்டே அலுவலகம் பக்கம் வருவார்.

பின்னாளில் திருநாவுக்கரசருடன் நெருக்கமாகி, அவருடனேயே இருந்தார். அண்ணாநகரில் திருநாவுக்கரசர் வீட்டுக்கு பக்கத்தில்தான் இவர் வீடு! முதல்முறையாக அவர் வீட்டுக்குச் சென்றிருந்த போது… வீடு தெய்வாம்சம் பொருந்தியதாக இருந்தது. தெய்வ வடிவங்கள், படங்கள், சாயிபாபா… என்றெல்லாம்! அவர் மனைவி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிராமண வகுப்பைச் சார்ந்தவர் என்று அறிமுகப் படுத்தினார். வீட்டின் இந்த அழகுக்குக் காரணம் தம் மனைவியாரே என்றார்! மகன்கள் குறித்துச் சொன்னார். ஒருவர் தீவிர சாய்பாபா பக்தர்; ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்றார்.

அவர் காலமான பின்பும் அவருடனான பழகிய நினைவுகள் அடிக்கடி வந்துபோகும்.

*
அன்று ஓவியர் ராஜம் மூலம் அறிமுகமான அந்தப் பெண்மணியிடம் 26 வயது ‘சிறுவனாக’ நான் உரையாடிய போது… அதே ஆத்திக சிந்தனைகள் நிறைந்தவராக, உயர்ந்த குணங்கள் கொண்டவராக, கலை ஆர்வம் மிகுந்தவராக… முக்கியமாக நம்பிக்கைக்குரிய நபராக அவர் தெரிந்தார். அவரின் கணவர் பல இடங்களுக்கும் கார் ஓட்டிக் கொண்டு அவரை அழைத்துச் சென்றிருக்கிற படியால், ஊறுகாய் பதம் ஆவது போல், காரோட்டி பதமும் சரியாக இருக்கும்தான்! ஆனால் திராவிட இயக்க வழித்தோன்றல்களைப் போல் அன்றி… நாம் பக்குவப் பட்டிருப்பதால்… அவ்வாறெல்லாம் குறிப்பிடவில்லை!
*
எங்கள் ஊரில் சில பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது… சொல்லியிருக்கிறார்கள்…

அந்தக் காலத்தில் இங்க்லீஷ்காரன் ஏன் ஊருக்கு வெளியில் மக்களிடம் இருந்து தள்ளிப் போய் நீதிபதிகளுக்கு, கலெக்டர்களுக்கு பங்களாக்களை கட்டி வெச்சான் தெரியுமா? ஊரில் உள்ள சாதாரண மக்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றுதான். அவங்க இந்த மக்களோட பழகினா… இவர்கள் தரப்பில் நீதி சொல்ல வேண்டிய நிலையில்… ஒரு தலைப் பட்சமா போயிடும். அல்லது உள்நோக்கத்தோட போயிடும். சிலருக்கு பழகிய பழக்கத்தால சார்புத்தன்மையோட இருந்துடும். அதனாலதான், நீதிபதிகள் எப்பவுமே தங்களை தனிமைப்படுத்திக்கணும். அதுதான் நீதி வழங்கும் முறைக்கு சரியானதாக இருக்கும் என்பார்கள்.

ஆனால் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்பு சிலரது சொல்லும் செயலும் எழுத்தும் இன்றைய நவீன பழக்கவழக்க காலத்தில் பெரிதும் யோசிக்க வைக்கிறது.

~ செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe