பாலக்கோட்டில் பரமஹம்ச ஆஸ்ரமம்: ஸ்வாமிஜியின் ஆசை

77 வயதாகும் சுவாமிஜி பாலக்கோட்டில் தங்கி சுவாமி பரமஹம்ச ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று யோசித்து வருகிறார்.

2006ஆம் ஆண்டு ஸ்ரீ குருஜி நூற்றாண்டை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் முயற்சியால் தீண்டாமை அகன்று சமுதாய நல்லிணக்கம் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி அகில பாரத அளவில் ஒரு சிறப்பிதழ் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதையொட்டி வடதமிழகத்தில் இரு ஊர்களில் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து அதில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

ஒன்று வேலூர் மாவட்டம் ஆற்காடுக்கு அருகிலுள்ள K.வேலூர் மற்றொன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுக்கு அருகிலுள்ள ஜோதிஹள்ளி.

அப்போது வேலூர் ஜில்லா கார்யவாஹ் ஆக இருந்த திரு. தேவநாதன் அவர்களின் முயற்சியால் K.வேலூரில் தீண்டாமை அகன்று போன சம்பவமும், ஜோதிஹள்ளியில் தீண்டாமை அகன்று மாவட்ட ஆட்சியாளர் தீண்டாமை கடைபிடிக்காத நல்லிணக்க கிராம விருது வழங்கும் அளவுக்கு அந்த கிராமத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் தாங்கி ஹிந்தியில் அந்த சிறப்பிதழ் வெளிவந்தது. (அதைப் பற்றி விவரமான கட்டுரை விஜயபாரதத்திலும் வெளிவந்துள்ளது.)

பாலக்கோடு ஜோதிஹள்ளியில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களை தொகுக்க சிறப்பிதழ் ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவரும், சங்க அதிகாரிகளுடன் நானும் அங்கு சென்றிருந்தேன். அந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்களை ஸ்வயம்சேவர்கள் விளக்கி கொண்டிருந்தார்கள்.

”எங்கள் ஊரில் ஹரிஜன சகோதரர்கள் காலில் செருப்பு அணிந்து நடக்க முடியாது டீக்கடையில் தனி டம்ளர் கோயில் விழாக்களில் கலந்து கொள்ள முடியாத நிலை என்ற நிலையில் இருந்தது. 1980வாக்கில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் திரு ராமகிருஷ்ணன் ஜி என்பவர் எங்கள் ஊரில் ஷாகா ஆரம்பித்தார். அவர் ஹரிஜன சகோதரர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு மனம் வெந்தார்.

“ஹரிஜன சமுதாய மக்களும் நமது சகோதரர்கள் அவர்களை இவ்வாறு நாம் நடத்தக்கூடாது. அவர்களுக்கும் மற்ற ஹிந்துக்களைப்போல சம உரிமை அளிக்க வேண்டும் என்று எங்களிடம் எடுத்துக் கூறினார். அதை நாங்கள் வேதவாக்காக எடுத்துக் கொண்டு ஹரிஜன சகோதரர்களிடம் இனி நீங்களும் காலில் செருப்பு அணிந்து நடக்கலாம். டீக்கடையில் இனி உங்களுக்கு என தனி டம்ளர் கிடையாது. கோயில் திருவிழாக்களிலும் நீங்கள் முழுமையாக கலந்து கொள்ளலாம் என்று நாங்கள் அவர்களிடம் கூறிவிட்டோம். ஊர் பெரியவர்களிடம் இதைப் பற்றி நாங்கள் கலந்து ஆலோசிக்கவில்லை. நாங்கள் அதிக எண்ணிக்கையில் ஷாகாவில் கலந்து கொண்டு இருந்தோம். ஆகையால் இதைப் பற்றி நாங்களே முடிவெடுத்து விட்டோம். ஆனால் ஊர் பெரியவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்வயம்சேவகர்கள் மீது ஊர் பெரியவர்களுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு உண்மையை புரிய வைத்து ஹரிஜன சமுதாய மக்களுக்கும் முழு மரியாதை பெற்றுத்தந்தோம். இதற்கு எங்களுக்கு ஊக்கமளித்து செயல்பட்டவர் திரு. ராமகிருஷ்ணன்ஜி” என்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஜி 1977 முதல் 1987 வரை 10 ஆண்டுகள் பாலக்கோட்டில் பிரச்சாரக்காக பணியாற்றியவர் சொந்த ஊர் கேரளா இடுக்கி. இவர் வருவதற்கு ஓர் ஆண்டு முன்தான் பாலக்கோட்டில் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் பெரிய தாக்குதல்களை நடத்தினர். அங்கு விவசாயிகள் அனைவரும் இந்துக்கள். இடைத்தரகள் அனைவரும் முஸ்லிம்கள். இந்துக்களுக்கு கடன் கொடுத்து கந்து வட்டி வசூலித்து வந்தார்கள். கடனை கொடுக்காதபோது அவர்களின் நிலத்தை அபகரித்து கொண்டிருந்தனர். அதை இந்துக்கள் எதிர்த்தபோது முஸ்லிம்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரம் பாலக்கோடு சுற்றுவட்டாரங்களிலும் பரவியது. அந்த காலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட கலவரம் இது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஜி அங்கு பிரச்சாரக்காக வந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பால் பாலக்கோடு பகுதியில் பல ஷாகாகளை உருவாக்கினார். ஆனால் இவருடைய வேலையின் தாக்கம் காவல் துறைக்கு உறுத்தலை கொடுத்தது. பல முறை காவல் நிலையத்திற்கு இவர் இழுத்துச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அப்போது காவல் நிலையத்திற்கு சென்று இவருக்கு பரிந்து பேச நாதியில்லை.

ஒரு முறை மாவட்ட ஆட்சியர் இவரை கூப்பிட்டு உடனடியாக நீங்கள் இந்த ஊரை காலி செய்துவிட்டு செல்லவேண்டும் என்று கூறினார். அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணன் அப்படி நீங்கள் உத்தரவு போட்டால் அதை எதிர்த்து நான் நீதிமன்றத்திற்கு செல்வேன் என்றார். ஆட்சியர் அதற்குமேல் அவரிடம் எதுவும் பேசாமல் அனுப்பி விட்டார்.

இப்படிப்பட்ட மிகவும் கடினமான சூழ்நிலையில் பாலக்கோட்டில் பணிபுரிந்து பல ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய ராமகிருஷ்ணன் ஜியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. பலரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று சரியாக தெரியாத சூழ்நிலை இருந்தது.

சமீபத்தில் பாலக்கோட்டில் சேவாபாரதி சார்பாக பெண்களுக்கான சேவைப் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அந்த ஸ்ரீ ராமகிருஷ்ணன் ஜி சுவாமி ராமகிருஷ்ணாந்தா ஆக வந்திருந்தார். சுமார் 30ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பாலக்கோடு வந்திருக்கிறார். அவரைப் பார்த்தவுடன் நான் புளாங்கிதம் அடைந்தேன்.

இத்தனை நாளாக யாரை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பிக்கொண்டிருந்தனோ அவரைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு பெரிய பொக்கிஷம் கிடைத்த மகிழ்ச்சி. அவர் கடந்த 17 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்திலுள்ள சுவாமி பரமஹம்ச ஆசிரமத்தில் சீடராக இருந்து வருகிறார் என்று அறிந்துகொண்டேன். அவர் பாலக்கோட்டில் பிரச்சாரக்காக இருக்கும்போது நடந்த சம்பவங்களை கேட்டு தெரிந்துகொண்டேன்.

பாலக்கோட்டில் இவர் உருவாக்கிய பலர் இங்கு ஊர் முக்கியஸ்தர்களாக இருந்து வருகிறார்கள். தர்மபுரி ஜில்லா ஆர்.எஸ்.எஸ் சங்கசாலக்கும், பாலக்கோடு வித்யா மந்திர் பள்ளியின் தாளாளருமான திரு கோவிந்தராஜ் அவர்களும் இவரால் உருவாக்கப்பட்டவரே.

இன்று பாலக்கோடு சங்க சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்க விதை போட்டவர் சுவாமி ராமகிருஷ்ணாந்தா அவர்கள். 77 வயதாகும் சுவாமிஜி பாலக்கோட்டில் தங்கி சுவாமி பரமஹம்ச ஆஸ்ரமம் அமைக்கலாம் என்று யோசித்து வருகிறார். அவருடைய ஆசை நிறைவேற பிரார்த்திப்போம்.