More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஇலக்கியம்அச்சன்கோவிலில் எட்டாம் பூர அன்னக்கொடி உத்ஸவம்!
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    அச்சன்கோவிலில் எட்டாம் பூர அன்னக்கொடி உத்ஸவம்!

    அடர்ந்த காட்டுப் பகுதியில் அந்த ஒத்தையடி சாலையில் காரில் முன்னே அமர்ந்து கொண்டு முதல் முறையாக அச்சன்கோயில் மலையேற்ற அனுபவத்தை ரசித்தபடி வந்தான்

    24-12-2022
    எனது டைரிக் குறிப்பில் இருந்து…
    *
    சார்… இன்னிக்கும் அச்சங்கோயில் போயிட்டு வரலாமா? இன்னிக்கு அன்னக்கோடி உத்ஸவம் ரொம்ப க்ரேண்டா பண்ணுவாங்க சார்… – என்றார் ராஜபாளையத்தில் இருந்து சக்தி பரமசிவம். தினமணியில் நிருபராகப் பணி செய்தவர். தென்கேரளப் பகுதியில் உள்ள ஆலய விழாக்கள் குறித்து தினமலரில் இருந்த போது செய்திகள் கொடுத்துள்ளார்.இந்தப் பகுதியில் செய்தியாளராகப் பணி செய்தவர் இவர்.

    செங்கோட்டையில் நியூஸ் ஜே-க்காக பணி புரியும் சங்கர் ஒரு முறை, அண்ணே போகும்போது கூப்டுங்கண்ணே… என்று சொல்லியிருந்தார். சங்கர் திறமைசாலி. சிறப்பான செய்தி கண்ணோட்டத்தில், நல்ல ஆங்கிளில் போட்டோ வீடியோ எடுப்பதில் கெட்டிக்காரர். இவர்கள் இருவருடன் மதுரையில் இருந்து வந்திருந்த என் தங்கை பையன் 8ம் வகுப்பு படிக்கும் அநிருத்தனும் இணைந்து கொள்ள மூவரையும் அழைத்துக் கொண்டு இன்று மாலை அச்சன்கோயிலுக்குச் சென்றேன்.

    அடர்ந்த காட்டுப் பகுதியில் அந்த ஒத்தையடி சாலையில் காரில் முன்னே அமர்ந்து கொண்டு முதல் முறையாக அச்சன்கோயில் மலையேற்ற அனுபவத்தை ரசித்தபடி வந்தான் அநிருத்தன். ரப்பர் மரங்களைப் பற்றிச் சொல்ல, மாமா நான் மதுரையில தாத்தா வேல செஞ்ச டிவிஎஸ் ரப்பர் பேக்டரில போயி அந்த ப்ராசஸ் எல்லாம் பாத்துருக்கேன் என்று ஆச்சரியப்படுத்தினான்.

    5 மணி அளவில் அச்சன்கோயிலுக்குச் சென்றோம். அங்கே எங்கள் ஊர் ராமச்சந்திர மாமாவின் பங்களாவில் காரை நிறுத்தி விட்டு, இறங்கி உள்ளே சென்றபோது, ஒரு பெரியவர் எதிரில் வந்தார். அவரைப் பற்றி சிறு அறிமுகம் செய்து வைத்தார் அந்த இடத்தையும் அன்னதான வைபவத்தையும் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டு வரும் கண்ணன். அவர் பெயர் திருவனந்தபுரம் சுப்ரமணிய ஐயர். வயது 80. கொச்சி ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் பணி செய்து ஓய்வு பெற்றவர். சிறுவயதிலேயே குடும்பத்தினரால் ஐயப்ப பக்திக்கு ஆட்பட்டவர். 52 வருடங்களாக சபரிமலைக்கு மகர ஜோதி சமயத்தில் தொடர்ந்து சென்று வருவதாகக் கூறினார்.

    அவருடன் அமர்ந்து டீ குடித்தபடியே, அவரது அனுபவங்களைக் கேட்கத் தொடங்கிவிட்டேன். அதுவும் நம் செங்கோட்டை வாஞ்சி மாமா என்றதும், அவருடைய பழைய அனுபவங்களைப் பேசத் தொடங்கிவிட்டார். திருவனந்தபுரம் கிழக்கே கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணிய ஐயர். அவர் அன்றைய புனலூர் மாமா என்று சொல்லக்கூடிய புனலூர் சுப்ரமணிய ஐயருடனான அனுபவங்கள், சபரிமலை புகழ்பெற்ற கதை, அன்றைய அச்சங்கோவில், ஆரியங்காவு, குழத்துப்புழ, எரிமேலி, பம்ப பகுதியில் சாலை போட்ட விதம், அச்சங்கோவில் கோணி பகுதி வழியே சாலை அமைந்தது என்று சுற்றிச் சுற்றி இந்தக் கதைகளே ஓடிக் கொண்டிருந்தது.

    கையில் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்திருந்தார். அதையும் பிரித்துக் காட்டினார். மலையாளத்தில் எழுதப் பட்டிருந்தது. குழத்தூர்புழ மணி என்பவர் எழுதிய பாடல்கள் இவை என்றார். தன் பெயர் முத்திரையுடன் ஐயப்பன் பேரில் பல பாடல்களை எழுதியுள்ளார் என்றார். குழத்தூர்புழைக்கு ஒரு விசேஷம் உண்டு. காணாமல் போனது இங்கே திரும்பக் கிடைக்கும் என்று சொல்லி, அந்த வரிகள் வரும் பாடலையும் சொல்லி ஒரு கதையைச் சொன்னார்.

    இங்கே ஒரு முதிய பெண்மணி தன் கையில் இருந்த துணி முடிப்பில் தோடு மூக்குத்தி என நகைகளை முடிந்து படிக்கட்டில் வைத்து, ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றாராம். அப்போது ஒரு பெரிய மீன் அந்த முடிப்பை வாயில் விழுங்கிச் சென்றுவிட்டதாம். இவர் அந்த முடிப்பைக் காணாமல் ஐயன் சந்நிதியில் சென்று முறையிட்டுப் புலம்பினாராம். பின்னர் அதே ஆற்றில் அவர் வந்து பார்த்தபோது, மீன் அந்தப் பொன்முடிப்பை படிக்கரையில் உமிந்துவிட்டுச் சென்றிருந்ததாம். இதனால் பரவசப்பட்ட அவர் இதனைச் சொல்லி ஐயனைப் போற்றினாராம்.

    இத்தகைய கதைகளுடன் அமைந்த பாடல் தொகுப்பு, கையால் எழுதப் பட்ட நோட்டு இது என்று காட்டினார். இந்தப் பாடல்களை நம் நண்பர் கோவை அரவிந்த் சுப்பிரமணியனுக்கும் அவர் கொடுத்ததாகக் கூறினார். தர்மசாஸ்தா, ஐயப்பன் வேறுபாடு என்ன என்று கேட்டேன். பரசுராமர் ஸ்தாபித்த விக்ரகத் திருமேனிகளில் அச்சன்கோவிலில் மட்டும்தான் அதே கல் திருமேனி இருப்பதைச் சொன்னவர், இந்தத் தலங்கள் பரசுராம ஸ்தாபித க்ஷேத்ரங்கள் அதனால்தான் புகழ்பெற்றிருக்கின்றன என்றார். அவருடனான பேச்சு வெகு சுவாரஸ்யமாயிருந்தது.

    அவரிடம் இருந்து விடைபெறும்போது, யு.எஸ்.ஸில் இருந்து ஜெகன் என்பவர் வந்தார். முதல் அறிமுகம். அவரும் இங்கே தாம் வருவது பற்றிச் சொன்னார். செங்கோட்டை வாஞ்சி மாமாவுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உடனிருந்த சங்கர் அழகாக படம்,வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

    இன்றைய தர்ம சாஸ்தா தரிசனம் வெகு ஜோர். பதினெட்டு படிகளெங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டு, பளிச்சிட்டது கோயில். உள்ளே அன்னக்கொடி, யானை மீதேறி வந்த சீவேலி, மாலை சாயரட்சை விளக்கு தீபாராதனை அனைத்தையும் அருகே நின்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோயில் முழுக்க ஜொலித்த விளக்குகள் கண்களுக்கு ரம்யம்.

    கலை நிகழ்ச்சிகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். நமக்கு நேரமில்லை. கருப்பரை தரிசிக்க விரைந்தேன். நம் ராமச்சந்திரன் மாமா குழுவினால் அங்கே அன்னதான கைங்கரியம் நடந்து கொண்டிருந்தது. சுண்டல் சகிதமாக! தரிசித்துவிட்டு பங்களாவுக்கு விரைந்தேன். சுட சுட சேமியா கிச்சிடி சுவையான சாம்பாருடன், தயிர்சாதம் ஊறுகாய் என ஒரு கை பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

    ஸ்வாமி கருப்பர் சந்நிதியில் வேண்டிண்டு பாத்து ஜாக்கிரதையாப் போங்கோ… அவர்தான் காவல் தெய்வம் என்று நினைவூட்டினார் யுஎஸ்.ஸில் இருந்து வந்திருந்த ஜெகன் ஸ்வாமி. விடைபெற்று, கும்மிருட்டுப் பாதையில் தன்னந்தனியே காரில் வந்தபோது, செல்போன் டார்ச்சை ஒளிரவிட்டு காருக்குள் இருளச்சத்தைப் போக்கிக் கொண்டான் அநிருத்தன்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × 3 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version