More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    HomeReporters Diary9ஆம் ஆண்டில் நம் ‘தமிழ் தினசரி’!
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    9ஆம் ஆண்டில் நம் ‘தமிழ் தினசரி’!

    அனைவருக்கும் இந்தப் பொங்கல் திருநாளில் தினசரி இணையத்தின் சார்பில் பொங்கல் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    வெகு சாதாரணமாக 2014 டிசம்பரில் பதிவு செய்து, 2015 பொங்கல் திருநாளில், ஒரு செய்தித் தளமாகத் தொடங்கிய நம் தமிழ் தினசரி இணையம், தைப் பொங்கல் திருநாளான இன்று ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தொடங்கிய நாளில் இருந்த அதே சுறுசுறுப்பும் சிந்தனையும் தொய்வில்லாமல் இன்றுவரை தொடர்ந்து வந்திருப்பதற்குக் காரணம், தளத்தின் வாசகர்களாகிய நீங்கள் அளித்து வந்த ஆதரவே!

    தினசரி – இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு. தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர் பெயருடன் சேர்ந்தே அடையாளம் காணப்படும் சுதேசமித்திரன், பின்னர் தினமணி ஆகியவை சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும் மரியாதையுடன் அடையாளம் காணப்பட்டது.

    தமிழக பத்திரிகை உலக வாசகர்களின் மத்தியில் நெல்லை மண்ணைச் சேர்ந்த மகாகவி பாரதியும், டி.எஸ்.சொக்கலிங்கமும், ஏ.என்.சிவராமனும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். தினமணி நாளிதழின் துவக்கம் டி.எஸ்.சொக்கலிங்கத்தை மையமாகக் கொண்டிருந்தது. பின்னாளில், பணியாளர்களின் ஊதியப் பிரச்னை தொடர்பாக நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், உடன் பணியாற்றிய சிலருடன், தினமணியில் இருந்து வெளியேறிய தென்காசி – டி.எஸ்.சொக்கலிங்கம் தினசரி என்ற இதழைத் தொடங்கினார்! ஒரு பத்தாண்டு காலம் அது நல்ல முறையில் வெளிவந்தது! ஆயினும் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது அவருக்கு! பொருளாதாரச் சிக்கல்கள்.  பின்னாளில் அவர் மீண்டும் தினமணியிலேயே பணிக்குச் சென்றார். அவருடைய சீடரான ஏ.என்.சிவராமன் தூண்டுதலில்.  ஆனால், ஆசிரியர் பொறுப்பில் அன்றி, நிர்வாகப் பணியில்! மணம் செய்து கொள்ளாமல் பத்திரிகை உலகுக்காகவும் தமிழுக்காகவும் வாழ்ந்த டி.எஸ்.சொக்கலிங்கத்துக்கு அவரது இறுதிக் காலம் வரை, ஏ.என்.சிவராமன் தன்னாலான உதவிகளைச் செய்து வந்தார்.

    அவ்வாறு தமிழ்ப் பத்திரிகை உலகில் அறியப்பட்ட தினசரி, பின்னாளில் வேறு சிலரால் சிறிய அல்லது பெரிய கால இடைவெளிகளில் நடத்தப் பட்டது. அவ்வப்போது தொடங்குவதும் நடத்துவதும் தொடர்வதும் நிறுத்தப் படுவதுமாக இருந்த தினசரி அச்சுப் பதிப்பு தற்போது நின்று விட்டது. அது வெளிவரவில்லை. அந்த அச்சு இதழுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தினசரி என்பது ஒரு பொதுப்பெயர் என்ற போதிலும், எங்கள் ஊர்க்காரர் டி.எஸ். சொக்கலிங்கத்தின் மீதான மதிப்பின் காரணத்தால், தினசரி என்ற அவரது கனவான இந்தப் பெயரைக் கைவிட ஒரு பத்திரிகையாளனான எனக்கு மனதில்லை. தென்காசி டி.எஸ். சொக்கலிங்கம், ஆம்பூர் நா. சிவராமன் ஆகியோரின் மீதுள்ள பற்றின் காரணத்தாலும், இவர்களை முன்னோடிகளாகக் கொண்டு பத்திரிகைத் துறையில் இருந்துவரும் காரணத்தாலும், இந்தப் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அடுத்தடுத்த தலைமுறைகளும் இவர்களை நினைவில் கொள்ளும் வகையிலும், தமிழ் தினசரி என்ற இந்தத் தளத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

    அச்சு இதழை நடத்தும் அளவு பொருளாதார வசதியில்லை. செய்தித் தளத்தை நடத்துவதும் கூட இந்தக் காலத்தில் நிதிச் சுமையானதுதான்! பொதுவாக அரசியல் சார்புள்ளவர்களால் பெரிதளவில் நடத்தப் படும் தமிழ் ஊடகச் சூழலில், அரசியல் சார்பற்று, எவரது நிதி உதவியும் இன்றி ஒரு தளத்தை தொடர்ந்து நடத்துவது பெரும் சிரமமானதுதான்! இணையத்திலும் கூட ஒரு செய்தித் தளத்தை வெறும் விளம்பரங்களை நம்பி நடத்துவது இயலாததுதான்! வருவாய் பெரிதாக இல்லை என்ற போதிலும், சொந்த விருப்பத்தின் காரணத்தால் இந்தத் ‘தமிழ் தினசரி’யை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

    சிறு வயது முதல் நெல்லை மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கேட்டு வளர்ந்த எனக்குள், எங்கள் ஊர்க்காரரான ஆசிரியர்  டி.எஸ்.சொக்கலிங்கமும் ஆம்பூரைச் சேர்ந்த ஏ.என்.சிவராமனும் பெரிதாகத் தெரிந்தார்கள். அவர்கள் பணி செய்த தினமணியிலேயே பணி செய்யும் பேறும் எனக்குக் கிட்டியது. ஐந்து வருடங்கள் ‘தினமணி’யில் பணி செய்து, 2014 டிசம்பரில் அங்கிருந்து வெளியே வந்ததும் ‘dhinasari.com’ டொமெய்ன் பதிவு செய்து, 2015- தைப் பொங்கல் திருநாள் முதல் இந்த இணையத்தை நடத்தி வருகிறோம். இதற்காக ஒரு செய்திக் குழு இயங்குகிறது.

    நம் தினசரி இணையத்தின் 9ம் ஆண்டுத் தொடக்கம், தனிப்பட்ட வகையில் என் ஊடக வாழ்வில் கால் நூற்றாண்டு என, 25ம் ஆண்டுத் தொடக்கம் என இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. அந்த வகையில், தொடர்ந்து ஆதரவு தாருங்கள் என்று வாசகர்களுக்கு வேண்டுகோள் வைத்து, அனைவருக்கும் இந்தப் பொங்கல் திருநாளில் தினசரி இணையத்தின் சார்பில் பொங்கல் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அன்பன்,
    செங்கோட்டை ஸ்ரீராம்
    ஆசிரியர், தமிழ் தினசரி இணையம்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    nineteen + 17 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version