வழக்கம்போல் இந்த வருடமும் கிராம சமூகத்தின் சார்பில் சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தேன். கடந்த வருடம் நிகழ்ச்சியை நடத்திய போது நிகழ்ச்சிக்கு வந்து, பேசி, பாடிய சிறுமியருக்கு பேனா நினைவுப் பரிசாக வழங்கியதைக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்து விட்டு, நண்பர் தேப்பெருமாநல்லூர் நரசிம்மன் அண்ணா அடுத்த வருட நிகழ்ச்சிக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கிறேன், கொடுங்களேன் என்றார். அதன்படி, கடந்த வாரம் கொரியர் மூலம் ஒரு பார்சல் அனுப்பி வைத்தார். அதில் ரகமி எழுதிய “செண்பகராமன்” நூல் 8 இருந்தது. அவர் வேண்டாம் என்று சொன்னபோதும் மறுத்து, தொகையை அவருக்கு அனுப்பி வைத்தேன். எனவே இந்த வருடம் அடுத்த ஊர்களைச் சேர்ந்த மாணவ மாணவியரையும் அழைத்து பேச வைத்து, ‘செண்பகராமன்’ புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என எண்ணம் ஏற்பட்டது.
கடந்த வருடம் செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா, பிராமண சமூகத்துக்கு அளித்த ஸ்ரீமூலம் ரீடிங் க்ளப் என்ற ஸ்ரீமூலம் நூலகக் கட்டடத்தில் வைத்து நிகழ்ச்சியை நடத்தினோம். அதன் பின் பராமரிப்பு இல்லாமையால், இந்த வருடம் அதை தூய்மைப் படுத்தி, நிகழ்ச்சிக்காக அங்கே ஏற்பாடுகளைச் செய்வது இயலாமல் உள்ளதே என்று உரியவர்கள் தயக்கம் தெரிவித்தார்கள்.
எப்படியாவது சுதந்திர தின நிகழ்ச்சியை நடத்த வேண்டுமே என்ற எண்ணத்தில், நாம் ஒருவராவது நம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது சொல்ல், புத்தகங்களைக் கொடுத்து வருவோம் என்று எண்ணினேன். ஆனால் ஆபத்துதவி போல அரவணைத்தார் செங்கோட்டை ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்தர் வேதபாடசாலையை நிர்வகித்து நடத்தி வரும் ஸ்ரீ ராமசந்திரன் மாமா Ramachandran M . நமது பாடசாலை மண்டபத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன். பாடசாலை வித்யார்த்திகளுடன், நம் உபயபாரதீ கன்யாகுருகுல குழந்தைகளும் பங்கேற்பார்கள். கன்யாகுருகுல சிறுமிகள் பாரதியாரைப் பற்றியும் தேசம் பற்றியும் பேசுவார்கள் என்றார். பெரும் மகிழ்ச்சி அடியேனுக்கு.
அதன்படி, இன்று காலை சுதந்திர தின விழா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் ராமச்சந்திரன் மாமா. மண்டபத்தில் மேடையில் தேசியக் கொடி அலங்கரிக்கப்பட்ட கம்பத்தில்! வாஞ்சிநாதன் எப்படி வேஷ்டி துண்டு அணிந்திருப்பாரோ அதைப் போன்ற அலங்காரம் அந்தக் கம்பத்துக்கு! அழகாக வேஷ்டி சுற்றப்பட்டு, மடிப்பு கலையாத அங்க வஸ்திரம் என!
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான முத்துகிருஷ்ணன் என்ற மோகன் அண்ணாவும், தென்காசி மேலகரத்தில் இருந்து வந்திருந்த நீலகண்டன் ஸ்வாமியும் கொடியேற்றி ஒரு ராயல் சல்யூட் அடித்தார்கள். கன்யாகுருகுல ஆசிரியைகள் தாயின் மணிக்கொடி பாரீர் – பாடலை அழகாகப் பாடி மெருகேற்றினார்கள். பாடசாலை வித்யார்த்திகள் ஒவ்வொரு குழுவாக வந்து, ருக் வேதம், சுக்ல யஜூர் வேதம், கிருஷ்ண யஜூர் வேதம் என பாரத மாதாவுக்கு வேத வழிபாடு செய்தார்கள்.
பரதன் – பாரதம் – என்பது பற்றி அறிமுக உரை கொடுத்தார் ராமசந்திரன் மாமா. தொடர்ந்து அடியேனும், செங்கோட்டை மண்ணுக்கும் சுதந்திரப் போராட்டத்துக்குமான தொடர்புகள், வரலாறு, மண்ணின் மகிமை, சுதந்திரப் போராட்டம் ஏன் நடந்தது என்ற விளக்கம், செண்பகராமன் பிள்ளையின் ஜெய் ஹிந்த் கோஷம், செண்பகராமனின் சுருக்க வரலாறு, என்ஐஏ எனும் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி கட்டமைத்தது இவற்றைச் சொல்லி, ரகமி எழுதிய நூலின் பெருமையையும் சொல்லி வைத்தேன். மோகன் அண்ணாவும், நீலகண்டன் ஸ்வாமியும் சிறிது நேரம் சுதந்திரம் என்பதன் அர்த்தம் பற்றி பேசினார்கள்.
உபயபாரதீ கன்யா குருகுல சிறுமிகள் பாரதியின் சரிதத்தை ஆளுக்கு இரண்டு இரண்டு வரிகளாக வரிசை கட்டிச் சொன்னார்கள். வித்தியாசமான அணுகுமுறை. கன்யாகுருகுல ஆசிரியை கௌரி டீச்சர் ‘வந்தே பாரத மாதரம்’ என்ற சம்ஸ்க்ருதப் பாடலைப் பாட, அனைவரும் அதைப் பின் தொடர்ந்து பாடினார்கள். (கௌரி டீச்சர் 92ல் அடியேன் திருச்சியில் கல்லூரியில் படிக்கப் புகுந்த நாட்களில் இருந்து பழக்கம். மயிலாப்பூர் சம்ஸ்கிருத கல்லூரியுடன் இணைந்த சாவித்ரி அம்மாள் பள்ளியில் சம்ஸ்க்ருத ஆசிரியையாக பணி செய்தவர். பணி ஓய்வுக்குப் பின் ஏழெட்டு வருடங்கள் கரூர் மகாதானபுரம் கல்லூரியில் பொறுப்பில் இருந்தவர் தற்போது இங்கே நம் கன்யாகுருகுல சிறுமிகளை கவனித்துக் கொள்கிறார்)
மேடையேறிப் பேசிய சிறுமிகளுக்கு அந்த ‘செண்பகராமன்’ புத்தகங்களை, அவரவர் ஆசிரியைகளைக் கொண்டும், மாணவியரைத் தயார் செய்த ஆசிரியைகளுக்கு ‘108 ஞானமுத்துக்கள்’ என்ற நூலை மாணவியரின் பெற்றோரைக் கொண்டும் வழங்கச் செய்தார் ராமச்சந்திரன் மாமா. (இந்த 108 ஞான முத்துக்கள் என்ற நூல், நம் தினசரி தளத்தில் 108 நாட்கள் தினசரி வெளியானதன் தொகுப்பு. தெலுகில் பி.எஸ். சர்மா ஜி எழுதியதை தமிழில் ராஜி ரகுநாதன் மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தார். அது, 108 சுபாஷிதங்களின் ஆங்கில, தமிழ் விளக்கங்களுடன் அமைந்த நூல்.)
பாடசாலை வித்யார்த்திகளில் மிக இள வயதான வித்யார்த்தி, நாம சங்கீர்த்தனப் பாடலை சிலிர்ப்பூட்டும் வகையில் பாடினான். அவனுக்கு சிருங்கேரி மடத்தின் செங்கோட்டை கிளை மடத்தின் தலைவர் ஸ்ரீ ராமன் அண்ணா Raman Subramany புத்தகத்தை பரிசாக வழங்கி ஆசி அளித்தார்.
இன்னொரு வித்யார்த்திக்கு இன்று பிறந்த நாள். சுதந்திர தினத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய அந்த வித்யார்த்திக்கு அவனது ஆசார்யர் (வாத்யார் ஸ்வாமி) கையால் புது வஸ்திரங்கள் வழங்கி ஆசியளிக்க அனைத்து வித்யார்த்திகளும் ‘ஜன்ம தினம்’ ஸ்லோகத்தைச் சொன்னார்கள்.
இன்று காலை ‘போலகம் ஸ்ரீவிஜயகோபால யதி ஸ்வாமிகள்’ குழுவின் உஞ்ச விருத்தி வைபவம் இங்கே நடைபெற்றது. அந்த ஸ்வாமி மற்றும் குழுவில் இரண்டு பேர் ஒரு நாம சங்கீர்த்தனப் பாடலைப் பாடினார்கள். அவர்களுக்கு பாடசாலையின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. நிறைவாக தேசிய கீதம், பின் அனைவருக்கும் இனிப்பாக ‘பாதுஷா’ வழங்கப்பட… இந்த வருட சுதந்திர தினம், தேசியமும் தெய்வீகமும் இணைந்த சிறப்பான கொண்டாட்டமாக அமைந்துவிட்டது – பாரத அன்னையின் திருவருள்!
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்