தீபாவளி வரும் முன்னே… தீபாவளி மலர்கள் வரும் அதன் முன்னே… – என்றுதான் இருக்கும் ஓர் எழுத்தாளன் அல்லது இதழாளனின் வாழ்வில்! நாளை எப்படியோ தெரியாது! இன்றளவும் அச்சு இதழ்கள் உயிர்ப்புடன் உலவும் சூழலில், இந்தப் பழமொழியிடையிட்ட புதுமொழிக்கு ஒன்றும் குறைவு வந்துவிடாதுதான்!
என் முதல் தீபாவளி மலர் அனுபவம் 2000 ஆவது ஆண்டில். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராக இருந்தேன். இப்போது போல் டெஸ்க் ஒர்க் என்று மட்டும் இருந்துவிடாமல், எழுத்தாளர்களை நேரில் சந்தித்து, விவரத்தைக் கூறி, இயன்றால் கையெழுத்துப் பிரதியை நேரில் பெற்று, அல்லது உடன் அமர்ந்து எழுதி, டேப்பில் ஒலிப்பதிவு செய்து என்று மெனக்கடல் அதிகம் இருந்தது. இமெயில்களும் வாட்ஸ்அப் வஸ்தாதுகளும் முழுதாய் முடக்கியிராத முன் தொழில்நுட்பக் காலம்தான்! இரவு பகலாய் அலுவலகத்திலேயே இருந்திருப்போம். பல நாட்கள் கூட்டாஞ்சோறுதான்! தூக்கக் கலக்கத்தினூடே பிழை திருத்தி, பக்க வடிவமைப்பைச் சீர்செய்து, ஃபார்ம் போட்டு, ஒவ்வொரு ஃபார்மாக அச்சுக்கு அனுப்பி, இண்டெக்ஸ், விளம்பரதாரர் இண்டெக்ஸ் எல்லாம் போட்டு, கடைசி ஃபாரம் அச்சுக்கு அனுப்பி, ஏதோ ஒரு நிம்மதியுடன் ஓரிரு நாள் அமைதி பெற்று, இதழ் கைக்கு வரும்போது பெரு மகிழ்ச்சி தாண்டவமாடும்! அப்படி மூன்று வருடம். பின்னும் மஞ்சரி இதழில் ஒற்றை ஆளாய் மூன்று தீபாவளி மலர்களைக் கொண்டு வந்தேன். அது ஒரு சுகமான சுமை! பின்னாளில் விகடன் மலர்த் தயாரிப்புக் குழுவில் இருந்து, ஒரு பகுதியை மட்டும் தயார் செய்தளித்த திருப்தி! 2010ல் தினமணி தீபாவளி மலரைத் தயாரித்தேன் என்றாலும், உதவிக்கு பலர். எழுத்தாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் கட்டுரைகள் அளிக்கவும் நிருபர்களும் பலர். எனவே அவ்வளவாக கடும் உடல் மெனக்கெடல் இல்லைதான்! அடுத்து ஒரு வருடம்… அத்தோடு சரி! தீபாவளி மலர் தயாரிக்கும் வாய்ப்புகள் அமையவில்லை!
என்றாலும் மலர்களில் எழுதும் வாய்ப்புகள் மட்டும் வருடந்தோறும் வந்துவிடுகின்றன. எழுத்தாளர்களையும் வாசகர்களையும் மகிழ்விக்கும் ஊடகத்தானாகவே இருந்துவிட்டதால், ஊடாகத் தனியே மகிழ்ச்சியெதையும் அமைத்துக் கொண்டதில்லை! இந்த வருடமும் இரு மலர்களில் எழுதும் வாய்ப்பு. வழக்கம்போல் என் தாய் வீடான விஜயபாரதத்திலும், குரு இல்லமான கலைமகளிலும்!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்த வருடம் நூறாண்டை நோக்கி வீறு நடை போடுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சங்கத்தின் பணிகள், மூத்த ஸ்வயம்சேவர்கள், கார்யகர்த்தர்களின் அனுபவங்கள் என்று பேசிப் பார்த்துப் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு இந்த வருட விஜயபாரதம் தீபாவளிச் சிறப்பிதழில் 6 பக்கங்களில் வந்துள்ளது!
அண்மையில் மூத்த நண்பரும் கலைமகள் ஆசிரியருமான கீழாம்பூர் அவர்கள், இதழின் பதிப்பாளர் பி.டி. ராஜன், சாஸ்த்ரா பல்கலை டீன் ஆக இருந்து பணி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரகுநாதன் ஆகியோருடன் நெல்லைக்கு வந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு காலையில் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ பாஷ்யகாரர் எனும் ஸ்ரீராமானுஜர் திருக்கோயில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், அருகே உள்ள சிவாலயம், மாலையில் வ.வே.சு ஐயர் அமைத்த சேரன்மகாதேவி பாரத்வாஜ ஆஸ்ரமம் ஆகியவற்றுக்கு சென்று வந்தேன். அந்த அனுபவங்களைத் தொகுத்து, ‘கலைமகள் ஆசிரியருடன் ஒரு நாள்’ என்ற தலைப்பில் 4 பக்க கட்டுரையாக எழுதிக் கொடுத்தேன். வாய்ப்பு அமையப் பெற்றவர்கள் படித்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்!
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்