இன்று போற்றுதலுக்குரிய ஒரு நாள். ஐப்பசி த்ரயோதசி. சாக்ஷ௱த் ஶ்ரீ தன்வந்தரி பகவான் இந்த பிரபஞ்சம் காக்க அவதரித்த புண்ணிய தினம். இந்த தன்வந்தரி ஜெயந்தியை தேசிய ஆயுர்வேத தினமாக நமது மத்திய அரசு அறிவித்து ஒவ்வோர் ஆண்டும் ஒரு தனி Theme ஐ அறிவித்து அதன்படி நாங்கள் கொண்டாடி வருகிறோம்.
இந்த ஆண்டு நமது கிராமத்தில் அமைந்துள்ள ‘குருகுல்’ பள்ளியில் 9வது தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப் படுகிறது என்பதனை வினயபூர்வம் தெரிவித்துக் கொள்கிறேன். 5 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான நமது மண்ணின் மருத்துவ முறைகளை ஆவணப்படுத்தி வெகுஜனங்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தியுள்ளோம். அறுவை சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் சுஸ்ருதர் வடிவமைத்த அறுவை சிகிச்சைக் கருவிகளின் மாதிரிகளை பிரயாசைப்பட்டு வடிவமைத்து காட்சிப் படுத்தியுள்ளோம். அனைவரும் வந்து பார்வையிடவும் இந்த நாளை எங்களுடன் இணைந்து கொண்டாடவும் பணிவுடன் அழைக்கிறோம்… என்று, அழைப்பு விடுத்து தகவல் அளித்திருந்தார் மூத்த நண்பரும் ஆயுர்வேத மருத்துவருமான டாக்டர் ஹரிஹரன். டாக்டர் சுப்ரஜா, டாக்டர் பிரசன்னா தேவி ஆகியோரும் பங்கேற்க, இந்த ஆயுர்வேத மருத்துவ முகாம், விழிப்பு உணர்வு நிகழ்ச்சி, ஆயுர்வேத கண்காட்சி நடத்தபடுவதாக தகவல் அளித்திருந்தார்.
இன்று காலை அந்த முகாமுக்குச் சென்று பார்த்து வந்தேன். ஏற்கெனவே இங்கே செங்கோட்டையில் நூலக கட்டடத்திலும், இன்னும் ஓரிரு இடங்களிலும் இதே போன்ற ஆயுர்வேத மருத்துவ கண்காட்சியை டாக்டர் ஹரிஹரன் நடத்தியிருக்கிறார். வெறும் ஒரு அரசு ஆயுர்வேத மருந்தக மருத்துவராக நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது, அப்படியே நேரத்தைப் போக்குவது என்று இல்லாமல், இவர் செய்து வரும் அரும்பணிகளில் முக்கியமானது மூலிகைத் தோட்டம் ஒன்றை பராமரித்து வருவது. அடுத்து இது போன்ற விழிப்பு உணர்வு ஊட்டும் தகவல்களுடன் கண்காட்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுய முயற்சியில் தயாராக எப்போதும் வைத்திருப்பது…
90களின் முற்பகுதியில் நான் திருச்சியில் என் கல்லூரிப் படிப்பில் இருந்த காலத்தில், விடுமுறைக்கு இங்கே ஊருக்கு வரும்போது இளையோர் நட்பு வட்டத்தில் இருந்தார் டாக்டர் ஹரிஹரன். அப்போது அவரும் மணமாகாத இளைஞர். நான் திருச்சி தென்னூரில் அந்நாளைய சம்மர்ஹவுஸுக்கு அருகில் இருந்த ஆயுர்வேத மையத்தில் மருந்துகள் தயாரிப்பதையும், அரிஷ்டங்களுக்கு பெரிய உருளியில் சக்கரைப் பாகைப் போட்டுக் காய்ச்சுவதையும் வேடிக்கை பார்ப்பேன். அந்நாளில் தான் அடுத்த வீட்டுக்காரரான லட்சுமணன் மாமா மூலம், எஸ்.வி. ராதாகிருஷ்ண சாஸ்திரி அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எனவே ஆயுர்வேதத்தில் ஈடுபாடு இருந்தது. அந்தப் பழக்கத்தில் டாக்டர் ஹரிஹரனுடன் கூடுதல் ஈர்ப்போடு பேசிக் கொண்டிருப்பேன். பின்னாளில் கல்லூரிப் படிப்பு முடிந்து ஆயுர்வேத நிறுவனம் ஒன்றில் மெடிக்கல் ரெப்பாகவும் பணி செய்தேன்.
அப்போது ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது. கொடுத்தவர் யார் என்று நினைவில்லை. ஸ்ரீராம தேசிகன் தமிழில் மொழியாக்கி அளித்திருந்த புத்தகம். ‘சரக சம்ஹிதை’ என்பது. அதற்கு எம்.ஜி.ஆர். உதவி செய்து அரசின் சார்பில் அந்தப் புத்தகத்தைப் போட்டிருந்தார்கள். ஆச்சரியமான அம்சம். அந்தப் புத்தகத்தில் சரகர் கொடுத்திருந்த அறுவை சிகிச்சைக் கருவிகளுக்கான விளக்கப்படங்கள் வரைபடங்களாக இருக்கும். இன்று நாம் ஆங்கில மருத்துவ முறையில் எவ்வளவோ நுணுக்கமான கருவிகள் கொண்டு அறுவை சிகிச்சைக்களை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். ஆனாலும் அக்காலத்தே சரகர் கொடுத்திருந்த கருவிகள் மிகச் சிறப்பானவைதான்!
இன்று டாக்டர் ஹரிஹரன் அந்தக் கருவிகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினார், எது எதற்கு பயன்படுத்துவோம் என்று! வெறுமனே வரைபடங்களைக் கொண்டு, மக்களுக்கு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும் என்பதற்காக, அந்தக் கால அறுவை சிகிச்சைக் கருவிகளை, இங்கே செங்கோட்டையில் தோசைக்கல், சங்கிலி உள்ளிட்ட இரும்பு சாதனங்கள் செய்யும் ரமேஷைக் கொண்டு சிறப்பான வகையில் வடிவமைத்துச் செய்து பத்திரமாக வைத்திருக்கிறார். அவற்றை அவர் எடுத்துக் காட்டியபோது, பிரமிப்பாக இருந்தது. உடன் அவற்றைச் செய்த ரமேஷும் இருந்தார். அவரைப் பாராட்டினேன். (போட்டோவில் உள்ளவர்)
மூலிகைகளை அழகாக பிரித்துப் பிரித்து பெயர் எழுதி தொகுத்து வைத்திருக்கிறார். ஆயுர்வேதத்தில் முக்கியமான சிகிச்சை முறை பஞ்சகர்மா சிகிச்சை என்பது. அதற்கான மினியேச்சர் ஒன்று தயார் செய்து வைத்திருந்தார். (பார்க்க படம்). அஷ்ட சூரணத்துக்கான பொருள்கள் எட்டு குடுவைகளில் சமையலறை அடுக்கு டப்பா போல வைத்து அழகாக காட்சிப் படுத்தியிருந்தார்.
ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை எனப்படும் தன்வந்த்ரி பகவானின் விக்ரஹம் ஒன்றும், அருகே சிறிய வடிவில் சுஸ்ருதர், வாக்படர், சரகர் ஆகியோரின் சிலைகளையும் வைத்து வணங்கத்தக்க ரிஷிகளின் நினைவுகளை வருவோருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். இவர்களில் வாக்படர் எப்படி தனது எழுத்தில் மருத்துவத்தினூடே சாஸ்திரங்களையும் புகுத்தியிருக்கிறார் என்பதை சில ஸ்லோகங்களால் விளக்கினார். பிரமிப்பாக இருந்தது.
பள்ளி மாணவர்களும் உள்ளூர்க்காரர்கள் சிலரும் வந்து பார்த்து, ஆயுர்வேத மூலிகைகளின் சிறப்பைப் புரிந்து கொண்டார்கள் என்று தோன்றியது. ஊரூருக்கு இப்படி சிலர் விழ்ப்பு உணர்வு ஏற்படுத்த முனைந்து உழைத்தால், நம் பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு நிச்சயம் மக்களிடம் ஆட்சி செலுத்தும்.
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்