இவர் பெயர் சீதாராமன். புகை வராத கற்பூரம் செய்து வருகிறார்…
இப்படி அறிமுகப் படுத்தினார் நண்பர். அது 15 வருடங்களுக்கு முன்! அப்போது கோயில்களில் கற்பூரம் ஏற்றுவதால் புகை படிந்து கருவறை முதல் எல்லாம் கறுப்பாகி விடுகிறது என ஒரு புகார் வந்தது. அதனால் கற்பூரத்தை நிறுத்தி விட்டு எண்ணெய் விளக்கு ஏற்றி தீபம் காட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நாட்களில்தான் இவர் புகை இல்லா கற்பூரம் என மார்கெடிங் செய்துவந்தார்.
அப்படியே, எல்லாம் நெல்லை ஜில்லா தொடர்பு ஆனது. காரணம் அவர் ஊர் அரியநாயகிபுரம்.
அரியநாயகிபுரத்து கோயில் குறித்து அதிகம் பேசுவார். ஒரு முறை கட்டுரை ஒன்றும் எழுதிக் கொடுத்தார். பிரசுரித்தேன். அப்படியே தான் ஒரு ஜோதிடர் என்றும் சொல்லி ஜாதகம் எல்லாம் பார்த்து அவ்வப்போது பலன்களையும் சொல்ல ஆரம்பித்தார்.
ஜோதிஷ் ஆர்.சீத்தாராமன் – இதுதான் பின்னாளில் பிரபலமான பெயராயிற்று. நெல்லை மண்ணின் பெரும்பான்மையான தீவிர சிருங்கேரி விசுவாசி. அம்மன் தரிசனம் பத்திரிகையில் அதிகம் எழுதினார். ஜோதிட கட்டுரைகள் நிறைய எழுதினார். நானும் போகும் இடமெல்லாம் அவரை பயன்படுத்திக் கொண்டு வந்தேன். தினமணி, கல்கியின் தீபம் என இதழ்களில் ஜோதிடக் கட்டுரைகள், பெயர்ச்சி பலன்கள் பெற்று பிரசுரித்தேன். தீபம் இதழில் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் தனி புத்தகமாக இவரை வைத்தே கொண்டு வந்தேன்.
சங்கரா டிவி.,யில் அதிகம் தோன்றினார். ராப் பகல் இல்லை… அதில் கேள்வி பதில் நிகழ்ச்சியின் தலைகாட்டினார். அவற்றுக்காக மெனக்கெடுவார்.
அவருக்குள் ஓர் ஆசை. தானே ஒரு ஜோதிட இதழ் நடத்த வேண்டும் என்று! டேப்லாய்ட் சைஸில் ஓரிரு இதழ்கள் கொண்டு வந்தார். ஆனால் சரியாக நிர்வகிக்க இயலவில்லை. அதில் சோர்ந்து, பின்னாளில் என்னிடம் ஒரு வெப்சைட் தயார் செய்து கொடுக்க வலியுறுத்தி வந்தார்.
நானும் அவருக்கு டைப் செய்து கண்டண்ட் போடுவது வரை பயிற்சி கொடுத்தேன். அவருக்காக டொமென் பதிவு செய்து கொடுத்தேன். எனக்கு நேரமில்லாததால் வெப் டிசைன் மட்டும் செய்து கொடுத்து, நிர்வகிக்கும் பொறுப்பை அவரிடமே கொடுத்தேன். ஆனால் அதுவும் அவரால் இயலவில்லை. மீண்டும் என்னிடமே வந்தார். நீயே செய்து கொடேன் என்றார். சரி என்று சொல்லி இப்போதுதான் ஒரு தளத்தில் எனக்கேயான மீடியா நிறுவனம் ஒன்று தொடங்கி அதன் மூலம் அவருடைய போர்டலையும் நிர்வகிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.
என் ஜாதகத்தை அடிக்கடி பார்த்துச் சொல்வார். சார்.. உங்களுக்கு ஏழில்… இப்படி … எட்டில் இப்படி என்று! பொதுவாக எனக்கு ஜாதகம் பார்த்து எவர் சொன்ன பிற்கால பலனும் பெரிதாக பலித்ததில்லை. ஆனால், ஏன் இப்படி நடந்தது என்பதற்கான காரணத்தை எல்லோருமே சுலபமாக கண்டு பிடித்துவிடுவார்கள்.
ஒரு முறை உன் இஷ்ட தெய்வம் எது என்றார். ‘முருகன்’ என்றேன்.
எந்த முருகன் என்றார்?
எல்லா முருகனும்தான் என்றாலும், எங்க ஊரில் இருக்கும் திருமலைக்கோயில் முருகன் என்றேன்.
ஆறில் செவ்வாய்.. உச்சம். அப்படித்தான். நீ உடனே திருச்செந்தூருக்கும் பழனிக்கும் போய்ட்டு வா என்றார். சரி என்றேன். சீரலைவாய் செந்தூர் வாய்ப்பு கிடைத்தது. பழனிக்கு மலையேறும் வாய்ப்பு பல ஆண்டுகளாகவே அமையவில்லை. வாசல் வரை சென்று அவசரத்தில் திரும்பும் வேலையானது… சென்ற வருடம்!
ஏன் உனக்கு திருமணம் தாமதமாகிறது தெரியுமா?
ம் சொல்லுங்கோ…
ஏழில் சூரியன் புதன். ஏழாமிடம் சனியின் வீடு. சனியின் வீட்டில் சூரியன். புதனும் சனியும் பரிவர்த்தனை. 11ல் சனி. சிம்ம ராசி. ராசி அதிபதி 7ல் வந்து அமர்ந்தான்…
சரி .. அதனால் என்ன?
உனக்கும் அப்பாவுக்கும் ஒத்துவராது. தந்தை வழியில் பெரிய சுகம் இல்லை. சொத்துகள் எதுவும் தேறாது. நீ ஒரு போக்கில் இருப்பாய்… அப்பா ஒரு போக்கில் இருப்பார்…
ம்ம்.. சரிதான்.. அப்புறம்…
உனக்கு மனைவி வழியாகத்தான் சொத்துகள் சேரும். அதுவரை நீ என்னதான் முயன்றாலும் வாய்க்கும் கைக்குமே சரியாக இருக்கும்.
ஆனால்.. மனைவி…? அதான் இல்லாமலேயே….
யார் சொன்னது? நிச்சயம் உண்டு. ஆனால் 42 வயசுக்கு அப்புறம்தான். அதுவும் சுக்கிர தசை முடிஞ்சுதுன்னா… எல்லாம் சரியாக நடக்கும். சூரிய தசையில் நன்றாக இருக்கும்…
அப்ப… கல்யாணம்னு ஒண்ணு உண்டு.. அப்டித்தானே!
ஆமாம். 23 வயசில் ஒரு வாய்ப்பு உனக்கு வந்திருக்கும். ஆனா அது தடை ஆகிப் போயிருக்கும். அப்படியே நீ செய்திருந்தா… அது முறிந்து போயிருக்கும். நீ தனியாகத்தான் இருந்தாகணும். அதுவும் 42 வயசு வரை.
ம்… அப்புறம்..
உன்னை எந்தப் பெண்ணும் நெருங்கவே மாட்டாள்…
அடடா… அது ஏன்?
எட்டில் சுக்கிரன் குரு. சுக்கிரன் உச்சமாகி மறைந்து போனான். அதுவும் ராசியில். குருவின் வீட்டில்! சுக்கிரன் கெட்டுப் போனதால் உனக்கு காதல், பெண் சேர்க்கை இதெல்லாம் அறவே இருக்காது. ஆனா எட்டாமிட குரு, ராசிநாதன் உன்னை ஒழுக்கமாக வைத்திருப்பார். எந்த இடத்திலும் நீ தப்பு பண்ண வாய்ப்பே வராது. அது நீயாக அப்டின்னு சொல்றதை விட, உன் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் அமர்ந்த ராசிநாதன் குருவால்தான்!
ஓ… ஆனால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்னு எங்கயோ படிச்சேனே… அப்ப தேவகுரு வீட்டில் அமர்ந்த அசுரகுரு கெட்டுப் போனா…
சரிதான் ஆனா அது இங்க வராது… உனக்கு கூட இருந்தே குழி பறிப்பார்கள். உன்னை அருகில் இருக்கும் எவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். எதிரிகள் தலை தூக்கும். ஆனால் பெரிய பாதகம் இருக்காது. ஆறாமிடத்துச் செவ்வாய் காப்பாற்றுவார்….
—
இப்படியாக ஜோதிடக் கலையை அரைகுறையாகக் கற்கும் பாக்கியம் இவர் மூலம் கிடைத்தது. கல்லூரியில் கணிதத்துடன் அஸ்ட்ரானமி – வானியல் பாடம் படித்து செண்டம் வாங்கியவனுக்கு அஸ்ட்ராலஜி மட்டும் ஏறவேயில்லை. காரணம் நம்பிக்கை பெரிதாக வைக்கவில்லை.
கிரகங்கள் இயற்கையின் ஒழுங்குக்குக் கட்டுப் பட்டு இயங்குகின்றன. ப்ளாக் ஹோல்/கருந்துளை, பிரபஞ்சம், பால்வெளி வீதி, நட்சத்திர மண்டலம், ராகு கேது என்ற கற்பனைப் புள்ளிகளின் அமைவு என வானியல் படித்துவிட்டு, நவக்கிரகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் போக்குக்கு அறிவு உடன்பட மறுத்தது. ஆனால், வழிவழியாக வாழ்ந்து பார்த்து முன்னோர்கள் சொல்லி வைத்ததில் ஏதோ உண்மை இருக்கிறது என்று முழுமையாக நம்பும் மனத்துக்கு இது ஏற்கத்தக்கதாகவே தோன்றியது. எனவே தேவையற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிராமல், நவக்கிரகங்களை கோயில்களில் வலம் வரும் போது, என் மனம் முழுக்க பிரபஞ்சம் வியாபித்திருக்கும். நான் வான வெளியில் பறப்பதாய் உணர்வேன். செவ்வாயும் சனியும் கூடவே சூரிய மண்டலமும் என் மனத்தில் ஓர் மூலையில் கற்பனையாய் விரிந்திருக்கும். அதில் நான் ஆத்ம ரூபியாய் சஞ்சாரம் செய்வேன். கறுப்பு வஸ்திரம் கொண்ட சனியின் பழுப்பு சுற்றுவளையப் படலமும் மஞ்சள் ஜொலிக்கும் குருவின் ஒளியும் வெண்மையாய் பிரகாசிக்கும் சந்திரனும் சுக்கிரனும் புவியின் மேல் ஓர் பீடத்தில் கிரகங்கள் அமர்ந்து இந்தப் புவியை வலம் வருவது போல் தோன்றும் மன பிரமிப்பெல்லாம் வானியல் கலந்த ஜோதிடத்தின் வளர்ப்புத் தன்மையால் என்று தோன்றும்.
எல்லாம் சரி… இப்போது எதற்கு இத்தனையும்? அம்மன் தரிசனம் பத்திரிகையில் இருந்து அலுவலகத்தை கவனித்துக் கொள்ளும் குணா திடீரெனப் பேசினான். அண்ணா… சீத்தாராமன் சார் போட்டோ வேணும். அர்ஜெண்ட் என்றான். தேதி 20. மாத இதழென்றால், பார்ம் முடித்து அனுப்பும் அவசரம் இருக்கும். ஏதோ கட்டுரை போடுகிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், குணாவே சொன்னான்… அண்ணா விஷயம் தெரியுமா? அவர் தில்லிக்குப் போயிருந்தாராம். நேற்று இரவு காலமானதாக தகவ. அதான் ஹிந்துவுக்கு ஒரு காலமானார் நோட் கொடுக்கணும். அவர் போட்டோ அர்ஜெண்ட். ப்ளீஸ் உடனே அனுப்புங்கோ என்றான்.
துயரத்தினூடே தேடலைத் தொடர்ந்து, இதே முகநூலில் அவர் பதிந்து வைத்த படத்தைத்தான் உடனே எடுத்து அனுப்ப வேண்டியதாயிற்று. மிக நல்ல மனிதர். நல்ல வித்வான். நெல்லை மண் ஈந்த சாதனையாளர். இன்னும் அவர் விரும்பிச் சொன்ன பணிகள் பல. அந்தக் கனவுகள் இவருடன் கரைந்து போகக் கூடாது!
அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்.