spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைதமிழன்னை இழந்துவிட்ட தவமகன்!

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்!

என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் …
எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்…
கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.

திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய, துவங்கிய பாசமிகு நட்பு எங்களுடையது. அவை எல்லாவற்றையும் விட எங்களுக்குள் முக்கியமான பிணைப்பாக இருந்த பெயர் – நா.பா.

சிராப்பள்ளி மலையில் கோயில் கொண்ட தாயுமானவன் தாள் தொட்டு பூசித்த பாரமபரிய தீட்சிதக் குடும்பம். கைலாசம் – எழுத்துலகுக்கு கௌதம நீலாம்பரனாக மாறிப்போனார்.

என் இதழியல் துறைப் பணியின் துவக்க கால கட்டத்தில், எனக்கு அறிமுகமான முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். தீபாவளி மலர் ஒன்றே அப்போது எழுத்தாளர்கள் பலரையும் சென்று பார்க்க வைத்து, எங்களை இணைத்தது என்றே சொல்லலாம்.

பத்திரிகை – எழுத்துலக நண்பர்களாக / என் நலன் நாடும் பெரியோர்களாக – திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், பாலகுமாரன், கௌதம நீலாம்பரன் உள்ளிட்ட பலர்  கிடைத்தார்கள்.

கௌதம நீலாம்பரன் – ஓர் அதிசயப் பிறவிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். முகம் அமைதியில் தோய்ந்திருக்கும். அவருடைய ஜிப்பாவும் பட்டையான பிரேம் போட்ட கண்ணாடியும் அவரை எழுத்தாள அடையாளத்துக்குள் புகுத்தியிருக்கும்.

ஓர் இதழாளன் படும் அத்தனை சிரமங்களையும் அனுபவித்தவர். சிலவற்றை என்னிடம் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவருடைய விகடன் தொடர்பான அனுபவம்,  முதுநிலை ஆசிரியர்களிடம் அவர் பட்ட பாடு, ஓர் இதழ் நடத்திய போட்டியில் இவருடைய கதை வென்று பிரசுரமாக, அதனால் உடனிருந்தோர் பொறாமையில் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள்… எல்லாம்தான்!

இவை எல்லாவற்றையும் மீறி, எழுத்துலகில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டார்.

15 வருடங்களுக்கு முன்னர் முதல் முதல் அறிமுகத்தில், இலக்கிய உலகம் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, தாம் தீபம் இதழில் பணியாற்றிய அனுபவத்தைச் சொன்னபோது, நா.பா., ஒரு வகையில் எங்கள் குடும்ப உறவு; என் தாய்வழி மாமா தாத்தாவின் சகலை அவர் என்றேன். அது முதல் பேச்சின் நெருக்கம் இன்னும் அதிகமானது.

தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, விகடன் என அவருடைய பணி நீண்டது. சுமார் 40 வருடங்கள். இதழியல் பணியில் இருந்துவிட்டார். பின்னாளில் குங்குமச் சிமிழுக்கு எழுதிவந்தார்.

சிறுகதைகள் அதிகம் எழுதியவர். வானொலி, தூர்தர்ஷன் எழுத்துத் தொடர்புகள் என எழுத்தாள இலக்கணத்துடன் திகழ்ந்தவர். சரித்திர நாவல்களில் அவருக்கிருந்த தணியாத ஆர்வம்…  அவருடைய சரித்திர நாவல்களின் பட்டியலைச் சொல்லும்! சேது பந்தனம், மாசிடோனிய மாவீரன், விஜய நந்தினி, சோழ வேங்கை, ராஜ கங்கனம், மோகினிக் கோட்டை, நிலா முற்றம்…

கலைமகள் இதழில் கதைகள் எழுதியுள்ளார். கி.வா.ஜ. காலத்தில் அவர் எழுதிய கதைகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட என் வயதைக் காட்டிலும் சில வருடங்கள் அவருடைய எழுத்து / இதழியல் உலகப் பணி அதிகமானதுதான்.

சில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் நெடிதுயர்ந்த கட்டடத்தில் குடியேறினார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். லிப்ட் இல்லாமல் இல்லத்து இலக்கை அடைதல் கடினம்தான்! இப்போது மிக உயரத்தில் வந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தக் குறு நகைப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.

பல நேரங்களில் எனக்கு உரிய கௌரவம் கிட்டாது போயின் துச்சமென எதையும் தூக்கிப் போட்டு வந்துவிடுவேன். அப்போது தோன்றும்… நான் என்ற அகம்பாவத்துக்கும், உரிய கௌரவத்தை எதிர்பார்த்தலுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என…?! மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான்! பூணூல் அணிவித்து, வேத வித்யா கர்வம் மேலேறிவிடக் கூடாதென்பதற்கே பவதி பிட்சாந் தேஹி என கைநீட்டி பிட்சை ஏற்கும் தத்துவத்தை இளவயதில் புகட்டியிருந்தாலும், உரிய மதிப்பை எதிர்நோக்கும் மனம் மட்டும் என்னிடம் மாறவில்லை. கிட்டத்தட்ட அதே குணாதிசயம் கௌதம நீலாம்பரனிடமும் இருந்ததை உணர்ந்தேன். அதனாலேயே அவர் பட்ட துயர்களையும் கேட்டறிந்தேன்.

அண்மைக் காலமாக பொற்றாமரை இயக்கத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டினார். திருவாளர் இல.கணேசனார் தலைமையிலான பொற்றாமரை இலக்கிய அமைப்பில் அவருக்கு உரிய இடம் கிடைத்தது. மிகுந்த மன மகிழ்ச்சியோடு பணிகளில் ஈடுபட்டிருந்தார். சில கூட்டங்களில் நான் பார்வையாளனாகச் சென்றபோது, வயதையும் மீறி என் கை பிடித்து சிநேகத்தை வெளிப்படுத்தி வாழ்த்துவார். அவர் மேடை ஏறி மைக் பிடித்துப் பேசும்போது பெருமிதமாக இருக்கும்.

அண்மையில் ஒரு முறை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு பார்வை பலவீனமடைந்து வருவதை கவலையுடன் சொன்னார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு சொன்னார். அவரை என் பைக்கில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டு விடைபெற்றேன். இப்போது அவர் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். நினைக்கும் போது துயரம் மேலிடுகிறது. தமிழன்னை தன் புகழ்பாடிய ஒரு புதல்வனை இழந்துவிட்டாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe