அது 2001 இறுதி. அப்போது ஏ.எம்.ராஜகோபாலன் என்ற பெரியவர் தினமணி – வெள்ளிமணியில் ‘காலம் உங்கள் கையில்’ பகுதியை எழுதி வந்தார். வெள்ளி மணி மொத்தம் 4 பக்கங்கள். இவருக்கு இரண்டு பக்கம் ஒதுக்கியிருந்தார்கள். இரண்டாம் பக்கத்தில் கேள்வி பதில், மூன்றாம் பக்கத்தில் வார ராசி பலன்.. இவை தான் எழுதி வந்தார். அவ்வப்போது ஏதாவது கட்டுரைகள் எழுதுவார். அது முதல் அல்லது 4ம் பக்கத்தில் போடுவார்கள். தினமணி ஆசிரியராக ராம.சம்பந்தம் இருந்த நேரம். வெள்ளிமணியை கவனித்துக் கொள்ள ஒருவர் இருந்தார். அவர் ஏ.எம்.ஆர்., வீட்டுக்கும் வருவார்.
அந்தக் காலகட்டத்தில் நான் விஜயபாரதம் இதழுக்காக வார ராசி பலன்கள் வாங்க அவர் வீட்டுக்குச் செல்வேன். டேப் ரிகார்டரில் அவர் சொல்வதை பதிவு செய்து கொண்டு வந்து, பின்னர் அதை டைப் செய்து அச்சுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அவர் வீட்டுக்குச் செல்லும் போது, உதவியாக சற்று நேரம் இருந்து, கடிதங்களைப் பிரித்து, அடுக்கி வைத்து, சிலவற்றைப் படித்து, அவரிடம் கேட்டு எழுதிக் கொடுத்ததும் உண்டு. இந்தப் பணிக்காக அவருக்கு உதவி செய்ய பெண்மணியும் இருந்தார்.
ஒரு நாள்… குமுதம் ஆசிரியர் ராவ் இவர் வீட்டுக்கு வந்திருந்தார். பிரதான ஹாலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நான் மாடியில் இவர் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். ஏதோ விஷயமாக கீழே இறங்கி வந்தேன். அப்போதுதான் பெரியவர் ஏ.எம்.ஆர். என்னை அவரிடம் அறிமுகப் படுத்தி வைத்தார். இருவருமே வயதில் மூத்தவர்கள். நான் 25 வயது இளைஞன். உதவி ஆசிரியராக இதழ்ப் பணியில் இருந்தவன். ஆனாலும், என்னை மரியாதையுடன் அணுகினார் குமுதம் ஆசிரியர் ராவ்.
சற்று நேரம் உடன் இருந்ததில், குமுதத்தில் இருந்து ஜோதிடம் என்ற பத்திரிகை வர இருப்பதையும், அதற்காக எத்தகைய உறுதிமொழிகள் ஏ.எம்.ஆருக்கு தரப்பட்டது என்பதையும், என்ன டீலிங் என்பதையும் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.
அந்நேரம், தினமணி வெள்ளிமணி பகுதியை (4 பக்கங்களையும்) ஏ.எம்.ஆர். கேட்டதாகவும், முழுதையும் தாமே தயாரித்துத் தருவதாக பேசியதாகவும், அதற்கு தினமணி ஆசிரியர் சம்பந்தம் சம்மதம் தரவில்லை என்றும், அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்த தற்போதைய சி.எம்.டி., மனோஜ் சொந்தாலியா வரை சென்று சில மனக்கசப்புகள் ஏ.எம்.ஆருக்கு இருந்தது என்றும் ஒரு பேச்சு அடிபட்டது. அந்த நேரம்தான் குமுதம் ஜோதிடம் என்ற பேச்சும் ஏ.எம்.ஆர்.வீட்டில் வைத்து அந்நேரம் ஆசிரியர் ராவ் முன்வைத்தார்.
இப்போது சுமார் 16 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆரம்பப் புள்ளியின் நிகழ்வுக்கு சாட்சியாய் உடன் இருந்த காரணத்தால், சில எண்ணங்கள் இப்போது எழுகின்றன.
ஏ.எம்.ஆர்., துவக்க காலம் முதலே பத்திரிகையாளராக இருந்து வந்தவரல்லர். அவரது அனுபவப் படி, தி ஹிந்துவில் சர்குலேஷன் மார்கெடிங் போன்ற பணிகளில் இருந்திருக்கிறார். இடையில் கற்றது ஜோதிடம். துவக்க காலத்தில் ஜோதிடராகவும் இருந்தவர் அல்லர்.
ஜோதிடம் சிலருக்கு சரியாக பலிக்கும். சிலருக்கு பலிக்காமல் போகலாம். அது அவரவர் தலைவிதி. சில நேரம் விதிகள் மாறும். அப்படி அவர் விதி மாறுவதாக இருந்தால் அதுவேகூட அவரது விதியில் எழுதப் பட்டிருக்கும். இவர் எனக்குச் சொன்ன ஜோதிடக் குறிப்புகள் பலிக்கவில்லை. பலன் அளிக்கவில்லை. அது போல் சிலருக்கு பலன் அளிக்காமல் போனதும் உண்டு. அதற்காக அவரது வித்வத்தை குறை சொல்ல இயலாது. ஒரு நம்பிக்கையை நமக்குள் ஊட்டுவதற்காகவே சொல்லப் படுவது. அந்த நம்பிக்கை இழந்தவர்கள் சிலர் ஜோதிடத்தையும் ஜோதிடரையும் தூற்றுவதுண்டு! ஆனால், நாத்திக வகையறாக்கள் அந்தக் காலத்திலேயே இவரிடம் ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு வந்ததுண்டு. அங்கே சிலரைப் பார்த்திருக்கிறேன். பெயர் சொல்ல விரும்பவில்லை! இஸ்லாமிய பெண்களும் ஜாதகத்தை சுமந்து கொண்டு இவர் வீட்டுக்கு வந்ததுண்டு. அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்!
ஒரு முறை கையெழுத்து குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, நான் அவரிடம் சொன்னே… அடியேன் கையெழுத்து நன்றாக இருக்கும். ஆனால் தலை எழுத்துதான் சரியாக எழுதப் படலை என்று! அதற்கு அவர், உன் முன் இருக்கும் இந்தக் கிழத்துக்கு தலை எழுத்து எப்போ சரியாச்சுன்னு நினைக்கறே…! என்று கேள்வி எழுப்பினார். அவர் வாழ்க்கையை மேற்கோள் காட்டி அவர் சொன்னபடி பார்த்தால், என் தலை எழுத்து சரியாக இன்னும் நான் 20 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!
ஆக… எப்படியோ எனக்குள் ஒரு நம்பிக்கையை, தன்னம்பிக்கையை, சுய ஊக்கத்தை, தன்னுந்துதலை ஊட்டியிருக்கிறார். உடன் இருந்து பார்த்த மட்டில், எத்தனையோ கோயில்கள் அவரால் புனருத்தாரணம் பெற்றிருக்கின்றன. கோயில் கைங்கர்யங்கள் செய்பவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. பாவம்… ஏதோ சாமி கோயில்ல இருக்கு… என்று எட்டிப் பார்த்து ஒதுங்கியவர்களை, பரிகாரம் செஞ்சா நமக்கு நல்ல பலன் கிடைக்குமாமே என்ற எண்ணத்தில் கிட்ட வந்து, கோயிலை சுற்றச் செய்து, கோயில் சாமிகளை பரபரப்பாக்கியுள்ளார்.
பாழடைந்த கோயில் என்று வருவார்கள். தன் காசில், அல்லது யாராவது பெரியவர்கள் உதவியில் திருமால் ஆலயமாக இருந்தால் ‘திருமண்’, வஸ்திரங்கள் வாங்கிக் கொண்டு செல்வார். எழுதுவார். ஜோதிடம் என்ற புத்தகம் வெறும் நாள் நட்சத்திர ராசி பலன் ஜோசியத்துக்காக மட்டும் அமையாமல், எத்தனையோ ஆலயங்களின் மறுவாழ்வுக்காக அமைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. அதற்காகவே அந்தக் கால கட்டத்தில் அடிக்கடி அவர் காலில் விழுவேன். “இது இதழல்ல இயக்கம்” என்பதற்கு சரியான உதாரணமாய் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர்.
கோயிலுக்குச் செய்கிறேன் என்ற பெயரில் தன் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டு ஊரை ஏமாற்றுபவர்கள் பலர் எனக்குத் தெரியும். முறைகேடுகள் நிறைய நடக்கும். குறிப்பாக ஒரு பெண்மணி. பெயர் சொல்ல விரும்பவில்லை! இத்தகையோரைப் பார்த்துப் பார்த்தே… கோயில் என்று முன்வருபவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்த்து, தீர விசாரித்து, ஒதுங்கிக் கொண்ட நாட்களும் உண்டு. நல்லவர்களையும் அல்லவர்களையும் இப்படி அருகிருந்து பார்க்கும் வாய்ப்புகளை இந்த இதழியல் துறை எனக்குத் தந்திருக்கிறது!
ஆனால், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பயணம் இதழியல் துறையில் இருந்து செய்தித் துறைக்கு மாறியது. அதன் பின்னர் பெரியவர் ஏ.எம்.ஆருடனான சந்திப்புகளும் அறவே நின்று போனது. கடந்த வருடம் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி, திருவள்ளூரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் எம்.வி. அனந்தபத்மநாபாசாரியார். அப்போதுதான் பெரியவர் ஏ.எம்.ஆரை மீண்டும் பார்த்தேன். நெகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தார். அன்று பார்த்தது போல் அதே உருவம். பத்தாண்டுகளில் பெரிய மாற்றம் இல்லை. மகனுடன் கோவையில் இருப்பதாகச் சொன்னார். அப்போதும் அவரைக் கண்டு நான் ஆச்சரியப் பட்டது, அவரது சுறுசுறுப்பு. சடசட வென்று மேடையில் ஏறிய வேகம், எப்போதும் போல் ஆரோக்கியமாக சிரித்த முகத்துடன் இருந்த பாங்கு… எல்லாம்தான்!
இடையில் கடந்த வாரம் ஒரு பேஸ்புக் நண்பர் உள்டப்பியில் விசாரித்தார். ஏ.எம்.ஆர்.க்கு என்ன ஆச்சு? குமுதம் ஜோதிடம் கடைக்கு வரல்லியே! என்று…
எனக்குத் தெரியாது; அவரிடம் அதுபற்றி கேட்க இயலாது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டேன். காரணம், நண்பர்கள் சிலர் அவரது போன் எண் கேட்டு என்னிடம் தொடர்பு கொள்வார்கள். நான் கொடுக்க மாட்டேன். வயதான காலத்தில் நம்மால் தேவையற்ற தொந்தரவு. அடுத்தது, நாம் தொடர்பு எண் கொடுத்தாலும் உடனே எடுத்துப் பேசி ஜாதகம் பார்த்து சொல்வதற்கான நேரம் அவருக்குக் கிடையாது. அதனால் நமக்கும் நண்பருக்குமான இடைவெளிதான் அதிகமாகும். ஆக, சிலர் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருந்துவிடுவது நல்லது.
இப்போது பெரியவர் ஏ.எம்.ஆரே ஒரு விளக்கக் குறிப்பு அனுப்பியுள்ளார். தனது 16 ஆண்டு ஜோதிடம் இதழ் அளித்த பெருமிதத்தை வெளிப்படுத்தி, அலுவலக நிர்பந்தம் காரணமாக ஜூலை 1 இதழ் முதல் தாம் ஆசிரியர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தமது உடல்நலம் குறித்து வதந்தி பரவுவதாகவும்…தமக்காக சிலர் பிரார்த்தனைகள் செய்வதாக போனில் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆக, இது ஒரு தகவல். அவரது கடிதம் இங்கே…