தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு ‘ழ’ ழகரம் என்பது உண்மையா என்று கேட்டார் ஒருவர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது உண்மையாக இருந்திருக்கலாம்… ஆனால் இப்போது அப்படித் தெரியவில்லை என்றேன்.
காரணம், தமிழையும் சம்ஸ்க்ருதத்தையும் மூலமாகக் கொண்டு கிளைத்த மலையாளத்தில் சிறப்பு ழகரம் சிறப்பாகக் கையாளப்பட்டு வருகிறது. வரிவடிவமும் கூட பெரிய மாற்றம் ஏதுமில்லை. താഴ தாழ நோக்காது, நிமிர்ந்து நோக்கினால், ഴ – ழ அங்கே எப்படி அழகாக உச்சரிக்கப் படுகிறது என்று புரியும்! அதற்காக மலையாள நாட்டார் எவரும் ழ எங்கள் சிறப்பு என்று சொல்லித் திரிவதில்லை. ஆனால், நாமோ, ழவை லவ்வாக்கி, ளவ்வாக்கி குளறுகிறோம்…
க,ச,ட,த,ப எனும் ஐந்து எழுத்துகளும் வரிவடிவில் ஒன்றாக இருந்தாலும் உச்சரிப்பில் பழக்கத்தால் வேறுபாட்டை உணர்த்தும். இது தமிழின் பலம். கணினித் தமிழுக்கும், செல்போன் தமிழ் தட்டச்சுக்கும் மிகப் பெரும் பலமாக இருக்கிறது. ஆனால்… இப்போது நாம் உச்சரிப்பில் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்!
நாலு க, நாலு ச, நாலு ட, நாலு த, நாலு ப…ன்னு இருக்குற மொழிகள்ல இப்போதும் உச்சரிப்பு மிகச் சரியாக இருப்பதாகவே படுகிறது. இதைத்தான் கோட்டை விட்டாலும், மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேறுபாடு உச்சரிப்பு கொண்ட ல,ள,ழ., ந,ன,ண, ர,ற, இவற்றையாவது காப்பாற்ற வேண்டாமோ?
இன்று ழகரத்தின் ஓசையை யகரமாக்கி நவீன உச்சரிப்பைக் கையாண்டு வருகிறார்கள் நவீனத் தமிழர்கள். இலக்கண வகுப்பில் புணர்ச்சிவிதி படிக்கும் மாணவன் என்றால் மனப்பாடம் செய்து கொண்டிருப்பான்… லள றடவும்…. என்று! இப்போது புதிய ஓர் எழுத்தும் அதில் சேர்ந்திருக்கிறது.. லளழ றடயவும் என்பதுதான்..
அதாவது, கல் + சிலை = கற்சிலை என்றும், வாள் + போர் = வாட்போர் என்றும் வருவது போல், இப்போதெல்லாம் ஊழ் + வினை = ஊய்வினை என்றே புத்திலக்கணம் படைத்து வருகிறார்கள் நவீனத் தமிழர்கள்.
தமிழா விழி!
விளிக்காதே.. விழி!