அக்டோபர் 24 இன்று மாலைக்குள் தாங்கள் இருவரும் சரண் அடையவில்லை என்றால் தாங்கள் உயிராக நினைக்கும் #காளையார்_கோவில் வெடி வைத்து தகர்க்கப்படும் என்று ஆங்கிலேயன் அறிவித்த உடன் தங்களின் கோவிலை காப்பாற்ற சரண் அடைந்த #மருது_இருவர் உடனடியாக காளையார் கோவில் முன்பே தூக்கில் இடப்பட்டனர். கதறித் துடித்த எண்ணற்ற மக்கள் சுட்டுக் கொல்லபட்டனர். குறைந்த பட்சம் 500 பேருக்கு மேல் மருதுகளின் குடும்பமே அழிந்தது. அவர்களின் ஓரே மகன் 15 வயது பாலகன் நாடு கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டு சிறையிலே கொல்லப்பட்டான்.
தூக்கில் போடப்பட்ட மருது இருவரும் இரண்டு நாட்கள் இறக்கவில்லை! தூக்குக் கயிற்றில் இருந்து ஆங்கிலேயன் 27ஆம் தேதி காலை கீழே இறக்கி கழுத்தை அறுத்து புதைத்தான்! இதுபோண்ற கொடூரம் உலகில் வேறு எங்கும் நடந்ததா என்று தெரியவில்லை!
இப்படி நாட்டுக்காகப் போராடி உயிர் நீத்த தமிழின மாவீரர்களை எந்த திராவிடனும் நினைத்துக் கூடப் பார்க்க வில்லை! மருதுவின் புகழைக் கூறவே யோசித்த நேரத்தில் அந்த வரலாற்றை #சிவகங்கை_சீமை என்று திரைபடமாக எடுத்த #கண்ணதாசன் அவர்கள் மட்டுமே தப்பிப் பிறந்தவர்!
***
சிவகங்கைச் சீமை என்றால் மருது இருவர் பெயர் தெரியாது எவருமிலார். காளையார்கோயில் கோபுரம் மருதிருவர் பெயர் தாங்கி கம்பீரமாய் இன்றும் நின்றிருக்கிறது! தாம் உயிராய் நேசித்த பெருமானின் கோயில் கோபுரத்துக்காய் உயிர் விட்ட கோபுரங்கள் இந்த மருது சகோதரர்கள்!
வீரம், அஞ்சாத நெஞ்சம், அடிமைத் தளையை அறுத்தெறிந்த தன்மை, வெள்ளையருக்கு எதிரான துடிப்பான போராட்டம், சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை அழியாத எழுத்துகளால் எழுதிய தியாகம் இவை எல்லாம் மருது சகோதரர்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்!
1748 டிசம்பர் 15. உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக, இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு அருகே நரிக்குடியில் பிறந்தார் பெரிய மருது. அவருக்கு 5 ஆண்டுகள் கழித்து (1753-ல்) சின்ன மருது பிறந்தார்.
சிவகங்கையில் விஜயரகுநாத சேதுபதி அரசராக இருந்த நேரம். தகுதி வாய்ந்த இளவல்களைத் தேடிக் களைத்தபோது, மருது சகோதரர்கள் அவர் முன் நின்றார்கள். 1761ல் அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். வேட்டையாடச் சென்ற மன்னருக்கு உதவி செய்யச் சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாக வரலாறு கூறுகிறது! அரசி வேலு நாச்சியாருக்கு போர்ப் பயிற்சி கொடுத்தவர் சின்ன மருது.
ஆற்காடு நவாப் கப்பம் வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனி வசம் ஒப்படைத்திருந்தான். அதனால் ஆங்கிலேயர்கள் சுதேச மன்னர்களுடன் நேரடியாக போர்களில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் ஸ்மித் அந்தக் காரணத்தால் தஞ்சை மீது போர் தொடுத்தான். தஞ்சை மன்னன், ஆற்காடு நவாப்புக்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான். ஆங்கிலேயப் படையுடன் புதுக்கோட்டை தொண்டமான் படையும் சேர்ந்து உதவ, ராமநாதபுரத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் சிவகங்கை சீமையை கைப்பற்ற ஆற்காடு நவாப் சூழ்ச்சி செய்தான். இதை அடுத்து நடந்த போரில், முத்து வடுகநாதர் வீர மரணம் அடைந்தார். இதனால் ராணி வேலு நாச்சியாரைக் காப்பாற்றி, அவரின் தலைமையில் அடுத்து போரிட மருது சகோதரர்கள் படை திரட்ட முயன்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் ஹைதர் அலியை சந்தித்தனர் மருது சகோதர்கள். ஹைதர் அலியின் படைப் பாதுகாப்பில் வேலு நாச்சியாரை தங்க வைத்தார்கள். தொடர்ந்து,1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி, ஒவ்வோர் இடமாகச் சென்று, படைகளை ரகசியமாகத் திரட்டி வந்தனர். அவ்வாறு, ஆற்காடு நவாப் ஆங்கிலேயர் கூட்டணிக்கு எதிராக படை திரட்டிய மருது சகோதரர்கள், கட்டபொம்மன் தலைமையில் படை அமைக்க தீவிர ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அப்போது மைசூர் ஹைதர் அலியின் உதவியும் மருது சகோதரர்களுக்கு கிடைத்தது. இந்த நேரத்தில் தான், கட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள். மருது சகோதரர்கள் இருவரும் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் இரண்டறக் கலந்து, சுதந்திரப் படையைத் திரட்டினார்கள்.
சுமார் ஏழு வருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள், திடீரென 1779ல் ஆற்காடு நவாப், தொண்டமான், கிழக்கிந்திய கம்பெனிப் படைகளைத் தாக்கி, வெற்றி கொண்டனர். பின்னர் 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். வேலு நாச்சியாரின் போர் வியூகத்தையும் வீரத்தையும் இது வெளிப்படுத்தியது. அதே நேரம், மேற்கில் திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலியின் படையும் வந்ததால், வெற்றி எளிதானது.
வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். அந்த விழாவுக்கு ஹைதர் அலி நேரில் வந்து வாழ்த்தினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார்.
அதன் பின்னர் மருது சகோதரர்கள் சிவகங்கைச் சீமையை சீரமைக்கும் பணிகளை முழு மூஉச்சில் மேற்கொண்டனர். காளையார்கோவிலை சீரமைத்தனர். குன்றக்குடி முருகன் கோவில், ஆவுடையார்கோவில், செம்பொன்நாதர் கோவில், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் ஆகியவற்றை சீரமைத்து மக்கள் வழிபாட்டுக்கு வகை செய்தனர்.
குன்றக்குடியில் அரண்மனை ஒன்று கட்டினர். அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து தமிழ் வளர்த்தனர். தாம் பிறந்த நரிக்குடியில் தம் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டினர். கலைகள் வளர தோள் கொடுத்தனர். நாடகக் கலை புத்துணர்ச்சி பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு தேர் வழங்கினர். காளையார்கோவில் அருகே உள்ள சருகனியில் தேர் செய்து கொடுத்தனர்.
போர் வீரர்களாக மட்டுமில்லாமல், தங்களின் நிர்வாகத் திறமையையும் நிரூபித்தார்கள் மருது சகோதரர்கள். இடைப்பட்ட காலங்களில் மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தி, பல்வேறு ஊருணிகளை அமைத்து, குளங்களை வெட்டி நீர் ஆதாரத்தைப் பெருக்கினர். மருது சகோதரர்களின் காலத்தில் இதனால் சிவகங்கைச் சீமை பசுமையாக இருந்ததாம்!
மருது சகோதரர்கள் கண்ட போர்க்களங்களும் அதிகம்தான்! ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர்க் களங்கள் மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களம் போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என மிகப் பெரிய பட்டியலே உண்டு.
இத்தனை போர்களுக்கு நடுவிலும், சிவகங்கைச் சீமையின் மறுமலர்ச்சிக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் அடிகோலியது மருதிருவரின் மகத்தான பணிகளே! அந்நேரம் 1799இல் கயத்தாரில் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கில் இடப்பட்டார். அதன் பின், தனியனாகத் தவித்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை, சின்னமருதுவிடம் அடைக்கலம் தேடி வர, நண்பனுக்கு அடைக்கலம் தந்தார் சின்ன மருது. இதை அறிந்த ஆங்கிலேயர், 1801இல் மீண்டும் சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுத்தனர்.
மருது பாண்டியரின் போர்த் திறன் குறித்து நன்கு அறிந்தவர்கள் ஆதலால், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து ஆயுதத் தளவாடங்களுடன் பெரும் படை திரட்டி வந்தனர். காளையார்கோவிலில் ஆங்கிலேயரின் படை மருது பாண்டியரின் படையைச் சுற்றி வளைத்தது. ஆனா, மருது சகோதரர்கள் அங்கிருந்து தப்பினர். ஆயினும் மீண்டும் அவர்கள் சிறைபிடிக்கப் பட்டு, அவர்களின் விருப்பப் படி காளையார் கோவில் கொண்டு வரப் படுகின்றனர். முன்னதாக மருது சகோதரர்கள் களையார்கோவில் மீது வைத்திருந்த பாசத்தை அறிந்த ஆங்கிலேயர்கள், அவர்கள் இருவரும் சரண் அடையாவிட்டால், காளையார்கோவில் கோபுரத்தை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று மிரட்டினராம். அதற்கு அடிபணிந்து, தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை, கோபுரம் காப்பாற்றப் பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் சரண் அடைந்ததாகக் கூறுவர்.
இந்நிலையில், மருது சகோதரர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு 1801 அக்.24ல் தூக்கிலிடப்பட்டார்கள். மருது சகோதரர்களின் விருப்பப்படி காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டனர்.
நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த மன்னர்கள் என்பதாக கொண்டாடப் படும் மருது சகோதரர்களுக்கு 2004 அக்.24ல் தபால் தலை வெளியிடப்பட்டது.
- எழுத்து: செங்கோட்டை ஸ்ரீராம்