
9ம் எண் ஒழுங்கா இருக்குமாம்! அதுக்கு ஏத்த மாதிரி நம்பிக்கையோட வரவேற்கலாம்..!
என்ன இருந்தாலும், நாம் 2016-ன்னுதான் வருடத்தை எழுதப் போறோம்.. அதன் சாதக பாதகங்களெல்லாம் எண்ணியல்ல இருக்கும்னு ஒருத்தர் சொன்னார்… ஆக… வாழ்த்துகள் நண்பர்களே!
ஏழரையும் எட்டும் எட்டிப்போகட்டும்… நிலை மாறாத நிலை வரட்டும்!
ஒன்பது என்பதன் நிலை குறித்து விவரித்து விடுகிறேன்…
வழக்கம்போல்… என் மஞ்சரி கால அனுபவத்தைத்தான் குறிப்பிடுகிறேன்.
மஞ்சரி 1969ம் வருட ஆவணி மாத இதழில் 31, 32ஆம் பக்கங்களில் இந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது. அதன் சுருக்கமான தகவல்..
ஸ்ரீராம் நரேஷ் த்ரிபாதி என்பவர் எழுதியது. இவர், ஒரு முறை உண்ணாநோன்பிருந்த காந்திஜியை சந்தித்தபோது, ராம நாம மகிமையை வலியுறுத்தும் விதமாக, துளஸிதாசரின் ஒரு தோஹா…வை எடுத்துச் சொல்கிறார்.
போலோ ராம்; கரோ காம் – என்று, ராமன் பேரைச் சொல்லு; வேலையைப் பாரு என்று முழங்கியவர் காந்திஜி.
அந்த தோஹா.. அதாவது கவிதை இதுதான்..
துளஸீ ராம ஸ்நேஹ கரு
த்யாகி ஸகல உபசார்;
ஜைஸே கடக் ந அங்க நௌ
நௌ கே லிகத் பஹார்
– அதாவது நௌ என்பதன் தன்மையை காந்திஜியிடம் சொன்னார் ஸ்ரீராம் நரேஷ் த்ரிபாதி.
மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் ராம பக்தியைக் கைவிடலாகாது. ராமனிடம் திடபக்தி இருந்தாலே போதும், மற்ற முயற்சிகள் தேவையில்லை.
ஒன்பதாம் வாய்பாடில் எப்படியெல்லாம் பெருக்கம் கண்டாலும் மூல எண் ஒன்பது தன் நிலையைக் குலைத்துக் கொள்வதில்லை. மனிதனின் ராமபக்தி அப்படி நிலையானதாக, தன்மையில் பிறழாமல் இருக்க வேண்டும்.
அதாவது…
9 x 2 = 18 ; 1+8 = 9
9 x 3 = 27 ; 2+7 = 9
9 x 4 = 36 ; 3+6 = 9
… … …
9 x 8 = 72 ; 7+2 = 9
9 x 9 = 81 ; 8+1 = 9
இவ்வாறு துளசிதாசரின் கவி விளக்கத்தை அவர் சொன்னதும், காந்திஜி மேலும் தனது கருத்தை வேறு விதமாக விளக்கிச் சொன்னாராம்…
ஒன்பதைப் போல் சுயநிலையை இழக்காமல் ராம பக்தியை மேர்கொள்ல வேண்டும் என்பதற்கு அதன் வாய்ப்பாட்டைத் துளசிதாசர் எடுத்துக் காட்டியதில் இன்னொரு விசேஷம் உண்டு. 9 என்பதை முழுதும் குறைகள் கொண்ட ஒரு மனிதனாக வைத்துக் கொள். பிறகு அவனுடைய இரு தகுதிகளை அல்லது செயல்களைக் கொண்டு பெருக்கிப் பார்க்கும் போது, அந்த மனிதன் (9) தன் நிரை குறைகளைப் புலப்படுத்துகிறான்.
அதுதான் 18. அதில் 1 நிறை, 8 குறை.கள். இதைக் கண்டதும் அந்த மனிதனுக்கு புத்துணர்வு ஏற்படுகிறது. குறைகளை குறைத்துக் கொள்ள முற்படுகிறான். அடுத்த நிலையில், (2 7) குணம் 2 ஆக வளர்கிறது, குற்றம் 7 ஆகக் குறைகிறது. இப்படியே… இதற்கு அடுத்து அடுத்து முன்னேறி, குற்றமே இல்லாமல் குணமே நிறைந்த நிலையை அவன் அடைகிறான்.
ராம பக்தியை மேற்கொண்ட மனிதன் இதே போல் படிப்படியாகத் தன் குற்றங்களைக் குறைத்துக் கொண்டு குணங்களை வளர்த்துக் கொண்டு நிறை வாழ்வு எய்த வேண்டும்…
காந்திஜியின் இந்த விளக்கம் 9ம் வாய்ப்பாட்டை முன்னிறுத்திய துளசிதாசரின் பாட்டுக்குக் கிடைத்த புது விளக்கம்.
ஆகவே, 2016 ஆம் ஆண்டு, 9ம் எண்ணின் கூட்டுத் தொகையில் முடியும் இந்த ஆண்டு, அனைவருக்கும் நிலையான தன்மையை அருளட்டும்!