spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்அத்திவரதருக்கு என்ன ‘பவர்’? சகிக்க முடியாத... சுகி சிவம் பேச்சு!

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’? சகிக்க முடியாத… சுகி சிவம் பேச்சு!

- Advertisement -

sukisivam pic

சிலவற்றை நாம் வெளிப்படையாக சொல்ல முடியாது. ரகசியக் காப்பு. என் 20 வருட பத்திரிகை அனுபவத்தில், பத்திரிகை ஆசிரியராக, எனக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் எத்தனையோ ரகசியங்கள் உண்டு. அவற்றில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு! எழுத்தாளருக்கு எது நன்மையோ அதை மட்டுமே வெளிப்படுத்தியதுண்டு! எழுத்தாளருக்கு பாதகம் ஏற்படுவது போன்ற எதையும் நான் வெளியில் சொன்னதில்லை.

ஆனால்… இப்போது ஒரு சூழ்நிலை எழுந்துள்ளது. இது அந்த எழுத்தாளருக்கு நல்லவிதமானதா பாதகமானதா என்பதை அவரவர் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

சுகி சிவத்துக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய பழக்கம் கிடையாது. தனிப்பட்ட வகையில், நான் நெருங்கிய பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அவர் எளியவர் அல்லர் என்பதுதான் காரணம்! அது அவர் தான் ஒரு புகழ்பெற்ற பேச்சாளர் என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்ட கர்வத்தின் பால் அமைந்தது! எனவே அவர் அருகே நெருங்க எனக்கு விருப்பம் இல்லாமல் போனது!

இப்படி நான் நினைத்ததற்குக் காரணமும் உண்டு..!

விகடன் பிரசுரத்தின் பொறுப்பாசிரியராக நான் இருந்த 2007ல் ஒரு சம்பவம்…!

சென்னை கம்பன் கழகம், கிருஷ்ணா ஸ்விட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

கம்பனில் ராமன் எத்தனை ராமன் என்பது தான் அந்த நிகழ்ச்சியின் தலைப்பு!

கம்பனின் எட்டு கதாபாத்திரங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு நிகழ்ச்சி! கம்பனில் ராமன் ஒரு புதிய பார்வை, ராமன் ஒரு மகனாக, ஒரு மாணவனாக, ஒரு சகோதரனாக, ஒரு கணவனாக, ஒரு வீரனாக, ஒரு தலைவனாக, ஒரு மனிதனாக என்று எட்டுத் தலைப்புகளில் அந்த நிகழ்ச்சி நடந்தது!

டாக்டர் சுதா சேஷய்யன், முனைவர்கள் கு.ஞானசம்பந்தன், லட்சுமிநாராயணன், தெ.ஞானசுந்தரம், சத்தியசீலன், திருவாளர் சுகிசிவம், முனைவர் அறிவொளி, முனைவர் செல்வக்கணபதி என எட்டு அறிஞர் பெருமக்கள் ஒவ்வொரு நாளும் மேற்கண்ட தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்!

இந்த எட்டு உரைகளையும் தொகுத்து விகடன் பிரசுரத்தின் சார்பில், கம்பனில் ராமன் எத்தனை ராமன் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் ஆக்கினோம்! இதற்காக என் குழுவில் இருந்த இளவல் பாசுமணி இந்த உரைகளைத் தொகுக்கும் பணியை ஏற்றார். அவரும் தினமும் சென்று இவர்கள் உரையைத் தொகுத்து ஒரு புத்தகம் ஆக்கினோம். மேலும் ஒரு புதிய முயற்சியாக, திருவாளர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி தங்கள் நிறுவன ஸ்பான்சராக இந்த 8 உரைகளையும் ஒரு சிடியில் பதிந்து இலவசமாகத் தருவதாக ஏற்றுக் கொண்டார். அது இந்த நூலுடன் இலவசமாக வழங்க ஏற்பாடானது.

இருப்பினும், இந்த எட்டு அறிஞர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை சன்மானமாக வழங்கவும் ஆசிரியர் குழுவில் அனுமதிக்கப் பெற்று, அதற்காக இந்த எட்டு அறிஞர்களிடமும் தொலைபேசி வாயிலாக தகவல் சொல்லி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டிய வேலையில் நான் இருந்தேன். அவர்களிடம் தொலைபேசி வாயிலாக ஒப்புதல் பெற்று பிறகு கடிதம் தயாரித்து அனுப்பினேன்.

அப்போது சுகிசிவம் அவர்களிடமும் தொடர்பு கொண்டு பேசினேன். நான் விகடன் பிரசுரத்தில் இருந்து பேசுகிறேன்… என்னுடைய பெயர்… என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் மேற்கண்ட தகவலை சொன்னேன்!

அதற்கு சுகிசிவம் உச்ச பட்ச சப்தத்துடன் சொன்ன வார்த்தை.. ஒரு புகழ்பெற்ற பேச்சாளரிடம் பேசக்கூடிய பேச்சா இது? எனக்கு இந்த அளவுக்கு சன்மானம் கொடுப்பதாகச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? போடாதீங்க..! நான் என் உரைகளை சிடி பதிந்து போடுகிறேன். நீங்கள் புத்தகத்திலும் போட வேண்டாம்… சிடியும் போடக்கூடாது என்று எடுத்த உடனேயே எடுத்தெறிந்து பேசினார்.

என்னை ஏனோ அவமானப்படுத்தியது போல் அப்பொழுது நான் உணர்ந்தேன். 30 வயதில் நின்ற ஓர் இளைஞனாக, எனக்குள் கடும் மனக் கொந்தளிப்பு. ஆனால் அதை நான் வெளிக்காட்டாமல், சரிங்க சார்… நான் அதைப் போடவில்லை என்று சொல்லி நிறுத்திக் கொண்டேன்.

அவரது பேச்சு வெகு நேரம் என் மனத்தைப் பாடாய்ப் படுத்தி எடுத்தது. ஆனால் பின்னர் ஒருவாறு சமாதானம் ஆனது மனம். அதாவது, சுகி சிவம் என்னை ஒன்றும் தனிப்பட்ட வகையில் அவமானப் படுத்தவில்லை; நான் அப்பொழுது என்னை முன்னிறுத்திக் கொள்ள வில்லை விகடன் பிரசுரத்தின் சார்பில் அதன் பொறுப்பாசிரியர் என்றுதானே பேசினேன்! இந்தப் பணியும் விகடனுக்கானது… எனக்கானது அல்ல…! சுகிசிவம் அவமானப்படுத்தியது என்னையல்ல! விகடன் பிரசுரத்தை! விகடன் குழுமத்தை! எந்த விகடன் குழுமம், சக்தி விகடன் தொடங்கும்போது, கௌரவ ஆசிரியராக சுகி சிவத்தை முன்னிறுத்தி அழகு பார்த்ததோ… அந்த விகடனைத்தான் அவர் அவமானப் படுத்தி பேசியிருக்கிறார்! … என்று அந்த அவமானப் படுத்தலில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வதற்காக என் மனத்தை ஒருவாறு சமாதானம் செய்து கொண்டேன்!

எனவே, சுகிசிவம் உரையை மட்டும் எடுத்து விட்டு மீதி 7 பேருடைய உரைகளை மட்டும் தொகுத்து கம்பனில் ராமன் எத்தனை ராமன் புத்தகமாக வெளிவந்தது!

அடுத்து இன்னோர் அனுபவம்! அப்போது நான் சக்தி விகடனில் பொறுப்பாசிரியர்! சுகிசிவம் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்தார்! இளைஞர் சக்தி என்ற பகுதியில்!

ஒரு கட்டுரையில் ஓரிடத்தில் விஷயங்கள் எனக்கு மிகவும் நெருடலாகவே இருந்தது. சிறுமையைச் சொல்லப் புகுந்த சுகி சிவம், காதி கிராமோத்யோக் பவன் கடலை உருண்டை மாதிரி என்று அளவில் சிறிது என்ற த்வனியில் சற்று கொச்சைப்படுத்தி கிண்டல் செய்திருந்தார்! இன்னோர் இடத்தில் சாதுக்களை கிண்டல் செய்திருந்தார்! அவை எனக்கு தரக்குறைவாகவே பட்டது.

ஆகவே அந்த இரண்டையும் எடிட் செய்து தூக்கி விட்டு ப்ரூப் அனுப்பி இருந்தேன்! அதை படித்துவிட்டு, அவர் “என்னுடைய எழுத்தை எடிட் செய்யும் அளவுக்கு எந்த பெரிய புத்திசாலி/ அறிவாளி சக்தி விகடனில் இருக்கிறான்” என்று தொலைபேசியில் படு கேவலமாக பேசினார்! அதையும் அப்போது நான் தாங்கிக் கொண்டேன்!
சக்தி விகடனில் நான்தான் முதல் ஆசிரியராக இருந்தேன் தெரியுமா? எனக்கு எழுத தெரியாதா? எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு தெரியும்? என் கட்டுரையில் கை வைப்பதாக இருந்தால் நான் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன். எந்தக் கொம்பனுக்கும் என் எழுத்தில் கை வைக்கும் உரிமை இல்லை” என்று சொல்லி போன் அழைப்பை துண்டித்துவிட்டார்.

ஆனால்… சற்று நேரத்தில் அவராகவே என் செல்போனுக்கு அழைத்தார். “நான் அப்படி பேசியிருக்கக் கூடாது! தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசி விளக்கம் கேட்கலாம்.” என்றார்.

இவற்றை நான் வெளியில் சொன்னதில்லை…! ஆனால் என் தனிப்பட்ட கூகுள் கேலண்டரில் இந்த இரு சம்பவங்களையும் பதிந்து, வருடம் தோறும் நினைவூட்டும் செட்டிங்ஸில் பதிந்து கொண்டேன்!

என் இதழியல் பணியில் இப்படி எத்தனையோ?! அவற்றையெல்லாம் நான் வெளியில் சொல்ல இயலாது! அப்படியே வெளியிடவும் முடியாது! ஆசிரியப் பொறுப்புக்கான ரகசிய காப்பை நான் மீறவும் முடியாது!

ஆனால்… 2004ல் நான் மஞ்சரி ஆசிரியராக இருந்த போது, இவரது சகோதரர் எம்.எஸ்.பெருமாள் (வானொலி பணியில் இருந்தவர்) தனது தந்தை சுகி சுப்பிரமணியம் குறித்து ஒரு கட்டுரையை கொடுத்திருந்தார். அதைப் படித்தபோது… பிரமிப்பு ஏற்பட்டது நிஜம்!

இவற்றால் நான் பட்ட சூடு, மீண்டும் ஒரு முறை சுகிசிவத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் எண்ணம் எழாமல் போனது! ஆனால் அதற்கு சோதனையாக மீண்டும் ஒரு வாய்ப்பு! கல்கியின் தீபம் பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்தேன்! அப்போது சுகிசிவம் நம் தீபத்தில் ஒரு தொடர் எழுதினால் நன்றாக இருக்கும்; கேளுங்களேன்… என்று கல்கி குழும ஆசிரியர் சொன்னார்! நான் வேண்டாமே என்று இழுத்தேன்! நமக்கு சரியாக வராது என்று சொல்லி.. சற்று தயங்கினேன்!

பின்னர் நம் பத்திரிகை உலக மூத்த நண்பரிடம் பேசிய போது இதைச் சொல்ல… அவரோ, நீ சுகி சிவத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். அவர் எங்கள் நட்பு வட்டத்தில் சிறந்த நபர். சிலருக்கு உதவிகள் செய்திருக்கிறார். உனது பழைய அனுபவங்கள் ஏதோ புரிந்துணர்வற்ற தன்மையில் இருந்திருக்கும். முதலில் இத்தகைய எண்ணங்களை உன் மனத்தில் இருந்து அகற்றி விட்டு… ஒரு தொடர் எழுத ஏற்பாடு செய் என்றார்.

அந்த மூத்த நண்பரின் மீதிருந்த மரியாதையால், அவர் சுட்டிக் காட்டியபடி, நம் மனம்தான் கோணலோ என்று எண்ணிக் கொண்டு… என் மனத்தை நேராக்கி… அவர் கூறிய படியே செய்தேன். அதன்படி சுகி சிவமும், சித்தம் அழகியார் என்ற தலைப்பில் தாம் எழுதுவதாக ஒப்புக் கொண்டார்.

அதன்படி முதல் ஆறு பகுதிகள் ஒழுங்காக சென்று கொண்டிருந்தன! ஏழாவது பகுதியில் என் ஸ்வதர்மத்துக்கு ஒரு சோதனை! மூன்று பக்க கட்டுரையில் இரண்டரை பக்கத்துக்கு… யேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் என்று… சில சம்பவங்களாக ஒரு நீதி நெறி போதனை! அதைப் படித்ததும் எனக்கு ஒரு ஷாக்! உடனே நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன் மின்னஞ்சலில்…

sukisivam1“சித்தம் அழகியார் பகுதி 7 ப்ரூப் அனுப்பப் பட்டுள்ளது.

தீபம் வாசகர்கள் – முழுவதும் இந்து ஆன்மிக அன்பர்களே.
ஒரு மகான் என்ற வகையில் இயேசு குறித்த சம்பவத்தை தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இருப்பினும், கூடுமானவரை இந்து, புத்த, ஜைன, சீக்கிய சூஃபி அடியார் சம்பவங்கள், கருத்துகளைத் தவிர்த்து மற்ற மதக் கருத்துகளைத் தவிர்க்கலாமோ என்பது அடியேன் கருத்து!” – என்று எழுதினேன்!

காரணம், ஓர் இதழின் வாசகர் வட்டம் எப்படிப்பட்டது, எதைப் படிக்கிறார்கள், எதை விரும்புகிறார்கள், எதைக் கொடுத்தால் நம் வாசகர் திருப்தியடைவார்கள், அவர்களை எப்படி மேலும் சிறப்புறச் செய்வது… – இதுதான் அந்த இதழின் ஆசிரியரின் பொறுப்பாக இருக்க வேண்டும், இருக்க முடியும்!

ஒரு முறை மஞ்சரியில் கிறிஸ்து குறித்த வெளிநாட்டு இதழில் வந்த அழகிய ஆங்கிலக் கட்டுரையைப் படித்து, அதன் தமிழாக்கத்தைப் போட… அதைப் பாராட்டி கடிதம் எழுதியவர்களை விட, கிறிஸ்துவ அமைப்புகளில், பிரசாரகர்கள் அனுப்பி வைத்த நோட்டீஸுகளும் சிறு சிறு பிரசுரங்களுமே மேஜையை நிரப்பி விட்டன. அதில் இருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தேன்!

எனது மின்னஞ்சலைப் படித்து விட்டு, சுகி சிவம் ஒரு பதில் கடிதம் அனுப்பியிருந்தார்….

தங்கள் கருத்தை அறிந்து கொண்டேன்! ஓர் இந்து மத இதழாசிரியர் என்ற முறையில் தங்கள் யோசனை சரியானதே. ஆனால் ஓர் ஆன்மீக அலைவரிசையில் ஆனந்த அனுபவத்தில் திளைக்கும் என்னால் இந்தச் சிறைப்படல் சாத்தியமில்லை. சிறகுகளை முறித்துக் கொண்டு சிறையில் அடைபடும் அவசியமும் எனக்கு இல்லை. இப்போது இந்த இதழுடன் கட்டுரையை நிறுத்திக் கொள்வோம். பின்னர் திருவருள் சித்தம் என்று அவர் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்!

இருப்பினும், அடுத்த இரு நாட்களில் அவராகவே தொடர்பு கொண்டு, “நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன்! கட்டுரையில் ஓவர் டோஸ் கொடுத்து விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது! இனி அவற்றைக் குறைத்துக் கொள்கிறேன்” என்றார்

ஆக இவற்றால் நான் சொல்ல வருவது… அவருடைய இயல்பே இதுதான்! துவக்க காலத்திலிருந்தே தன்னை ஒரு மதசார்பற்ற பேச்சாளராக முன்னிலைப் படுத்திக் கொள்ள… அனைத்து மதத்தினருக்கும் ஏற்றவராக தன்னை முன்னிலைப் படுத்த… அனைத்து மதக் கருத்துகளையும் கரைத்துக் குடித்தவராக தன்னை மக்களிடம் எடுபட வைக்க வேண்டும் என்பதற்காக… பெரும்பான்மை இந்துக்களின் மத்தியில் கிறிஸ்துவ இஸ்லாம் பிரசாரகராக தன்னை நிறுத்திக் கொண்டாரோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது! மற்றபடி அவர், ஹிந்து மத விரோதி என்றோ, கிறிஸ்துவத்துக்கு மாறி விட்டார் என்றோ இப்போது கூறப் படும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றது என்பேன். சுகிசிவம் – பெரும்பான்மை இந்துக்களிடையே காணப் படும் மதசார்பற்ற அறிவுஜீவித்தனக் கண்ணொட்டத்தின் ஓர் சாதாரண அடையாளம்!

மற்றபடி, சுகிசிவம் ஓர் ஆன்மீக பயிற்சியாளர் அல்லது கடை பிடிப்பாளர் அல்லர்! சுவாமிஜிக்கள் போல், அவர் ஞான யோகத்தையோ, கர்ம யோகத்தையோ, பக்தி யோகத்தையோ முழுதாய் உணர்ந்தவர் இல்லை! அவர் ஒரு பேச்சாளர் மட்டுமே! கடைப்பிடிப்பாளர் அல்லர்!

எனவே இந்த மார்க்கங்களை அவர் உள்ளூர உணர்ந்துகொண்டு அவற்றை வெளிப்படுத்தியதில்லை என்பேன். நாடக மேடை நடிகர்கள் எத்தனையோ பேர்… சினிமா நடிகர்கள் எத்தனையோ பேர்… கதாபாத்திரமாக ஒவ்வொரு காட்சியிலும் நடித்துவிட்டுப் போவார்கள். அதற்காக அவர்கள் நிஜ வாழ்க்கையில் அப்படியே வாழ்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.

சுகி சிவம் வகையறாக்களும் நாடகத் தன பேச்சாளர்களே! அவர் பேசியதை அவர் வாழ்நாளில் ஒன்றாவது தான் கடைப்பிடித்திருப்பாரா என்பது சந்தேகத்துக்கு உரியது!

அவர் உண்மையிலேயே தான் பேசியவற்றை தன் வாழ்வில் கடைபிடித்து இருப்பார் என்றால் அவரை எத்தனையோ பேர் பின்பற்றி இருப்பார்கள்! பொதுமேடையில் பேசுபவர்கள் நாலு பேர் கை தட்டுவதற்காக நாலைந்து ஜோக்குகள் செய்து சிலரை யோசிக்க வைத்து தங்கள் பர்ஸை நிரப்பிக் கொண்டு சென்றுவிடுவார்கள்! அப்படிப்பட்ட ஒரு நபர் சுகிசிவம்! அவரிடம் பக்தி மார்க்கத்தின் உள்ளர்த்தத்தை, ஞான கர்ம மார்க்கங்களின் சிறப்பியல்புகளை எதிர்பார்த்தல் வீண்.

இதைச் சொல்லக் காரணம், அத்திவரதர் குறித்து அவர் இப்போது கிளப்பியிருக்கும் மோசமான சொல்லாடல்கள்!

பக்தனின் லட்சணம் – பக்தியின் லட்சணம் என வெறும் எழுத்தில் வடித்து விட முடியாது! சாமிக்கு பவர் இருக்கா என்று கேட்டுவிட முடியாது! ஆனால் இவர் கேட்கிறார். அப்படி என்ன சார் பவர் இருக்கு? என்று இவர் கேட்பதற்கு என் பதில் இதுதான்!

அத்திவரதருக்கு என்ன பவர் என்று, அவர் அடியார்கள் காட்டுவார்கள்!

நெல்லைச் சீமையில் தென் திருப்பேரை பெருமாள் திருப்பெயர் மகரநெடுங்குழைக்காதர். அவரின் அடியாராய் இருந்தவர், பஞ்ச காலத்தில் தம் நிலத்துக்கு வரி கட்ட வழியின்றி, ஒரு முறை சிறைப்பட்டார். சிறையில் இருந்து நாளொரு வெண்பா வீதம் பாடிக் கொண்டிருந்தார். ஒரு வெண்பாவில் அப்போதைய ஆட்சியாளர் வடமலையப்ப பிள்ளையின் பெயரையும் உச்சரித்தார். அதைக் கேட்ட காவலாளி, அதனை வடமலையப்ப பிள்ளையிடம் சொல்ல… அவரும் அடித்துப் பிடித்து ஒடோடி வந்து, இவரது பாடல்களையும் மனத்தையும் உணர்ந்து, தமது ஆளூகையில் தவறு நேர்ந்துவிட்டதாக மனம் வருந்தி, அவரை சிறையில் இருந்து விடுவித்து, மன்னிப்பு வேண்டினார்.

இது மகரநெடுங்குழைக்காதர் பாமாலை என்று இரு நூற்றாண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற பனுவலாயிருந்தது.

இதனைத் தொகுத்தார் உ.வே.சா! இது பின்னாளில் புத்தகமாகத் தொகுக்கப் பட்ட போது, அதற்கு முன்னுரை எழுதினார், அந்த மண்ணின் மைந்தரான பி.ஸ்ரீ.

முன்னுரையின் கடைசி இரு வரிகள்… பாமாலை போன்ற பக்திப் பனுவல்கள் இல்லாமற் போனால், கோயில் கருவறையில் தெய்வம் வெறும் கல்லாகவும் செம்பாகவுமே நின்று கொண்டிருக்கும்! -என்று!

அத்திவரதருக்கு என்ன ‘பவர்’ என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், பக்தர்கள் காட்டுவார்கள்! அகங்காரமும் மமதையும் கொண்ட மனத்தில் ‘பவர்’ புவராகத்தான் தெரியும்!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe