Home இலக்கியம் கவிதைகள் காகிதத்தில்தான் இனி காட்டுவோமோ?!

காகிதத்தில்தான் இனி காட்டுவோமோ?!

elephant in water
elephant in water

இன்று…
உலக சுற்றுச் சூழல் நாளாம்…
ஏதோ நாங்களும்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
கொண்டாடுகிறோம்…
மன்னித்துவிடு சகோதரி…

குரூர மனங்களின் கும்பலுக்குள்ளே
குற்றுயிராய் வாழ்க்கை நடத்துகிறோம்
நாங்களுமே…!
எங்களின் கோபமெல்லாம்…
ஆரண்யத்தின் அழகைக் குலைத்து
அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும்
பேராசைக்காரர்கள் மீதே!

அவர்கள்…
காட்டில் திரியும் ‘கரிணி’யை
வயிறுப் பசி தீர்க்க…
வயல்வெளிக்கு வரவைத்த
மூல காரணர்கள்…!

பசியின் பதைபதைப்பை
ஆற்றிக் கொள்ளுதற்காய்
அங்கங்கே வாய்வைத்து…
உன் வாழ்வையே தொலைத்தனையே…!

இவர்கள் ..
எதற்கும் அஞ்சாத அசகாய சூரர்கள்..
ஒற்றை மனிதராய் ஒண்டியிருந்தால்…
ஒழுங்காக இருப்பார்கள்…
அடுத்த மனிதருடன் அண்டியிருந்தால்…
அழிவையே செய்வார்கள்….

அன்னாசிப் பழம் என்ன செய்தது?!
ஆவென வாய் திறந்த “அதவை”யின் வயிற்றினுள்
அமிலம் பாய்ச்சி அதிர வைத்தானே..!

வனத்துறைக்கு செய்தி வந்த போதோ…
‘வரவை’ தன் வயிற்றில்
வளர்ந்த பிஞ்சுடன் மாண்டே போனாள்..!

ஒற்றை பழத்தை உண்ண முயன்று
இரண்டு வாரங்களாய் எதையும் உண்ண முடியாமல்
சகோதரீ…
உன் வயிற்றையும் காயப் போட்டாய்
உன் வயிற்றினுள்ளும் காயப் போட்டாய்!

உலக சுற்றுச்சூழல் நாளாம்..
இன்றாவது விழிதிறந்து பார் மனிதா…

பூமித்தாயின் மடியில்
அனைத்து உயிரினங்களும்
அனுபவிக்க இடம் கொடு,
வாழு… வாழ விடு!

கர்ப்பிணியாய் மாண்டுபோன ‘அத்திணி’க்கு
அதுவே நாம் செய்யும் சிரத்தாஞ்சலி!

நாளைய தலைமுறைக்கு
காகித விலங்குகளைக் காண்பிக்க வேண்டிய
கட்டாயம் ஏற்படாமல் இருக்கட்டும்!

  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version