Home இலக்கியம் கண்ண அமுதாவான்

கண்ண அமுதாவான்

panduranga-vittal
panduranga vittal

கவிதை: மீ.விசுவநாதன்

பாலில் மோரும் வெண்ணையுமே
பதுங்கி இருக்கும் தெரியாது
மாலின் உருதான் என்றாலும்
மனதிற் கறியும் அறிவேது !

சின்னக் குழந்தை என்றாலும்
செய்யும் லீலை பலகோடி
என்னைத் திருடும் அவன்கருணை
இருளென் உள்ளம் உணராது !

புல்லாங் குழலின் இசையாலே
புரட்டி எடுக்கும் கலைவாணன்
பல்லாங் குழியாம் காலத்தில்
பதமாய் ஆடும் இளங்கண்ணன் !

அவனுக் கென்று தருவதற்கு
அகிலம் முழுக்கப் பொருளேது
இவனுக் குள்ளே அழுக்கிருக்கு
அதனைக் கொள்வான் வெளுப்பதற்கு !

பசுவும் பச்சைப் புல்வெளியும்
பாம்பும் நச்சும் அவனாவான்
விசுவம் முழுக்க நிறைவாக
விளங்கும் கண்ண அமுதாவான் !

கண்ணன் கோவில் எனக்காகக்
கால மெல்லாம் திறந்திருக்கும்
எண்ணப் பறவை வடிவாக
எளிதாய்ச் செல்ல வழியிருக்கும்!

(இன்று – 11.08.2020 – கண்ணன் பிறந்த நாள்)

ஓவியம்: வேதா

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version