Home இலக்கியம் கவிதைகள் பூங்கனல் பழக்கிய சாமரம்!

பூங்கனல் பழக்கிய சாமரம்!

கவிதை: சந்தக்கவி சந்தர் சுப்ரமணியன்

bharathi
bharathi

செந்தமிழ் நாவதன் தீந்தமிழ்ச் சாரலில்
திளைக்கின்ற புல்வெளி நான்! – எனில்
சிறையுறும் சொல்வெளிதான்!
வந்தெழும் வார்த்தைகள் வையகம் கேட்குமுன்
வளைக்கிறேன் ஓசையை நான்! – அவன்
வளர்க்கின்ற மீசையே நான்!

பாவலன் பாரதி பாவினில் பூங்கனல்
பழக்கிய சாமரம்நான்! – தமிழ்
பதுக்கிய தீஞ்சரம்நான்!
தூவிடும் பூந்தமிழ்த் சொற்களின் தென்றலைத்
தொகுத்திடும் சாளரம்நான்! – அவன்
தூய்தமிழ்த் தூறலில்நான்!

தேனடைச் சூழலில் தோயுமப் போதுமென்
தேகத்தில் ஏதுகறை? – தமிழ்த்
தேனெனில் ஏதுநரை?
கான்எனில் மோதிடும் காவலன் மூச்சினில்
கருத்தது நான்சரிதான்! – அவன்
கருத்(து)அது தீப்பொறிதான்!

ஆணவத் தாற்சிரம் அடைந்த பாகையை
அடக்கிடச் சுருட்டிவைத்தான்! – எனை
அடிக்கடி முறுக்கிவைத்தான்!
மாணவ நாட்களில் மாநகர் காசியில்
வந்ததிப் பாகையன்றோ! – நான்
வளர்த்தவன் பாகமன்றோ!

வீரிய வார்த்தைகள் வேண்டுமப் போதெனை
விரலினால் மீட்டுகின்றான்! – பின்
வெண்தாளில் தீட்டுகின்றான்!
தூரிகை நான்!எனைத் தூண்டியே பன்னிறம்
தொட்(டு)அவன் பண் அமைப்பான்! – எனைத்
தொட்டஅன்பன் அவன்தான்!

வீச்சுடன் வேர்விடும் வெந்தணற் சொற்களின்
வெம்மையை நான் கணித்தேன் – அதை
விதையிலே நான் தணித்தேன்!
மூச்சினில் ஈற்றெது முன்னறிந் திருந்திடின்
முழுவதும் தடுத்திருப்பேன்! – அவன்
முடிவினைத் தவிர்த்திருப்பேன்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version