Home இலக்கியம் கவிதைகள் வீரத்துறவிக்கு வீரவணக்கம்!

வீரத்துறவிக்கு வீரவணக்கம்!

gopalji-1
gopalji 1

கல்லாகக் கிடந்த தமிழகம் உம்மால்
வில்லாக வளைந்ததைக் கண்டோம் அய்யா
சொல்லாலும் செயலாலும் ஹிந்து உணர்வினை
மல்லுக் கட்டியே வளர்த்தீர் அய்யா

பொல்லாத நாத்திகம் பொசுங்கியது உம்மால்
நல்லதாம் ஆத்திகம் நிமிர்ந்தது உம்மால்

அல்லாத அடாவடிகளை அயராமல் எதிர்த்திட்டாய்
அன்பென்று ஏய்ப்போரை அடையாளம் காட்டிட்டாய்

திலகரின் மறுபதிப்பாய் விநாயகரை வலம்விட்டாய்
தித்திக்கும் ஹிந்துத்வம் திசையெல்லாம் வளர்வித்தாய்

தலையிலே வெட்டுண்டும் தலைநிமிர்ந்து உழைத்திட்டாய்
தன்மான உணர்வதனை தமிழரிடம் விதைத்திட்டாய்

தாய்போன்ற நேசத்துடன் தொண்டர்களை அணைத்திட்டாய்
தந்தைபோல் தம்மக்கள் வளர்ச்சிக்கே வாழ்ந்திட்டாய்

தள்ளாத வயதிலும் தளர்ந்துபோய் இறக்கவில்லை
நில்லாது பணிசெய்து நிம்மதியாய் நீபிரிந்தாய்

சொல்காத்த ராமனும் சொல்லுரைத்த கோபாலனும்
சேர்ந்தே பிறந்தவன்நீ சேர்ந்திட்டாய் அவருடனே

வீரத் துறவியே விடைபெற வில்லைநீ
விடையேறும் பெருமானுடன்
உறைகின்றாய் எம்மனத்தில்.

கவிதை: பத்மன்

gopalji1

இரங்கற்பா!

  • புலவர் இரா இராமமூர்த்தி.

பொறியியலும் உலகியலும் கற்ற ஞானி!
பொதுத்தொண்டால் சமயத்தை வளர்த்த தந்தை!

அறிவியலில் ஆன்மிகத்தை இணைத்த வேந்தர்!
அனைவருக்கும் தொண்டுபுரி ஆண்மையாளர்!

சிறிதளவும் கலங்காதே போரா டென்றே
செல்லுமிடந் தோறும்சொலும் தேசபக்தர்!

வெறியின்றி நெறிகாட்டும் மேன்மை இந்து!
வீணருக்கும் அறிவுறுத்தி அன்பைக் காட்டி,

குறிக்கோளில் விலகாமல் ஹிந்து ராஷ்ட்ரக்
கொடியேந்திப் போராடும்
கொள்கைக் கோமான்!

கடமைகளில் வழுவாமல்
கட்டுப் பாட்டைக்
காத்துயர்ந்தே மதவழிபா டியற்றும் சான்றோர்!

திடமனத்தார், சிறைப்படினும் கலங்கா நெஞ்சர்!
தெருவெங்கும் நாம்ஹிந்து! என்றே கூறி

அடம்பிடித்தே பக்திநெறி வளர்த்த அண்ணல்! அந்நியரைக் கனவினிலும் எதிர்த்த தீரர்!

குடத்திலிட்ட விளக்கினையே குன்றில் ஏற்றிக்
குவலயத்தில் இந்துமத ஜோதிகாட்டிக்

கடமைதனை நன்றாற்றித் தொண்ணூற்
றைந்தைத் தழுவிடுமுன்
இறைவனடி சார்ந்தா ரம்மா!

இராம.கோபா லன்என்னும் எழுச்சி நாமம்
என்றென்றும் இந்துமத விளக்கை ஏற்றி த்

தராதலத்தின் தாரகமாய் விளங்கும் அம்மா!
தலைவணங்கி அவர்வழியில் தொடர்வோம்,வாரீர்!

பராசக்தி திருவடியைச் சேர்ந்த அண்ணல்
பரிவுமிகக் காட்டியநல்
வழியில் சென்றே

விராவியகன் றுயர்கின்ற இந்து ராஷ்ட்ரம்
மேலோங்க நாமுயர்ந்தே
விளங்கு வோம், ஓம்!

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version