Home இலக்கியம் கவிதைகள் எது இல்லையோ… அதுவே உண்டு..!

எது இல்லையோ… அதுவே உண்டு..!

இல்லையும் உண்டும்!

கவிதை : பத்மன்

குளம் எதுவும் குளிப்பதற்கு இல்லை
மரம் எதுவும் நிழல்தர இல்லை
வயல் எதுவும் விளைச்சலுக்கு இல்லை
வாழ்க்கை இங்கே வாழ்வதற்கு இல்லை.

காற்று எங்கும் கசடின்றி இல்லை
குடிநீர் எங்கும் கழிவின்றி இல்லை
உண்பொருள் எங்கும் கலப்பின்றி இல்லை
உலகம் இங்கே உறைவதற்கு இல்லை.

சொந்தங்கள் எதுவும் தோள்தர இல்லை
சுற்றங்கள் எதுவும் சுமைதாங்க இல்லை
நட்புகள் எதுவும் நடிப்பின்றி இல்லை
மனிதரிடம் இங்கே மானுடம் இல்லை.

பெரியோர்கள் இடத்தே பெருந்தன்மை இல்லை
இளைஞர்கள் இடத்தே இன்முகம் இல்லை
குழந்தைகள் இடத்தே குதூகலம் இல்லை
குவலயம் இங்கே குடிவாழ இல்லை.

***

குளம் காத்தால் வளநீர் உண்டு
மரம் வளர்த்தால் நிழலும் உண்டு
வயல் செழித்தால் விளைபயன் உண்டு
வாழ்க்கையும் இங்கே வாழ்வதற்கு உண்டு.

காற்று எங்கே கசடின்றி உண்டோ
குடிநீர் எங்கே கழிவின்றி உண்டோ
உண்பொருள் எங்கே கலப்பின்றி உண்டோ
உலகம் அங்கே உறைவதற்கு உண்டு.

சொந்தங்கள் எங்கே தோள்தர உண்டோ
சுற்றங்கள் எங்கே சுமைதாங்க உண்டோ
நட்புகள் எங்கே நலந்தர உண்டோ
மனிதரிடம் அங்கே மானுடம் உண்டு.

பெரியோரிடம் எங்கே பெருந்தன்மை உண்டோ
இளையோரிடம் எங்கே இன்முகம் உண்டோ
குழந்தையிடம் எங்கே குதூகலம் உண்டோ
குவலயம் அங்கே குடிவாழ உண்டு.

©️ பத்மன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version