ஜூன் 26 – மபொசி ஐயா பிறந்தநாள் வாழ்த்துப்பா
– பத்மன் –
தமிழை வைத்துப் பிழைக்கவில்லை
தமிழைப் பிழைக்க வைத்திட்டார்,
திராவிடப் புளுகைத் தோலுரித்தார்
தெய்வத் தமிழுக்குத் தோள்கொடுத்தார்.
அச்சுக் கோர்க்கும் பணிபுரிந்தார்
நச்சு மனிதரைப் பணியவைத்தார்,
பிச்சுப் பிடித்த கருத்துகளைப்
பிச்சுப் போட்டுப் புரியவைத்தார்.
சிலம்பைப் பழித்த சிறியோரைச்
சிலிர்த்தே எழுந்துச் சிலம்பிட்டார்,
சிலிம்பின் புகழை உலகெங்கும்
சிறப்பாய் ஊன்றி நிறுத்திட்டார்.
வடவேலவன் குன்றம் மீட்டிட்டார்
தென்குமரியும் சேர்ந்திட போரிட்டார்,
தமிழன் உணர்வதை உயர்த்திடவே
தமிழரசு கொண்டு உழைத்திட்டார்.
பாரதி புகழைப் பரப்பிட்டார்
பாரதப் பெருமை போற்றிட்டார்,
தமிழன் தேசிய வாதியென்றே
தரணியில் ஓங்கி மொழிந்திட்டார்.
தமிழர் தம்மை திசைதிருப்பும்
தரமற்ற போக்கைத் தடுத்திடவே
தன்மானத் தமிழர் மபொசி
தந்திட்ட வழியில் செல்வோமே!
–