வாயு தேவன்
நெஞ்சில் ஈரம் கொண்டு
மண்ணின் மலையுச்சியில்
பனியாய்க் கடினப்படுத்துகிறான்.
சூரியதேவன்
சூட்டைக் கிளப்பி அக்னிப் பிழம்பால்
கடினப் பனியைக் கரைத்து
கடவுள் பணி செய்கிறான்.
ஜலதேவதை
உருகிய நீராய் உருக்கொண்டு
இமயத்தை அரித்து
நதியெனக் கடந்து வருகிறாள்.
பாறைகள் கற்களாகி…
கற்கள் சிறுகற்களாகி…
சிறுகற்கள் துகள்களாகி…
துகள்கள் மண்துகளாகி….
மண்துகள்களெல்லாம்
நீரில் கலந்து கரைந்து…
பாரத தேசத்தின்
பசுமை வெளியெல்லாம்
நம் பாக்கியத்தால் வந்தது!
இமயத்தின் வளமை
வண்டலாகி…
நதிப்படுகையில்
மண்ணை வலுப்படுத்தி….
வயிற்றுப் பசி தீர
வழி கொடுத்து….
இப்போது
உள் மனம் உச்சரிக்கிறது…
ஓம்
சந்நோ மித்ர, சம் வருண: |
சந்நோ பவத் வர்யமா |
சந்ந இந்த்ரோ ப்ரஹஸ்பதி: |
சந்நோ விஷ்ணு ருருக்ரம: |
நமோ ப்ரஹ்மணே |
நமஸ்தே வாயோ |
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி |
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி |
ரிதம் வதிஷ்யாமி |
ஸத்யம் வதிஷ்யாமி |
தன் மா மவது |
தத் வக்தார மவது |
அவது மாம் |
அவது வக்தாரம் |
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி:|
மித்ரன் நமக்கு நன்மை செய்வாராக…
வருணன் நமக்கு நன்மை செய்வாராக…
அர்யமான் நமக்கு நன்மை செய்வாராக…
இந்திரனும் ப்ரஹஸ்பதியும் நமக்கு நன்மை செய்வார்களாக…
எங்கும் நிறைந்த விஷ்ணு நமக்கு நன்மை செய்வாராக…
பிரம்மனே… உனை வணங்குகிறேன்.
வாயுதேவா… உனை வணங்குகிறேன்.
நீங்களே கண்கண்ட தெய்வங்கள்.
கண்கண்ட தெய்வமென உங்களைப் போற்றுகிறேன்.
ரிதம் எனப் போற்றுகிறேன்.
சத்யம் எனக் கூறுகிறேன்.
அந்தப் பரம்பொருள் எமைக் காப்பாராக.
அவர் ஆசிரியரைக் காப்பாராக…
எமைக் காப்பாராக…
ஆசிரியரைக் காப்பாராக!
எங்கும் ஓம் எனும் ஒலி நிறையட்டும்!
எங்கும் அமைதி நிலவட்டும்!