வீரம் விளைந்த மண்
ஈரம் நிறைந்த மனம்!
அங்கே
போர்க் களத்தில் போராடும் ராணுவவீரன் போல்
இங்கே
நீர்க் களத்தில் நின்றாடும் காவலனின் நிதர்சனம்!
துப்பாக்கி ரவைகள் துளைத்தாலும்
துயர் மறந்து ஆயுதத்தை
தயக்கமின்றித் தாங்கியபடி
முன்னோக்கி நடைபோடும் கால்கள்
அவனது…!
அருவிநீர் அம்புகளாய்ப் பாய்ந்தாலும்
அதை சகித்து சிறுகழியை
சந்தோஷமாய் சுமந்தபடி
கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் கரங்கள்
இவனது…!
குண்டுகளின் சத்தத்தில் குவிந்திருக்கும்
அவன் நெஞ்சம்!
அருவிநீரின் இரைச்சலில் இணைந்திருக்கும்
இவன் இயக்கம்!
போராடும் களத்திலும் அவன்
இமயத்தின் இயற்கையை ரசிக்கிறான்…
நீராடும் அருவியிலும் இவன்
நிலைமையின் இருப்பை ரசிக்கிறான்…
பயங்கர வாதிகளின் பயங்கரத்தில் இருந்து
மண்ணையும் மக்களையும் காக்கும் அவனுக்கும்
திருட்டுக் கூட்டத்தின் முரட்டுத்தனத்தில் இருந்து
பயணியையும் தங்கத்தையும் காக்கும் இவனுக்கும்
வேறுபாடு ஏதும் உண்டோ?
– செங்கோட்டை ஸ்ரீராம்