இதில் உள்ள முதிர்ச்சியற்ற தன்மை இப்போது எனக்குப் புரிகிறது… இருந்தாலும் நம் அறியாமையை இப்போதும் எண்ணிப் பார்த்தால்… ம்ம்ம்… ஒரு சுவாரஸ்யம்தான்!!!
கம்பனைப் பாடுவேன்!
கம்பநாட் டாரே கவிதயின் வேந்தே
எம்மவர் எளியவர் எவருமே போற்றும்
பாரதப் புகழைப் பறைசாற் றிடும்ஓர்
வீரத் திருமகன் வீரிய வித்தகன்
பார்முழு தேத்தும் பாரதப் புதல்வன்
பார்ப்பதற் கெளியன் பரதனின் தமயன்
எம்குல இறைவன் ராமனின்
வாழ்வை வளமாய் வழங்கிய தேவே!
வெண்ணெய் நல்லூர் வள்ளல் தயவால்
மண்ணது சிலிர்க்கும் மகிமைக் கதையால்
தெய்வத் தீந்தமிழ் தேனாய்ப் பாய்ந்திட
உய்வு பெற்றே உயர்ந்ததும் தமிழே!
கலைமகள் அருளைக் கவிவழி பெற்றே
சிலைபோல் சமைந்த சிறியரும் தமிழ்க்கவித்
திறத்தில் சிறந்து தழைக்க
சரஸ்வதி அந்தாதி தந்த தேவே!
கம்பன் என்றால் கற்பனைக் களஞ்சியம்
நம்போல் பலரும் நவில்வது கேளீர்
முப்பெரும் வேந்தரும் முழுதாய் விரும்பும்
ஒப்பிலா வித்தகர் ஒளிர்வது கவியில்!
அன்றலர் மலர்க்கு அண்ணல் விழிதனை
சொன்னதே போதும் சோற்றுக் கொருபதம்
காவிரிப் பெருக்கு அடங்க
பாவிரித் தருளிப் பாடிய தேவே!
ராமனின் கதையை ரங்க நாதனின்
தாமரை விழியாள் சந்நிதி முன்னே
அரங்கேற் றிடும்முன் அற்புதக் கவியாய்
அரவில் துயிலும் அரங்கன் சொல்லால்
நம்மாழ் வாரை நயமுடன் போற்றி
அம்பாய் வந்தது அந்தா தியுமே!
கம்பநின் ராம பக்தியில்
எம்மவர்க் கொருதுளி தந்திடும் தேவே!!
==========================
இதுவும் 2001ம் ஆண்டு டைரியில் எழுதிவைத்ததுதான்!