ஆதிசேஷன் வம்சத்து ஆலகாலம் உண்டாய்
அமிர்தம்தான் எல்லோர்க்கும் ஆசியுடன் தந்தாய் !
நாதியிலா பக்தையிடம் நாடிப்போய் நின்றாய்
நல்லபிட்டு நீசுவைத்து நாநிலத்தைக் காத்தாய் !
வாதிடவே செய்தங்கு வன்தொண்டர் நட்பை
வசமாக்கிச் சுந்தரமாய் நீபாட வைத்தாய் !
ஏதிதிவும் இல்லாத என்னுள்ளும் கொஞ்சம்
இன்பமுடன் நற்கவிதை எப்போது கேட்ப்பாய் ?
வெள்ளமென்றும் தீவறட்சி வேகமென்றும் ஆகி
வேதனையைத் தாராமல் வேலியிட்டுக் காக்கும்
உள்ளமுனக் குண்டென்று ஊர்முழுதும் பேசி
ஓம்நமச்சி வாயவென உன்பாதம் போற்றும் !
மெள்ளமெள்ள மாணிக்க வாசகத்தில் தோய்ந்து
மேனித்தீ சூட்டினையே வெண்பனியாய் ஏற்றாய்
கள்ளனிவன் தீந்தமிழைக் கற்கண்டாய்க் கொண்டு
காலமெலாம் காப்பாய்முக் கண்ணபெரு மானே.
இன்று (07.09.2018) பிரதோஷம்)
கவிதை: மீ.விஸ்வநாதன்